- அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : யோகநரசிம்மர்
தாயார் : அமிர்தவல்லி
தீர்த்தம் : லக்ஷ்மி சரஸ்
ஊர் : சோகத்தூர்
மாவட்டம் : திருவண்ணாமலை
ஸ்தல வரலாறு:
பெருமாளின் நாபிக் கமலத்தில்இருக்கும் பிரம்மா வேதங்களின் உதவி கொண்டு படைப்புத் தொழிலை செய்துவந்தார். அசுரர்கள் பிரம்மாவின் வேதங்களைத் திருடிச் சென்றனர். இதனால், பிரம்மாவின் படைப்புத்தொழில் நின்று போனது. தொழிலை இழந்த பிரம்மாவுக்கு தாங்க முடியாத சோகம் தொற்றிக் கொண்டது. பெருமாளைக் குறித்து தவம் செய்யத் தொடங்கினார். தவத்திற்கு இணங்கிய பெருமாள், “பூலோகத்திலுள்ள லட்சுமிசரசின் (குளம்) கரையில் அருளும்யோகநரசிம்மனை வேண்டி சோகம் போக்கிக் கொள்,’’ என்றார். இந்தக்குளமே, காஞ்சிபுரம் அருகிலுள்ள வந்தவாசியை ஒட்டிய சோகத்தூரில் உள்ளது. இதில் நீராடி யோகநரசிம்மனை வேண்டி மீண்டும் வேதங்களைப் பெற்று படைப்புத்தொழிலைத் தொடங்கினார் பிரம்மா. பிரம்மாவின் சோகம் தீர்த்த இத்தலம் “சோகத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- பிரம்மாவின் சோகம் தீர்த்த இத்தலம் சோகத்தூர் என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் சோஹ அபஹத்ருபுரம் என்று பெயர். இதன் பொருள் துக்கத்தைப் போக்கும் திருத்தலம் என்பதாகும்.
- கிழக்கு நோக்கி யோகானந்த நிலையில் நரசிம்மர் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபட்டவர்களின் வாழ்வில் சோகம் இருந்த இடம் தெரியாமல் மறையும் என்பது ஐதீகம்.
- கலியுகம் ஆரம்பித்த போது மக்களுக்கு ஏற்படப்போகும் துன்பங்களை நினைத்து வருந்திய பிரம்மதேவர் தவம் செய்து தம் சோகத்தைப் போக்கிக் கொண்ட திருத்தலம். மக்களுக்கு தாம் துணையிருப்பதாக யோகநரசிம்மர் பிரம்மதேவருக்கு வாக்களித்த திருத்தலம்.
- வைணவ அடியார்களில் முக்கியமானவரான நாதமுனிகளின் எட்டு சீடர்களில் ஒருவர் மகான் ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான். சோகத்தூர் ஆழ்வாரது அவதாரத்தலமிது. அகோபில மடத்தின் 16ஆம் பட்டத்தவரான ஸ்ரீ மதே ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ சடகோப யதீந்திர மகாதேசிகனின் அவதாரத்தலமாகவும் போற்றப்படுகிறது.
- மூலவர் யோகநரசிம்ம சுவாமியாகவும் தாயார் அமிர்தவல்லித் தாயாராகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம்.
- ஸ்ரீ நரசிம்மர் கிழக்கு திசை நோக்கி ஸ்ரீயோகாநந்த வடிவினனாய், பீடத்தில் தசாவதார மூர்த்திகளுடன் அதி அற்புதமாக எழுந்தருளியுள்ளார்.
- பெருமாள் உத்ஸவர் ஸ்ரீபிரகலாத வரதனாய் அருட்பாலிக்கின்றார்
- தட்சிண சிம்மாசலம் என்ற சிறப்பு பெற்ற, சித்தர் பெருமக்களும் வானுறை தேவர்களும் கொண்டாடும் புண்ணிய பூமி இது. எப்படிப்பட்ட துக்கமாயினும் பாவ தோஷங்களாயினும் வேருடன் களையக்கூடிய ஆற்றல் கொண்டவர் இந்த யோக நரசிம்ம சுவாமி.
- கமல ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தம் இன்றும் லட்சுமி ஸரஸ் என்றே வழங்கப்படுகின்றது. எத்தனை சிறிதாயினும் தீ சுடும். அது போன்றதே நரசிம்ம அவதாரம். திருமாலின் மிகுந்த உக்கிரம் கொண்ட, நான்காவது அவதாரம், இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் தமது உக்கிரங்களை உதறி எறிந்துவிட்டு தம்மை நாடி வரும் பக்தர்களின் துயரைத் துடைத்து அவர்தம் சோகத்தை அறவே துடைத்து, சாந்தம் கொண்டு, கிழக்கே திருமுக மண்டலம் காட்டியவாறு திருக்கோலம் கொண்டிருக்கின்றார்.
- அமிர்தவல்லித் தாயாரின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர் இங்கு குடி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர்.
திருவிழா:
நரசிம்ம ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் மணி 11 வரை,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்
சோகத்தூர்,
திருவண்ணாமலை.
போன்:
82485 64734
அமைவிடம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது வந்தவாசி, சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 77 கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த ஊர். இங்கிருந்து நல்லூர் செல்லும் சாலையில் சுமார் 6. கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோகத்தூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் யோக நரசிம்மர்.