February 03 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மன்னார்குடி

  1. அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வாசுதேவப்பெருமாள்

உற்சவர்        :     ராஜகோபாலர்

தாயார்          :     செங்கமலத்தாயார், படிதாண்டாப் பத்தினி

தல விருட்சம்   :     செண்பகமரம்

தீர்த்தம்         :     9 தீர்த்தங்கள்

புராண பெயர்    :     ராஜமன்னார்குடி

ஊர்             :     மன்னார்குடி

மாவட்டம்       :     திருவாரூர்

 

ஸ்தல வரலாறு:

குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார். அவருக்கு ’கோபிளர்,’ ‘கோபிரளயர்’ என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன் நாரயணணை நோக்கி கடுமையான தவமியற்றி வந்தனர். அவர்களுக்கு காட்சியளித்த பெருமாள், அவர்கள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் அவர்கள் விரும்பும் மோட்சம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அதன்படியே ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராடியவாறு துவாரகை நோக்கி பயணித்தனர். அப்படி செல்கையில் வழியில் நாரதரை சந்தித்தனர். இவர்களது பயண நோக்கத்தை அறிந்த நாரதர், துவாரகையில் கண்ணபிரான் தான் வந்த  நோக்கத்தை முடித்துக் கொண்டு மீண்டும் விண்ணுலகம் சென்றுவிட்டதாக கூறியதைக் கேட்ட இரு சகோதரர்களும் மூர்ச்சையடைந்தனர். அவர்களது பக்தியை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்த நாரதர், அவர்களை செண்பகாரண்யம் சென்று அங்கு ஹரித்ராநதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார். இதை கேட்டு ஆனந்தமடைந்த இருவரும் அவர் சொல்படி செண்பகாரண்யம் சென்று தவமிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணராக காட்சியளித்த கண்ணபிரானிடம் அவர் துவாரகையில் நடத்திய கிருஷ்ணலீலைகளை நடத்தி காட்ட சொல்லி வேண்டினர். அதனால் கிருஷ்ணாவதாரதில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான்.

கிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் “வாசுதேவர்’ என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார். தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் “ராஜமன்னார்குடி’ என்ற பெயர் ஏற்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். இது தவிர செண்பக லட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி ஆகிய திருநாமங்களிலும் தாயார் அழைக்கப்படுகிறார்.

 

  • இத்தல இறைவனின் திருவுருவம் 12 அடி உயரம் கொண்டது. ஆலயத்தின் வளாகமானது, 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் கொண்டு திகழ்கிறது.

 

  • இத்தல உற்சவர் சிலை வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்த தாகும்.

 

  • இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள்.

 

  • செங்கமலத்தாயார் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவரது அவதார நட்சத்திரமான பூசத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. தை 4ம் நாள் மட்டும் சுவாமி, தாயாருடன் சேர்ந்து “ஏக சிம்மாசனத்தில்’ காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.

 

  • ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய “குழந்தை’ அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

 

  • கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.

 

  • ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி) எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.

 

  • 32 லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம்.

 

  • ராஜாதி ராஜ சோழனால் கட்டப்பட்டதால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் “ராஜமன்னார்குடி’.என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

 

  • திருவாரூர் மாவட்டத்து ராஜமன்னார்குடி, கடலூர் மாவட்டத்து காட்டுமன்னார்குடி, திருநெல்வேலி மாவட்டத்து மன்னார்கோயில் (அம்பா சமுத்திரம்) என்ற மூன்று கோயில்களும் துவாரகை மன்னனான கண்ணபிரான், திருவரங்கத்து மன்னனான ரங்கமன்னார் ஆகிய திருமா லின் திருக்கோலங்களை முன்னிறுத்தி வழிபடப்பெறும் ஆலயங்களாகும். குஜராத் மாநிலத்து துவாரகை கோவிந்தனின் புண்ணிய பூமியாகும். திருவாரூர் மாவட்டத்து ராஜமன்னார்குடியோ தட்சிண துவாரகை என்ற பெயரில் கோபாலன், பாமா-ருக்மிணி சகிதராக பசுக்களோடு நின்றருளும் திருப்பதியாகும்.

