அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கோகிலேஸ்வரர், கோழம்ப நாதர்
அம்மன் : சவுந்தரநாயகி
தல விருட்சம் : வில்வம்,முல்லைக்கொடி
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
புராண பெயர் : திருக்கோழம்பம்
ஊர் : திருக்கோழம்பியம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி பெருமாளுக்கு சாதகமான பதிலை கூறினாள். இதனால் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி இத்தலம் வந்து சிவனை பூஜித்து மீண்டும் தன் கணவனை அடைந்தாள். பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் சிவனின் அடிமுடி காண்பதில் பிரச்னை ஏற்பட்டது. பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார். இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.
கோயில் சிறப்புகள்:
- இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது.
- பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது.
- மூலவர் பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி நீண்டபாணம். அம்பிகையின் திருநாமம் செüந்தர்ய நாயகி. மிகுந்த லாவண்யத்துடன், சுமார் 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கும் அதிஅற்புத தரிசனம் நல்குகிறாள்
- கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதவி அவர்களால் கட்டப்பட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
- அம்பிகை சாபத்தின் காரணமாகப் பசு வடிவம் பெற்று பூவுலகில் பல தலங்களில் இறைவனை வழிபட்டதாகவும் அத்தகைய தலங்களில் திருக்கோழம்பியம் தலமும் ஒன்று என்றும் கோயில் வரலாறு கூறுகிறது.
- இத்தலத்தை சுற்றி திருநல்லம்(கோனேரிராஜபுரம்),வைகல் மாடக்கோயில், திருநீலக்குடி, தென்குரங்காடுதுறை, திருவீழிமிழலை, திருமீயச்சூர் ஆகிய தேவாரப்பதிகம் பெற்ற தலங்கள் உள்ளன.
- இக்கோயிலின் அம்பாள் சௌந்தர நாயகி அம்பாளாக எழுந்தருளி காட்சி தருகிறார். சந்தன் எனும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினார். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து சாபம் நீங்கி சுய உருவை அடைந்தார்.
- கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன் அதனை போக்கிக் கொள்ள வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.
- கோயில் நுழைவில் துவஜஸ்தம்பம், பலிபீடத்தை அடுத்து மகாமண்டபத்தில் சந்திரன், சூரியனையும், கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், நடராஜர், அகஸ்தியர், சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை போன்றவர்களையும், பிரகாரம் வலம் வருகையில் கன்னி மூல கணபதி, வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் (கோகிலசுப்பிரமணியர்) சோழலிங்கம், மகாலட்சுமி தாயார், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சந்நிதியைக் கொண்டு அருள்வதையும் தரிசிக்கலாம்.
- முன்புவன மாதவி எனப்படும் காட்டுமுல்லை தல விருட்சமாக இருந்திருக்கிறது. (அந்திவேளையில் மட்டும் தான் பூக்கும். பூக்கும்போது மட்டும் வாசனை இருக்கும்).
- சுமார் 1,100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தக் கோயிலில் 1925-ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் 17 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பராந்தக சோழ மன்னர் உள்ளிட்ட சோழமன்னர்கள், செம்பியன்மாதேவி, பாண்டிய, விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் போன்றோர் திருப்பணிகளைச் செய்துள்ளனர் எனத் தெரிகிறது.
- இத்தலம் தேவாரப் பதிகம் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 35-ஆவது தலமாக அணிவகுக்கிறது. இத்தலத்துக்கு அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரின் பதிகங்கள் உண்டு.
திருவிழா:
கார்த்திகை சோமவாரம், பங்குனி உத்திரம்
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கோழம்பியம் – 612 205.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91- 4364-232 055, 232 005.
அமைவிடம்:
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்குளம்பியம். திருவாவடுதுறையில் இருந்து இறங்கி ஆட்டோவில் செல்ல வேண்டும்.