February 06 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

  1. அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     உக்தவேதீஸ்வரர், சொன்னவாரஅறிவார்

அம்மன்         :     அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்தநாயகி

தல விருட்சம்   :     உத்தாலமரம், அகத்தி

தீர்த்தம்         :     பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள், வடகுளம்

புராண பெயர்    :     திருத்துருத்தி, குற்றாலம்

ஊர்             :     குத்தாலம்

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப்பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்துவந்த பரத மாமுனிவருக்கு அவர் விரும்பியபடி, இறைவன் விருப்பப்படி, வேள்விக் குண்டத்தில் அம்பாள் வேள்விக் குண்டத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்துகொள்ளும்பொருட்டு, தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு ‘சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற, அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இறைவன் தாமே சொல்லிய விதியின்படி திருமணம் செய்துகொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன்படியே நடந்துகொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற ஒரு வகை அத்தி மரம். அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்துகொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே, இத்தலம் உத்தாலவனம் என்று பெயர்பெற்று, பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும் இத்தலம், தேவாரப் பதிகம் பாடப்பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும்.

பொன்னின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்

துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

என்று குறிப்பிடுவதால் இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். அப்போது தான் திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால் தாமரைத் தடாகத்திற்கு சுந்தர தீர்த்தம் என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில் சுந்தரருக்கு கோயில் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • காவிரி ஆற்றின் இடையில் துருத்திக் கொண்டு இருப்பதால் இத்தலம் ‘திருத்துருத்தி’ என்று அழைக்கப்படுகிறது.

 

  • அத்தி மரத்தின் ஒருவகையான உத்தால மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டுள்ளதால் இத்தலம் ‘குத்தாலம்’ என்று வழங்கப்படுகிறது.

 

  • மூலவர் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கியபடி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் உத்தால ஈசுவரர் எனவும், உத்தவேதீஸ்வரர் எனவும், சொன்னவாறறிவார் பெருமான் எனவும் புகழப்படுகிறார்.

 

  • ராஜகோபுரம் அருகிலேயே தெற்கு பார்த்த தனிக் கோவிலில் அம்பிகை வீற்றிருக்கிறார். நின்ற கோலத்தில் காட்சி தரும் அன்னையை, அரும்பன்ன வனமுலை நாயகி என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

 

  • ஆலயம், ஊருக்கு நடுவில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது.

 

  • அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் “துணைவந்த விநாயகர்” என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம்.

 

  • கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார்.

 

  • அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார்.

 

  • காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பேராக் கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள் செய் திருத்துருத்தி இன்பச் செழிப்பே” என்று போற்றி உள்ளார்.

 

  • உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து “”நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு” என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, “”இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,” என்று கூறினார்.

 

  • சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.

 

திருவிழா: 

மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12: 30 மணி வரை.

மாலை 5 மணி முதல் 9 மணி வரை.

 

முகவரி:  

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்,

குத்தாலம் (திருத்துருத்தி)-609 801.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 4364-235 225, 94878 83800

 

அமைவிடம்:

மயிலாடுதுறையிலிருந்து மேற்கே 10கி.மீ தொலைவில் உள்ளது குத்தாலம். மயிலாடுதுறையிலிருந்து திருமணஞ்சேரி செல்லும் பஸ் களில் செல்லலாம்.

 

 

Share this:

Write a Reply or Comment

seven + fourteen =