அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கைலாசநாதர்
அம்மன் : சவுந்திர நாயகி
ஊர் : ராஜபதி
மாவட்டம் : தூத்துக்குடி
ஸ்தல வரலாறு:
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.
உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பினார். அக்காலத்தில் அரசர்கள் இத்தல ஈசனை வணங்கிய பின் போரில் வெற்றி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை. நவகைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது “இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்” ஆகும். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது. அழிந்த கோயிலைப்பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்றுகூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர். சிவனடியார்களின் பெருமுயற்சியாலும், பங்களிப்புடனும் அழிந்து போன இப் புனித ஸ்தலம், 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப்பெற்றுள்ளது. இதன் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது.
கோயில் சிறப்புகள்:
- இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் மட்டுமே இருக்கிறது. இங்குள்ளலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது. லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள்.
- அகத்தியரின் வழிகாட்டுதலின் படி 9 இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்கு முகத்தில் நீராடி வழிபட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் முனிவரின் முன்பாக தோன்றி முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார்.
- இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.
- மூலவர் கைலாச நாதர் லிங்க உருவத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்ர வடிவங்கள் உள்ளன.
- சிவனுக்கு ஆஷூதோஷ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள் எதை விரும்பி சிவனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார் என்பதாகும்.
- அம்பாள் சவுந்திர நாயகி சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்பாள் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்தவளாகக் அருளுகிறாள்.
- சிவனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
- ஊர் இராஜபதி. தலமரம் நெல்லி. தீர்த்தம் பாலாவி.
- இங்கு சிவனுக்கு ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என 5 முகங்கள் இருப்பதினால் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர்.
- பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது.
- கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.
- விநாயகர் 63 நாயன்மார்கள் ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் வள்ளி தெய்வயானை சமேத முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
- கைலாச நாதர் அம்பாள் நித்ய அக்னி எனப்படும் விநாயகர் ஆகிய மூவருக்கு மட்டும் மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடக்கிறது.
- சுமார் 4 1/2 அடி உயரத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இவருக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன.
- முற்காலத்தில் கட்டப்பட்ட பழைய கற்கோவில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகச் சிதிலமடைந்து விட்டது. இந்தக் கோவிலில் இருந்த விக்ரஹங்கள் மற்றும் பொருட்கள் பல இடங்களுக்கு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இங்கிருந்த நந்தி விக்கிரகம் தற்போது ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோவில் முறையான பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாகப் பாழடைந்த நிலையில் இருந்தது. தற்போது உள்ள கோவில் இக்கால நவீன கட்டமைப்பு மூலம் கட்டப்பட்டது ஆகும்.
திருவிழா:
திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகை சோம வாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
திறக்கும் நேரம்:
காலை 7.00 முதல் 12.00 வரை,
மாலை 4.00 முதல் 8.00 வரை. ஞாயிறன்று மதியம் 1.30 மணி வரை.
முகவரி:
அருள்மிகு கைலாச நாதர் திருக்கோயில்
ராஜபதி- 628 207
துாத்துக்குடி மாவட்டம்
போன்:
+91 97873 82258
அமைவிடம்:
திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள குரும்பூருக்கு அருகே உள்ளது இராஜபதி திருக்கோவில். இங்குச் செல்லத் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் அடிக்கடி உள்ளன. குரும்பூரில் இறங்கி அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் கோவிலை எளிதாகச் சென்றடையலாம்.