January 30 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

367.அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்)

அம்மன்    :     மரகதவல்லித் தாயார்

தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம்

ஊர்       :     காஞ்சிபுரம்

மாவட்டம்  :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அவர் மகாவிஷ்ணுவின் பரமபக்தர் என்றும், அதனால் சதா மகாவிஷ்ணுவை நினைத்துக் கயண்டும், அவரின் புகழைப் பாடிக்கொண்டு இருந்தவர் என்றும், இதனால் இவரின் பக்திக்கு மகிழ்ந்து மகாவிஷ்ணு, இராம அவதாரத்தில் விஷ்ணுரூபத்தில் பச்சைநிற மேனி கொண்டு இந்த மரீச்சி மகரிஷிக்குக் காட்சித் தந்த இடமாகக் இத்திருத்தலம் கருதப்படுகிறது.

சப்தரிஷிகளில் ஒருவரான மரீஷி மகரிஷி மகாவிஷ்ணுவின் மீது அதிக பக்தி கொண்டவராக இருந்தார். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா?

எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்?

இது உங்களுக்கு தெரியாமல் நடக்குமா?

அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா?

அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா?

என தனது சந்தேகங்களை பட்டியலிட்டார் மரீஷி மகரிஷி.

அவரிடம், நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம் என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரி வதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே தன் பூதகனத்தை ஆஞ்சநேயராக அனுப்பினார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன்.

பிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்தவீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது” என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே தங்கினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என வரலாறு கூறுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு மகாவிஷ்ணு, மரகத மேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். எனவே, இவரை பச்சைவண்ணப் பெருமாள் என்கின்றனர்.

 

  • மரீஷிக்காக தனியே காட்சி தந்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை.

 

  • இத்திருப்பதியின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் என்கிற மரகத வண்ணர் அமைந்துள்ள மண்டபவாயில் தெற்கு நோக்கியும், மூலவர் பச்சை வண்ணர் பெருமாள் கிழக்கு நோக்கியும் சேவார்த்திகளுக்குத் தரிசனம் வழங்கிக் கொண்டுள்ளார்.

 

  • தாயார் சந்நிதி தனிச் சந்நிதியாக உள்ளது. தாயார் சந்நிதிக்கு முன்பு பீடத்தில் யந்திரபிரவாசனி (ஸ்ரீசுத்தமந்திரம்) சிலா ரூபத்தில் பிரதிட்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இங்கு மகாலெட்சுமி தாயார் உற்சவ ரூபத்தில் கஜலட்சுமியாகக் காட்சித் தருகிறார். ஆதிசேசன் காவலாக உள்ளார்.

 

  • ராமராக காட்சி தந்தவர் என்பதால் இவரை ராமராகவும், தாயாரை சீதையாகவும் எண்ணி வழிபடுகின்றனர்.

 

  • தாயார் மகாலட்சுமி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். பெரும்பாலும் தாயார் சன்னதிக்கு முன்புறம் அல்லது அருகில்தான் ஸ்ரீசக்கர பீடம் அமைக்கப்படும். ஆனால், இங்கு தாயாரின் பீடத்திலேயே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • மகாவிஷ்ணு ராமர் போல காட்சி தந்ததால் இவள் சீதாதேவியாகவும் கருதப்படுகிறாள். இதனால் தாயார் யந்திர ரூபிணி,மகாலட்சுமி, சீதை ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக அருளுகிறாள்.

 

  • இத்திருத்தலம் திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை. ஆனால் பவளவண்ணப் பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்கள் இந்த பச்சை வண்ணர் பெருமாளையும் ஒரு சேர சேவித்தால் புண்ணியம், என்பது சான்றோர்களின் எண்ணம் ஆகும். திவ்ய தேசங்களில் 2 பெருமாள் உருவங்களில் இவர் ஒருவராகவே காட்சித் தருவது சிறப்பு ஆகும். எனவே பவளவண்ணர் பெருமாளைச் சேவிக்கச் செல்லும் சேவார்த்திகள் பச்சை வண்ணரையும் சேவிக்க வேண்டும் என்ற கருத்தை சொல்கிறார்கள்.

 

  • பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷனே, ராமாவதாரத்தில் லட்சுமணராகப் பிறந்தார். தன் மீது அன்பு கொண்டிருந்த ஆதிசேஷனை தன் தம்பியாக பிறக்க வைத்து மரியாதை செய்தார் ராமர். இத்தலத்தில் மகாவிஷ்ணு ராமராக மரீஷிக்கு காட்சி தந்தபோது, ஆதிசேஷனால் லட்சுமணனாக மாறமுடியவில்லை. எனவே தன் சுய வடிவத்திலேயே (நாக வடிவம்) இங்கு வந்தார். மகாவிஷ்ணுவிடம் அவரைத் தாங்க தனக்கு வாய்ப்புத் தரும்படி உரிமையுடன் கேட்டார். எனவே, நாகத்தின் தலையின் மீது, பெருமாள் ஜோதியாக காட்சி தந்தார். இதன் அடிப்படையில் தாயார் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது.

 

  • இத்தலத்திற்கு நேர் எதிரே திவ்யதேசங்களில் ஒன்றான “பவளவண்ணப் பெருமாள்’ தலம் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பவளவண்ணரையும், பச்சை நிறப்பெருமாளையும் ஒரே நேரத்தில் வழிபடுவது அபூர்வ தரிசனம்.

 

திருவிழா: 

வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில்,

காஞ்சிபுரம் – 631 502.

காஞ்சிபுரம் மாவட்டம்

 

போன்:    

+91- 44 – 2722 9540

 

அமைவிடம்:

காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து சுமார் 1 கி.மீ., தொலைவில் கோயில் இருக்கிறது.

Share this:

Write a Reply or Comment

16 + fifteen =