February 02 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாவடுதுறை

  1. அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்

அம்மன்         :     ஒப்பிலாமுலைநாயகி, அதுல்ய குஜாம்பிகை

தல விருட்சம்   :     படர்அரசு

தீர்த்தம்         :     கோமுக்தி, கைவல்ய, பத்ம தீர்த்தம்,

புராண பெயர்    :     நந்திநகர், நவகோடிசித்தர்புரம்

ஊர்             :     திருவாவடுதுறை

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

ஒருசமயம் கைலாயத்தில் சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவனே தொடர்ந்து வெற்றி பெற்றதாக தன்னை அறிவித்துக் கொண்டார். அம்பாள் கோபம் கொள்ளவே, சிவன் அவளை பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். அவள் தன் வடிவம் நீங்கி மன்னிப்பு தரும்படி சிவனிடம் வேண்டினாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன். அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக் கொண்டு, விமோசனம் கொடுத்தார். “கோ’வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால், “கோமுக்தீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

 

ஆகாய மார்க்கமாக வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்த சித்தர் ஒருவர் இவ்வூரில் வரும்போது சாத்தனூரில் வாழ்ந்த மூலன் என்பவன் தனது மாடுகளை மேய்க்கும் போது இறந்து விட்டான் அப்போது அம்மாடுகள் அவனை சுற்றி கண்ணீர் விட்டு அழுதன இதனை கண்ட சித்தர் கவலை கொண்டு தனது உடலை ஒரிடத்தில் மறைத்து வைத்து விட்டு மூலன் உடம்பில் கூடுவிட்டு கூடு பாய்ந்தார்.மூலன் எழுந்தான் மாடுகள் ஆனந்தம் அடைந்து மேயத் தொடங்கின.பின்பு திருமூலர் தன் உடலை தேடினார் சிவபெருமான் அதை மறைத்து விட்டார்.மூலன் மனைவி அவனை காணாது தேடி வந்து திருமூலரை அழைத்தாள் அவர் நான் உன் கணவர் அல்ல தான் சித்தர் என்றும் தவம் செய்ய போகிறேன் கூறினார்.அவள் ஊராரை அழைத்து முறையிட்டாள் அவர்களும் இவரிடம் பேசினர் பின் இவர் ஞானி ஆகிவிட்டார் இனி இல்லற வாழ்க்கை வாழமாட்டார் என கூறினார் மூலன் மனைவி அவரை விட்டு சென்றால். திருமூலரை இவ்வுடம்பிலே இருந்து உன் நூலை இயற்றுக என சிவபெருமான் கூறியதால் அவர் ஆண்டு ஒன்றுக்கு ஒரு பாடல் என மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார்.இறுதியாக இங்கேயே முக்தி அடைந்து சமாதி கொண்டுள்ளார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீஸ்வரர். இவரே கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்த நாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்

 

  • இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் `ஒப்பிலா முலையாள் ஒரு பாகா” என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது.

 

  • ஆன்மாக்கள் பிறவி எனும் ஆற்றை நீந்தி துறையை (இறைவனை)அடைய பெறும் கோவில்கள் துறையென அழைக்கப்படுகிறது. திருவாவடுதுறை கோவில் பெயர் என்றும் சாத்தனூர் ஊரின் பெயர்

 

  • பார்வதி சாபத்தினால் பசு உருவம் எடுத்து சிவலிங்க பூஜை செய்து சாபம் நீங்க பெற்று பின்பு சுய உருவம் பெற அவளை சிவபெருமான் இடப்பக்கம் அனைத்து கொள்ள அனைத்தெழுந்த நாயகர் என அழைக்கபடுகிறார்.

 

  • திருஞானசம்பந்தர் இங்கு பதிகம் பாடி பொற்கிழி பெற்றார். அப்போது பலி பீடத்தின் அருகே தமிழ் மணம் கமழவே அவ்விடத்தை தோண்டி பார்த்தப்போது அன்று களப்பிரர் ஆட்சியில் பல தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டது திருமூலர் இயற்றிய திருமந்திர நூலை காப்பாற்ற அவற்றை செப்பேட்டில் எழுதி பேழையில் வைத்து இங்கு புதைத்தனர் திருமந்திரத்தை எடுத்து திருஞானசம்பந்தர் உலகிற்கு அளித்தார்

 

  • திருமூலர் திருமந்திரத்தை ஆண்டுக்கு ஒருப் பாடலாக மூவாயிரம் வருடம் மூவாயிரம் பாடல் இயற்றினார் என்பர்.இவர் கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர் இங்கு ஜீவ சமாதி அடைதார்.

