அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : வைகல்நாதர் (செண்பகாரண்யேஸ்வரர்)
அம்மன் : சாகாகோமளவல்லி, கொம்பியல் கோதை, வைகலாம்பிகை.
தல விருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : செண்பக தீர்த்தம்
புராண பெயர் : வைகல்மாடக்கோயில்
ஊர் : திருவைகல்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் செண்பகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவில்களையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.
கோயில் சிறப்புகள்:
- வைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திருமால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் – இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும்.
- வலக்கண்ணாக விசாலாட்சி உடனாகிய விஸ்வநாதர் கோயில், இடக்கண்ணாக பெரியநாயகி சமேத பிரமபுரீஸ்வரர் கோயில், நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதை உடனாகிய வைகல் நாதர் திருக்கோயில். இந்த மூன்று திருக்கோயிலுமே பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமாகும்.
- தன் குட்டியை தேடி வருந்திய யானை, தனது தந்தத்தால் இங்கிருந்த ஈசல் புற்றை காலால் மிதித்து சேதப்படுத்தியது. தன் புற்றிணை மிதித்து அழித்த யானையின் உடலை ஈசல் கடித்து கொன்றன. தங்கள் தவறை உணர்ந்த யானைக்குட்டியும், ஈசலும் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என புராணம் கூறுகிறது.
- கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.
- தேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.
- இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது.
- மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது.
- வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன.
- சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தின் 4-வது பாடலில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், இறைவி கொம்பியல் கோதை பெயரையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
- திருநாவுக்கரசர் தனது திருவீழிமிழலை திருத்தாண்டகத்தில் கயிலைநாதனை இந்த வைகல் மாடக்கோயிலில் காணலாம் எனப் போற்றிருப்பது சிறப்பு.
- இந்தக் கோயிலில் திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராகக் காட்சித் தருவது சிறப்பு
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஞாலத்து நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் மாடக் கோயிற்குள் மதுரமே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
மாசி சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னபிஷேகம். சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் சிறப்பாக நடக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில்,
வைகல்மாடக்கோயில், ஆடுதுறை – 612 101,
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91- 435 – 246 5616
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (18 கி.மீ.) காரைக்கால் செல்லும் வழியில் பழிஞ்சநல்லூர் குட்டக்கரையில் இறங்கி அங்கிருந்து தெற்கே ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.