January 22 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அயோத்தி

  1. அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ரகுநாயகன் (ராமர்)

தாயார்          :     சீதை

தீர்த்தம்         :     சரயு நதி

ஊர்            :     சரயு, அயோத்தி

மாவட்டம்       :     பைசாபாத்

மாநிலம்        :     உத்திர பிரதேசம்

 

ஸ்தல வரலாறு:

உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ராமபிரானுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு, இந்த ஊரைக் கட்டியதாக கூறப்படுகிறது. தேவர்களே ராம அவதாரத்துக்கு வழிசெய்யும் வகையில் இவ்வூரை நிர்மாணம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. பிரம்மதேவர் உலகைப் படைத்தபோது, திருமால் வைகுண்டத்தில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுத்தார். அந்தப் பகுதியை உலகத்தின் ஒரு பகுதியாக்கி தன் மகன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார் பிரம்மதேவர். அந்த இடமே அயோத்தி என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர் இஷ்வாகு, இவரது பெயரில் உருவானது இஷ்வாகு வம்சம்.

மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பகீரதன் ஆகியோர் அயோத்தி மாநகரை ஆண்டனர். அவர்களின் காலத்துக்குப் பிறகு பகீரதனின் பேரன் தசரதன் ஆட்சி புரிந்து வந்தார். தசரதருக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவிகள். கௌசல்யாவின் மகன் ராமபிரான் ஆவார். கைகேயிக்கு பரதன், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிஷ்டரிடம் கல்வி கற்கச் செய்தார் தசரதன். ராம சகோதரர்கள் கல்வி, கேள்விகளிலும் போர்ப்பயிற்சியிலும் சிறந்து விளங்கினர். பின்னர் விசுவாமித்திரர் வருகை, ராம லட்சுமணர் அவருடன் செல்லுதல், தாடகை வதம், ராமபிரான் மிதிலை நகர் செல்லுதல், ராமபிரான் – சீதாபிராட்டி திருமணம், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள், ராமபிரான் சீதாபிராட்டி, லட்சுமணருடன் கானகம் செல்லுதல், காட்டில் சான்றோர் சந்திப்பு, சூர்ப்பனகை மூக்கறுபடுதல், மாய மான் வருகை, ராமபிரான் சுக்ரீவன் சந்திப்பு, விபீஷண சரணாகதி, ராமனுக்கும் ராவணனுக்கும் போர், ராமபிரான் வெற்றி வாகை சூடி சீதா பிராட்டியுடன் அயோத்தி திரும்புதல், ஸ்ரீராம பட்டாபிஷேகம் என்று ராமபிரானின் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. ராமபிரானும், சீதா பிராட்டியும் அயோத்தியில் எழுந்தருளி ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தற்போது அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது, இங்கு ரங்கநாதர், ராமபிரான் சந்நிதிகள் உள்ளன. ராமபிரான் சந்நிதியில் சீதாதேவி, லட்சுமணர், பரதர், சத்ருக்கனன், அனுமன், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ரகுநாயகன் கோயில், 65-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • இராமபிரான் திருஅவதாரம் செய்த ஸ்தலம். பிரம்மதேவனின் முதல் பிள்ளையாகிய ஸ்வாயம்புவமனுவுக்கு மகாவிஷ்ணு வைகுண்டத்தின் மத்தியிலிருந்து அயோத்தி என்னும் பாகத்தை கொடுக்க, அவர் அதை பூலோகத்திற்குக் கொண்டுவந்து சரயூ நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார் என்று கூறப்படுகிறது

 

  • மூலவர் ஸ்ரீராமன், ரகுநாயகன் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், வடக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு சீதாபிராட்டி என்பது திருநாமம். பரதாழ்வார், தேவர்கள் மற்றும் முனிவர்களுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

 

  • அம்மாஜி மந்திர் என்னும் பெயருடன் தென்னிந்தியப் பாணியில் கட்டப்பட்ட கோயில். இங்கு இராமர் சந்நிதியுடன் ரங்கநாதர் சந்நிதியும் உள்ளது. தென்னிந்திய வைணவர் மரபினரே இங்கு பூஜை செய்கின்றனர்.

 

  • பெரியாழ்வார் 6 பாசுரங்களும், குலசேகராழ்வார் 4 பாசுரங்களும், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் தலா ஒரு பாசுரங்களுமாக மொத்தம் 13 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

 

  • முக்தி அளிக்கும் 7 தலங்களில் (அயோத்தி, காசி, மதுரா, மாயா (ஹரித்வார்), துவாரகை, காஞ்சி, அவந்தி (உஜ்ஜைனி)) ஆகியவற்றில் அயோத்தியே முதன்மையாக கருதப்படுகிறது.

 

  • இங்கு ரங்கநாதர் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளன.

 

  • ராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் முவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒரு சேர வழிபடும் இடம் இதுவே.

 

  • சரயு நதிக்கரையின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தை பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

  • பிரம்மதேவர் ஒருசமயம் திருமாலை நினைத்து தவம் மேற்கொண்டார். பிரம்மதேவரின் தவத்தில் மகிழ்ந்த திருமால் அவருக்கு காட்சி அளித்தார். பிரம்மதேவரின் பக்தியில் திளைத்த திருமால், மனம் உருகி கண்ணீர் மல்க நின்றார். அந்த கண்ணீரை பிரம்மதேவர் ஒரு கமண்டலத்தில் ஏந்தி அதை பூமியில் விட்டார், அந்த இடமே ‘மானசரஸ்’ என்ற ஏரியானது. பிற்காலத்தில் இஷ்வாகுவின் வேண்டுகோளை ஏற்று, வசிஷ்ட முனிவர் அந்நீரை, அயோத்தியில் சரயு நதியாக ஓடச் செய்தார்.

 

  • மனைவியை நேசித்தல் என்பது ராமபிரானை தினமும் துதிப்பதற்கு ஒப்பானதாகும். சீதாதேவி போல் பொறுமையுடன் இருந்தால், பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

 

  • ராமபிரானின் ஜனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன, இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் அபூர்வமானது,

 

திருவிழா: 

ராமநவமி

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ராமர் கோயில்

அயோத்தி- 224 124

பைசாபாத் மாவட்டம்

உத்திரபிரதேச மாநிலம்

 

போன்:    

+91-9415039760, +91-9580717014

 

அமைவிடம்:

அயோத்திக்கு செல்ல விரும்புவோர் உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ சென்று அங்கிருந்து காசி செல்லும் வழியில் 130 கி.மீ., தொலைவிலுள்ள அயோத்தியை அடையலாம். இங்குள்ள பைசாபாத் மாவட்டத்தில் ராமர் கோயில் அமைந்துள்ளது. பைசாபாத்திற்கு லக்னோவிலிருந்து ரயில் மற்றும் பஸ் வசதிகள் உள்ளன. பைசாபாத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் அயோத்தி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

18 − seven =