January 25 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பழநி

  1. அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் வரலாறு

 

திருஆவினன்குடி மூலவர்   :     குழந்தை வேலாயுதர்.

மலைக்கோயில் மூலவர்    :     தண்டாயுதபாணி.நவபாஷாண மூர்த்தி

தல விருட்சம்             :     நெல்லி மரம்

தீர்த்தம்                    :     சண்முக நதி

ஆகமம்/பூஜை              :     சிவாகமம்

புராண பெயர்              :     திருஆவினன்குடி

ஊர்                       :     பழநி

மாவட்டம்                 :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு:

நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.

 

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

 

பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தப்படியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். இவ்விரு கிரிகளையும் திருவாவினன் குடியிலேயே நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருள்புரியவும் பெருவிருப்பம் கொண்டு முருகப்பெருமான் குதிரை மேல் செல்லும் அரசனாக வடிவெடுத்து வந்தார். இடும்பன் வழி தெரியாது தவித்துக் கொண்டு நின்றான். முருகப்பெருமான் இடும்பனைத் திருவாவினன் குடிக்கே அழைத்து வந்து சற்று இளைப்பாறி விட்டுப் போகும்படி கூறினார். அவ்வண்ணமே இடும்பனும் காவடியை இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினான். மீண்டும் காவடியைத் தூக்க முடியவில்லை. அதன் காரணத்தை ஆராய்ந்தான் இடும்பன். அப்போது சிறுவன் ஒருவன் கோவணத்தாண்டியாய் கையில் ஒரு சிறு தண்டு ஏந்தி சிவகிரி குன்றின்மீது நிற்பதைக் கண்டான் இடும்பன். அச்சிறுவனை நோக்கி மலையை விட்டுக் கீழிறங்கும்படிக் கட்டளையிட்டான் இடும்பன். ஆனால் அச்சிறுவனோ அக்குன்று தனக்கே உரியதென்று உரிமை கொண்டாட, இதனால் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான். பின்னர் இடும்பன் மனைவியான இடும்பியும், அகஸ்திய முனிவரும் ஓடி வந்து வேண்டிக் கொள்ளவே, அவர்களுக்காகவே சிறுவனாக வந்த முருகன் மனமிறங்குவது போன்று இடும்பனை உயிர்ப்பித்தார்.

 

இடும்பனது சீலத்தையும் குருபக்தியையும் மெச்சிய முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு இடும்பனைப் போன்று, சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களையெல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோர்க்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார். அன்றுமுதல் முருகன் ஆலயங்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப் பாதையிலுள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்லுதல் வேண்டும். இடும்பன் சிறந்த வரப்பிரசாதியாய் விளங்கி அருள்புரிகின்றார். இச்சிவகிரியின் உச்சியில்தான் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படும் முருகன் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார்.

 

  • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.

 

  • மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

 

  • மலைகளில் மருந்து கிடைப்பது இயற்கை. ஆனால் ஒரு மலையே மருந்தாய் அமைந்தது அபூர்வம்! அந்த அபூர்வ மலையே திருஆவினன்குடி என்றும் பழனி என்றும் அழைக்கப்படுது.

 

  • பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுது. இத்தலம் “பழனி” என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை “ஞானப் பழம் நீ” என அழைத்ததால், “பழம் நீ” என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியது.

 

  • இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

 

  • இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

 

  • தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

  • தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

 

  • இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

 

  • தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும்.

 

  • முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது.

 

  • மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.

 

  • பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

 

  • மலைக் கோவிலின் தென்மேற்கு பிரகாரத்தில் போகர் சந்நிதி உள்ளது. முருகனின் நவபாஷான சிலையை சித்தர் போகர் வடித்து தினமும் பூஜை செய்து வந்துள்ளார். அவர் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளார். போகர் ஒரு மருத்துவராக இருந்ததால், நவபாஷானங்களை கலந்து சிலை செய்ய முடிந்தது. இந்த கோவில் போகர் வழிபட்ட நவதுர்க்கா, புவனேஸ்வரி, மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. போகரின் சமாதி இங்கு அமைந்துள்ளது.

 

  • பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

 

  • சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

 

  • திருஆவினன்குடி சிறப்பு: குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், “திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிரகாரத்தில் சிலை இருக்கிறது.

 

  • அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாடவே முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்

 

திருவிழா:

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

 

திறக்கும் நேரம்:

திருஆவினன்குடி, மலைக்கோயில், பெரியநாயகி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழநி – 624 601.

திண்டுக்கல் மாவட்டம்.

 

போன்:    

+91-4545 – 242 293, 242 236, 242 493.

 

அமைவிடம்:

திண்டுக்கல்லில் இருந்து 56 கி.மீ., மதுரையிலிருந்து 120 கி.மீ., கோவையிலி ருந்து 115 கி.மீ. துõரத்தில் பழநி இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

16 + 6 =