January 22 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

  1. அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கோதண்டராமர்

உற்சவர்        :     ராமர்

தீர்த்தம்         :     ரத்னாகர தீர்த்தம்

புராண பெயர்    :     கோதண்டம்

ஊர்            :     இராமேஸ்வரம்

மாவட்டம்       :     ராமநாதபுரம்

 

ஸ்தல வரலாறு:

சீதா தேவியை, அசுரன் ராவணன் இலங்கைக்குக் கடத்திய பின்னர், ராவணனின் தம்பி விபீஷணன் சீதா தேவியை ஸ்ரீராமரானிடமே ஒப்படைக்குமாறு ராவணனுக்கு அறிவுறுத்துகிறான். ஆனால், ராவணன் விபீஷணனின் அறிவுரையினை ஏற்காதது மட்டுமின்றி, விபிஷணனை காலால் மிதிக்கச் சென்றான். இதனால் வெறுப்புற்ற விபீஷணன், இலங்கையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீராமபிரானிடம் சரணடைந்து அவரது படையில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். வானரப் படையினர் விபீஷணன் ராவணனின் தம்பி என்பதால் சந்தேகமடைந்து அவரை ஏற்க வேண்டாம் என்று ஸ்ரீராமபிரானிடம் கோரிக்கை விடுக்க, அதற்கு ராமபிரான் தன்னிடம் சரணடைந்தவர்களைக் காப்பது தமது கடமை என்று கூறினார். மேலும் அனுமன், ‘விபீஷணன் மிகவும் நல்லவன்’ என்று நற்சான்றிதழை ராமபிரானிடம் தெரிவிக்க, அவரும் விபீஷணனை ஏற்றுக் கொண்டார். விபீஷணனின் நற்குணத்தைக் கருத்தில் கொண்டு இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி ராமபிரான் விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக இப்பகுதியில் பட்டாபிஷேகம் செய்ததாக ஐதீகம். இதனடிப்படையில் இங்கு ராமருக்கு கோயில் எழுப்பப்பட்டது. கோதண்டராமர் என்ற திருநாமம் அவருக்குச் சூட்டப்பட்டது.

 

கோயில் சிறப்புகள்:

  • ராமர் விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்ட தலம்.

 

  • புராணக்கதையை உள்ளடக்கிய இக்கோயிலை சுற்றிலும் நீர்த்தேக்கம் அமைந்துள்ளதால் கடலுக்கு நடுவில் அமைந்துள்ளது போல் கோதண்டராமர் கோயில்  காட்சியளிக்கிறது.

 

  • ஒரு சிறிய குன்று போன்ற மேடான பகுதியில் வித்தியாசமான அமைப்போடு திகழும் ஒரு சிறிய தலம் இது. சுமார் இருபது படிக்கட்டுகளைக் கடந்து கோயிலுக்குள் சென்றால், கருவறையில் ஸ்ரீராமர் வில்லுடன் கோதண்டராமராகக் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்துக்கு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் என்று பெயர்.

 

  • கருவறையில் ஸ்ரீ கோதண்டராமர், லட்சுமணர், சீதா தேவி, அனுமன் மற்றும் விபீஷணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள். வழக்கமாக கோதண்டராமர் கோயில்களில் அனுமன் ஸ்ரீராமரை வணங்கிய நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் விபீஷணன் ஸ்ரீராமபிரானை வணங்கிய கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்.

 

  • கருடாழ்வார் மற்றும் ராமானுஜருக்கு இத்தலத்தில் தனி சன்னிதிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வளர்பிறை நவமி தினத்தன்று இத்தலத்தில் விபீஷண பட்டாபிஷேக முடிசூட்டு விழா உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று இத்தலத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

 

  • அனைத்து திசைகளிலும் கடல் நீரால் சூழப்பட்டு காட்சி தரும் இத்தலத்தின் தீர்த்தம் ரத்னாகர தீர்த்தமாகும். ஸ்தல விருட்சம் அத்திமரம். இக்கோயிலில் வைகானஸ ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

 

  • பக்தர்களை மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி வரும் பிளமிங்கோ பறவைகளையும் ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டி தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில் ஈர்த்து வருகிறது.

 

  • பரிந்துரைத்த ஆஞ்சநேயர் இருக்கிறார்.இங்கு இவர் விபீஷணன் ராமபிரானைத் தேடி வந்தபோது, ராமருடன் இருந்த வானரப்படையினர், விபீஷணன் மீது சந்தேகம் கொண்டு அடைக்கலம் தரக்கூடாது என்றனர். ஆனால், ஆஞ்சநேயர் ராமனிடம், விபீஷணனின் நடவடிக்கைகளை தான் இலங்கையில் கவனித்து வந்ததாகவும், அவனது சிறப்பியல்புகளையும் எடுத்துக் கூறி, அவனை ராமசேவைக்கு அனுமதிக்கும்படி பரிந்துரைத்தார். இதனால் இவர் இப்பெயர் பெற்றார். இவரிடம் நமது நியாயமான கோரிக்கைகளை தெரிவித்தால், அதை ராமரிடம் பரிந்துரைத்து நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.

 

  • ஒவ்வொரு ஆண்டும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும் போது இந்த கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்த பின்னர் கோதண்டராமர் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

 

  • 1964ம் ஆண்டில் புயலால் இந்தத் தீவு பாதிக்கப்பட்டபோதும், கோயிலுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருந்துள்ளது ஆச்சரியமான விஷயம்.

 

திருவிழா: 

புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று விசேஷ பூஜை, ஆனியில் விபீஷணர் பட்டாபிஷேகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 7 – மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,

இராமேஸ்வரம் – 623 526.

இராமநாதபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91-4573 – 221 223, 97912 45363.

 

அமைவிடம்:

இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ., நடந்தால் கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

two × one =