 

  • திருமாளிகை தேவர் இங்கு தான் அட்டமா சித்திகளை பெற்றார்.

 

  • முசுகுந்த சக்கரவர்த்திக்கு புத்திர பாக்கியம் அளித்த தலம்.

 

  • சமய குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம்.

 

  • இந்த கோயில் பரந்தக சோழன் காலத்தில் கற்றளி பிச்சனால் எடுக்கப்பட்டது. பிச்சன் என்றால் அன்புடையவன் என பொருள். ‘நின்கோயில் வாயில் பெரிய பிச்சனாக்கினாய்’ என்கிறது திருவாசகம். அவன் உருவமும் திருப்பணி செய்தவர்கள் உருவரும் இக்கோயில் புடைப்பு சிற்பமாக அமைந் திருக்கின்றன.

 

  • இங்குள்ள நந்தி தமிழ் நாட்டிலே பெரிய நந்தி 14அடி உயரம். தஞ்சை கோயில் நந்தி 12 அடி உயரம் தான்.

 

  • இங்குள்ள வசந்த மண்டம் மூன்றாம் குலோத்துங்கன் கட்டியது. காவிரி கரைகண்ட கரிகாலன் எனும் கல்வெட்டு உள்ளது.பல்லவ மகாதேவியார் சிவகாமு என்பவரும் திருபணி செய்துள்ளார்.இவ்வூர்த் திருக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களுள், முதலாம் பராந்தகன் முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இவனது மகனாகிய விஜயராஜேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் மூன்றாம் குலோத்துங்க சோழன்.மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.

 

  • தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில் அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.

 

  • தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால், இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).

 

  • திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகம சாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த தலம்

 

  • போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய தலம்

 

  • சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற தலம்

 

  • சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்

 

  • திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் தலம்

 

  • மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படுகிறது.

 

  • இத்தலவிநாயகர் துணைவந்த கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

  • பிரகாரத்தில் லிங்கத்தின்மீது, பசு பால் சொரியும் சிலை இருக்கிறது. இதனை “கோரூபாம்பிகை’ என்கின்றனர்

 

  • மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்து மஹாநந்தியின் பின்புறமுள்ள மிகப்பெரிய ‘பலிபீடம்’ புகழ்மிக்க வரலாற்றுச் சிறப்புடையது. சுமார் 1,200 வருடங்களுக்கு முன்பு, சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது, அவரது தந்தையார் சிவபாதகிருதயர் தமது வேள்விக்காகப் பொருள் தேவைப்படும் நிலையை உரைத்தாராம். இதனைச் செவியுறும் சம்பந்தர் ‘ஈசனின் திருவடிகளே அந்தமில்லா அரிய பொருள்’ என்று சிந்தித்து, ‘இடரினும் தளரினும்’ எனத் தொடங்கிடும் திருப்பதிகத்தினைப் பாடி, ஆவடுதுறை அரனாரை வணங்குகிறார். இப்பதிகத்தின் அருஞ்சுவையில் மகிழ்ந்திட்ட மாசிலாமணீஸ்வரப் பெருமானால் தாமதியாது அருளப்பெற்ற, அள்ள அள்ளக் குறையாத பொன்உலவாக்கிழியைச் சுமந்து வந்த  சிவபூதம் அதனைப் பலிபீடத்தின் மீது வைத்து மீண்டதாக தலவரலாறு. இந்த அருமையான நிகழ்வானது ஆண்டுதோறும் திருவாவடுதுறை ஆலயத்தில்  நடைபெறும் ரதசப்தமிப் பெருவிழாவின்போது, ஐந்தாம் நாள் ஐதிக விழாவாக இன்றளவும் திருமடத்தார்களால் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகி்றது.

 

  • இடரினும், தளரினும், நோய்கள் தொடரினும், வாழினும், சாவினும், வருந்திடினும், அருந்துயர் தோன்றிடினும், பேரிடர் பெருகிடினும், பிணிவரினும், உண்ணினும், பசிப்பினும், உறங்கிடினும்… இப்படி எவ்விதத்தில் வினைகள் வந்து நலிவுற்றாலும் பெருமானின் திருவடிகளையே இடைவிடாது தம் மனம் அரற்றிடும் என்பதனை சம்மந்தர் பாடியுள்ளார்.

 

 

திருவிழா: 

புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னபிஷேகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்,

திருவாவடுதுறை ஆதீனம்,

திருவாவடுதுறை – 609 803.

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 4364 – 232 055.

 

அமைவிடம்:

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 16 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து சுமார் 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

eighteen − four =