February 05 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பொன்பதர்க்கூடம்

  1. அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சதுர்புஜ கோதண்டராமர்

தாயார்          ;     சீதா பிராட்டி

தீர்த்தம்         :     தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம்

புராண பெயர்    :     பொன்பதர்க்கூடம்

ஊர்             :     பொன்பதர்க்கூடம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக்காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 

ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார். மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர். பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் “பொன் உதிர்ந்த களத்தூர்’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் “பொன்விளைந்த களத்தூர்’ என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே “பொன்பதர் கூடம்’ என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்றுதான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.

 

  • பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சி என்கிறார்கள்.

 

  • இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு அருள்பாலித்து வருகிறார். உற்சவமூர்த்தியும் அதே திருக்கோலத்துடன் ராமகாவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.

 

  • இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.

 

  • சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம்.

 

  • ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.

 

  • தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயனரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

 

  • இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

 

  • லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.

 

  • இந்த ஆலயத்திற்குள், ‘சேஷதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.

 

  • கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள்.

 

  • பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.

 

  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம்.

 

  • ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம்.

 

  • அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

 

திருவிழா:

தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 7 மணி வரை,

மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்

பொன்பதர்கூடம் – 603 405.

காஞ்சிபுரம் மாவட்டம்..

 

போன்:    

+91- 44 – 2744 1227, 97890 49704

 

அமைவிடம்:

செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

13 − two =