January 30 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திரிசூலம்

  1. அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     திரிசூலநாதர் ( திரிச்சுரமுடையார்)

உற்சவர்        :     சந்திரசேகரர்

அம்மன்         :     திரிபுரசுந்தரி

தல விருட்சம்   :     மரமல்லி

தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம்

புராண பெயர்    :     திருச்சுரம்

ஊர்             :     திரிசூலம்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க, தன் பணியைச் சரிவர தொடர இங்குக் குளத்தில் குளித்து நான்கு வேதங்களையும் சுற்றிலும்  வைத்து பூஜை செய்து, சிவனை நோக்கி தவம் புரிந்து ஈசனின் அருளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த தலவரலாறு பெற்ற தளம் பிரம்மபுரீஸ்வரர் என்றும்  அழைக்கப்பட்டது. லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்கள் மலைகளாக மாறியதாகவும், மலையை சுரம் என்பர். எனவே இறைவனை “திருச்சுரமுடைய நாயனார்”  மற்றும் திரிசூலநாதர் என்றழைப்பார்கள். இங்குப் பிரம்மா வந்து சென்றதால் இந்த இடம் பிரம்மபுரி என்றும் ஈஸ்வரனை பிரம்மபுரீஸ்வரர் என்றும் சொல்லுகிறார்கள்.

தொன்மை வாய்ந்த திரிசூலம் மலையை ஒட்டியுள்ள பல்லாவரம் பகுதியில் கடந்த 1863 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. அத்தகு திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே திரிசூல நாதர் கோயில் உள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார்.

இந்த திருத்தலத்துக்கு “பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர், இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை, இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு, தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன், இந்த ஊரின் பழைய பெயராகிய “வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்பதனை, தனது பெயரில் “திருநீற்றுச் சோழநல்லூர்’ என்று மாற்றி ஆணையிட்டதாக இந்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்த ஆலயத்தில் திருசூலநாதராகிய இறைவன் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். கருவறையின் அமைப்பு கஜபிருஷ்ட (தூங்கானைமாடம்) அமைப்புடையது.

 

  • அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி, அம்பாள் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அன்னையின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.

 

  • திரிசூலநாதரின் கருவறையில் இறைவனுக்கு அருகிலேயே சௌந்தராம்பிகை என்ற திருப்பெயருடன் அம்மன் சிலாரூபமாய் காட்சி தருகிறாள்.

 

  • இக்கோயில் கட்டட, சிற்பக் கலைக்குப் பெயர் பெற்றதாக விளங்குகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூதகண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி -சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர், ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி, இருமுகம் கொண்ட சரப மூர்த்தி, காமாட்சி அம்மன் தவம், காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

 

  • கோட்டத்தில் வீற்றிருக்கும் தெய்வ வடிவங்களில் கணபதி இங்கே குண்டலினி சக்தியை மேலெழுப்பும் நாக யக்ஞோபவீத கணபதியாகக் காட்சி தருகிறார்.

 

  • தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்றிருப்பதாக அர்த்தம் கொடுக்கிறது.

 

  • கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது.

 

  • இங்கு பிரகாரத்தில் மார்க்கண்டேயர் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார்.

 

  • இந்து சமயத்தில் வழிகாட்டும் கடவுளர்களான சிவபெருமான் தீய சக்திகளான ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் அழிக்கும் அடையாளமாகக் கொண்ட திரிசூலம் கைகளில் ஏந்தி, கழுத்தில் பாம்பும், நீண்ட சடை மீது அணிந்த பிறையும், காதுகளில் கலந்து தோன்றும் குழையும், தோடும், திருநீறணிந்த சிவபெருமான் அம்பிகையுடன்  சிவ தொண்டர்களுக்கு காட்சியளிக்கிறார்

 

  • நரசிம்மரின், உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர், சரபேஸ்வரருக்கு “சரபம்’ என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால், இறகு இல்லாத சிவஸ்சொரூபமாக சரபேஸ்வரர், இரண்டு முகங்கள், இரு கைகளில் மான், மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரைப் பிடித்த கோலத்தில் அபூர்வமான கோலத்தில்  காட்சியளிக்கிறார்.

 

 

திருவிழா: 

திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில்,

திரிசூலம், 600 043.

காஞ்சிபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91- 44 – 2264 2600

 

அமைவிடம்:

தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திரிசூலம் உள்ளது. தேசிய விமான நிலையம் பஸ் ஸ்டாப் அல்லது திரிசூலம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி ஒரு கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.

 

Share this:

Write a Reply or Comment

14 − two =