January 17 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநீலக்குடி

  1. அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நீலகண்டேசுவரர், மனோக்ஞ நாதஸ்வாமி

அம்மன்         :     ஒப்பிலாமுலையாள், அநுபமஸ்தினி

தல விருட்சம்   :     5 இலைவில்வம், பலாமரம், பஞ்ச லிங்கம்

தீர்த்தம்         :     தேவிதீர்த்தம்

புராண பெயர்    :     தென்னலக்குடி

ஊர்             :     திருநீலக்குடி

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி

 

கோயில் சிறப்புகள்:

  • பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

 

  • இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எணணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.

 

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு இரண்டு அம்பாள்கள் உள்ளனர். ஒப்பில்லா முலை அம்மன் உள்ளார். மற்றொருவர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றுபவள் (பக்தாபிஷ்டபிரதாயினி) தபசு கோலத்தில் உள்ளார்.

 

  • தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட சிவ தலம்.

 

  • இத்தல விநாயகர் நர்த்தனகணபதி எனப்படுகிறார்.

 

  • மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற சிறப்புவாய்ந்த தலம் இதுதான்.

 

  • தட்சனின் யாகத்திற்கு சென்ற தாட்சாயினி அவமரியாதை பெற்று திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்றுபட்டார்.

 

  • பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம்.

 

  • வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம்.

 

  • ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.

 

  • இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால்,அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை,ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.(ஏழூர்களாவன – இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி). இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.

 

  • திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது. இத்தலத்து பதிகத்தின் 7-வது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். “அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்” என்று அப்பர் பாடியுள்ளார். மேலும் தனது பதிகத்தில் “தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக” என்றும் அறிவுறுத்துகிறார்.

 

  • இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 

திருவிழா: 

சித்திரை மாதம் – பிரம்மோற்சவம் – 18 நாட்கள் திருவிழா வாகனங்களில் மார்க்கண்டேயாரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் சுவாமி வீதியுலா செல்வார்.அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சுவாமி செல்வார்.18 வது நாளில் எலந்துறையில் எழுந்தருள்வார். 18 வது நாளில் எலந்துறை(பவுண்டரீகபுரம்)என்ற ஊரில் சுவாமி அருள்பாலிப்பார். இது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்..

 

முகவரி:  

அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்,

திருநீலக்குடி- 612 108,

திருவிடைமருதூர் வட்டம்,

தஞ்சாவூர் – மாவட்டம்

 

போன்:    

+91 435 246 0660, 94428 61634

 

அமைவிடம்:

கும்பகோணம் – காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது தென்னலக்குடி என்ற திருநீலக்குடி. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆடுதுறையில் இருந்ததும் திருநீலக்குடி வர சாலை வசதி உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

5 × 2 =