 

  • மன்னை நகரத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட திருக்குளங்கள் இருப்பினும் ஹரித்ரா நதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், ருக்மிணி தீர்த்தம், அக்னி குண்ட தீர்த்தம், கிருஷ்ண தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்ர தீர்த்தம், பாம்பணி ஆறு என்ற ஒன்பது நீர்நிலைகளே புண்ணிய தீர்த்தங்களாகப் போற்றப்பெறுகின்றன.

 

  • ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு வெளியே கீழ ராஜ வீதியில் காணப்பெறும் 54 அடி உயரமுடைய ஒற்றைக் கல்லாலான கருடஸ்தம்பம் தமிழகத்து அதிசய படைப்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. தஞ்சை நாயக்க அரசர் அச்சுதப்ப நாயக்கரால் கோயில் முன் நடப்பெற்ற இத்தூணின் மேற்பகுதியில் கருடாழ்வாருக்கென ஒரு சிறு கோயில் அமைந்துள்ளது. அதனுள் அஞ்சலிக்கும் திருக்கரங்களுடன் கருடாழ்வார் நின்றவாறு ராஜகோபாலனை சேவிக்கின்றார். இந்த ஸ்தம்பத்தின் அடிப்பகுதியில் அச்சுதப்ப நாயக்கர் அவர் மனைவி மூர்த்திமாம்பா, ராஜகோபாலசுவாமி, அனுமன் ஆகிய சிற்ப உருவங்கள் உள்ளன.

 

  • சோழப் பேரரசர்கள் எடுத்துப் போற்றிய பழைமையான விண்ணகரமாக தட்சிண துவாரகை விளங்கினாலும், தஞ்சை நாயக்க அரசர்கள் இக்கோயிலை திருவரங்கத்து பெருமாள் கோயில் போன்று விரிவுபடுத்தினர். அவர்கள் தங்கள் குலதெய்வமாக ராஜகோபாலனைப் போற்றினர்.

 

  • இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

 

திருவிழா:

மன்னார்குடியில் ஆண்டின் 12 மாதங்களிலும் உற்சவம் நடக்கும் ஊர்.

சித்திரை மாதம்  – கோடை உற்சவம் – 10 நாட்கள்

வைகாசி மாதம் – வசந்த உற்சவம்  – 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு

ஆனி மாதம் –  தெப்போற்சவம் – 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று ஹரித்ராநதி குளத்தில் தெப்பம் நடைப்பெறும்.

ஆடி மாதம் – ஆடிப்பூரம் – 10 நாட்கள். செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப் பெறும்.

ஆவணி மாதம் –  பவித்ரோற்சவம்  – 10 நாட்கள்.

புரட்டாசி மாதம் – நவராத்திரி       – 10 நாட்கள்.

ஐப்பசி மாதம் –   கோலாட்ட உற்சவமும் தீபாவளி உற்சவமும் கொண்டாடப் படும்

கார்த்திகை மாதம்- சொக்கப் பானையுடன் கார்த்திகை உற்சவம்

மார்கழி மாதம் – அத்யயன உற்சவம் – 20 நாட்கள்.இராப்பத்து, பகல் பத்து உற்சவம்.

தை மாதம் –   பொங்கல் உற்சவம்- 10 நாட்கள், தாயாருக்கும் உற்சவம் நடைப்பெறும்

மாசி மாதம் –  டோலோற்சவம் -10 நாட்கள்

பங்குனி மாதம் – ’பிரம்மோற்சவம் – 18 நாட்கள்

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்,

மன்னார்குடி – 614 001.

திருவாரூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4367 – 222 276, +91- 94433 43363,94433 65165

 

அமைவிடம்:

திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

2 × five =