January 19 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

  1. அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்

அம்மன்         :     பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி

புராண பெயர்    :     கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்

ஊர்             :     இராமேஸ்வரம்

மாவட்டம்       :     இராமநாதபுரம்

 

ஸ்தல வரலாறு:

இராவணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்குவதற்காக இராமன், சீதை, இலட்சுமணனுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக இராமன் அனுமானை அனுப்ப, நெடுந்தொலைவிலுள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டுவருவதற்குக் காலம் தாழ்ந்ததால், சீதை மணலால் செய்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்யப்பெற்ற லிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக இராமலிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டுவந்த விசுவலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கே பூசை முதலியன முதலில் செய்ய வேண்டுமென்று இராமன் ஆணையிட்டார். இராமபிரான் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்றும், அவர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்திக்குச் செல்லும் போது இந்தத் தலத்தைக் காட்டினார் என்றும் இராமாயணம், சிவபுராணம், பத்மபுராணம், முதலியவற்றில் கூறப்பட்டிருக்கிறது. எவ்வாராயினும் இராமர் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது எனப்படுகிறது. அங்கே தன் வில்லினால் தோண்டிய தீர்த்தம் தனுஷ்கோடியாகும்.சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குதான் செய்தல்வேண்டும்.

ஒரு சமயம் இக்கோவில் இலிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு இலிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த இலிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த இலிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த இலிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். இராயர் செய்த உப்பு இலிங்கத்தைப் பிரகாரத்தில், இராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த இலிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்கதலம் இது.

 

  • இராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

 

  • பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்.

 

  • அம்பாள் பக்தரான ராயர் செய்த உப்புலிங்கத்தை இப்போதும் பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.

 

  • 1212 தூண்கள்,690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்ட இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம்உலகப்புகழ் பெற்றது.

 

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது தேவாரத்தலம் ஆகும்.

 

  • அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சேது சக்தி பீடம் ஆகும்.

 

  • சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கர், சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் பட்ட தழும்பை இன்றும் காணலாம்.

 

  • சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய திருஉருவங்களைக் காணலாம். இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.

 

  • அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி, இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை, கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.

 

  • முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

 

  • பல்லாயிரக்கணக்கான உருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார்

 

  • சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று இராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், இராமருக்கு உதவி செய்ததன் மூலம் இராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்தப் பாவம் நீங்க, இங்கு இலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தைப் போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த இலிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்” ஆயிற்று. இந்த இலிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

 

  • ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த இலிங்கத்திற்கு, “விஸ்வநாதர்” என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. இராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது. ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த இலிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய இராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட இராமநாதருக்கு பூஜை நடக்கிறது. கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, இராமநாதரைத் தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு இலிங்கம் கோவில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

 

  • இராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்” என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

 

  • சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக இராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோவில், இராமநாதர் கோவிலில் இருந்து இராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

 

  • அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

 

  • இராமநாதர் கோவிலில் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர். இராமலிங்கப் பிரதிஷ்டையின்போது இராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், இராமன் இராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், இராமர் இலிங்கப் பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

 

  • சேது தீர்த்தத்தில் நிராடுதலையும் , ராமேசுவரம் கோயிலை வழிபடுதலையும் ஒவ்வொரு இந்துவும் தம் வாழ்நாளில் செய்யவேண்டிய கடமையாகக் கருதுகிறார்கள். சேது தீர்த்தத்தில் நீராடுதல் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதப்படும் கோயில்களில் ஒன்று இராமேசுவரம்.

 

  • ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தைவிட தீர்த்தமாடுவதுதான் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே மேலும் பல தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுவதைத் தொடங்கி, பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு புயலில் தனுஷ்கோடி அழிந்தபிறகு, கோயில் முன்பு உள்ள அக்னி தீர்த்தக் கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது.

 

  • வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் இராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார். தூய்மையில்லாமல் கோவிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,” என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

 

  • பர்வதவர்த்தினி ராமநாத சுவாமியின் பத்தினி. அழகிய தமிழில் “மலைவளர் காதலி” என்று இவள் மீது பதிகம் பாடியுள்ளார் தாயுமானவர். தாயுமானவர் ஒருமுறை, பெரிய போர்ப் படைக்குத் தலைமை ஏற்று இந்த சேதுவுக்கு வந்தாராம் ! எதற்காக ? ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயத்தில் விலையுயர்ந்த நகைகளும் பொருட்களும் சிலைகளும் இருக்கின்றன என்பதை டச்சுக்காரர்கள் எப்படியோ அறிந்து கொண்டார்கள். திரிகோணமலைக்குச் சென்று அங்கே உள்ள கோயிலைத் தகர்த்துக் கொள்ளையடித்துவிட்டு அப்படியே ராமேஸ்வரத்திலும் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள். இந்தச் செய்தி தாயுமானவருக்குத் தெரியவந்தது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேருடன், அவர்களுக்குத் தளபதியாக பொறுப்பேற்று ராமேஸ்வரத்துக்கு வந்திறங்கினார் தாயுமானவர். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதிக்குச் சென்றார். அவளின் எழிலார்ந்த திருவுருவத்தைக் கண்டு பரவசமடைந்து பாடல் புனையத் தொடங்கினார். திருட்டுக் கூட்டம் திரும்பிப் போய்விட்டது. அந்தப் பாடலை அம்பாள் சந்நிதியின் தென்புறச் சுவரில் வெள்ளைச் சலவைக் கல்லில் வடித்துப் பதித்து வைத்திருக்கிறார்கள்.

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 4 மணி முதல் 1 மணி வரை,

மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்,

இராமேஸ்வரம் – 623 526,

இராமநாதபுரம் மாவட்டம்.

 

போன்:    

+91-4573 – 221 223.

 

அமைவிடம்:

மதுரையில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளது. சென்னை, மதுரையில் இருந்து ரயில், பஸ் உண்டு.

Share this:

Write a Reply or Comment

16 − 9 =