அருள்மிகு குமரன் திருக்கோயில் வரலாறு
மூலவர் : மெய்கண்டமூர்த்தி
ஊர் : நாகப்பட்டினம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
ஸ்தல வரலாறு:
நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழகு என்ற ஊமைப்பணியாள் இந்தக் கோவில் தோட்டப்பணிகளைச் செய்து கொண்டு முருகன் நிவேதன பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு பக்தர்கள் கொடுக்கும் சில காசுகளை மட்டும் பெற்று காலம் தள்ளினார். ஒரு நாள் அர்த்தசாம மணி அடித்து விட்டு களைப்பு மிகுதியால் அங்கு ஒரு மறைவான இடத்தில் தூங்கிவிட்டார். பூஜை முடித்துவிட்ட அர்ச்சகர் சாதத்தை ஒரு பெஞ்சின் அடியில் வைத்து சொல்லிவிட்டுச் செல்ல இரவு 1 மணிக்கு விழித்தவனுக்கு பசி மிகுதியானது. வாய்பேச முடியாத அவர் பூட்டிய கோவிலுக்குள் அங்குழிங்கும் கத்தியபடியே ஓடிவந்தார். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் அமுது படைப்பவனாயிற்றே இறைவன்.
ஊமையன் முத்து கத்துவது முருகனுக்குக் கேட்டது. உடனே பாலன் உருவில் வந்து அவரை அமரச் செய்து பஞ்சாமிர்தத்தை கொடுத்து பசியாறச் சொன்னார். பிறகு என்னை முருகா என்று கூப்பிடு பேச வரும் என்ற போது ஊமையன் முத்து பேசினார் வாய்திறந்து
நீ ஊமையல்ல. இந்த உலகிற்குக் கவிபாட வந்த புலவன் நீ புறப்படு உனக்காகவும் உன் குரலைக் கேட்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது! என்றான் அழகன் முருகன். “என்னிடம் செய்த இறைபணி போதும் இனி இலக்கியப்பணி செய்வாய் என்று வாழ்த்தினான். அவ்வளவுதான் கங்கையாய்ப் பிரவாகமெடுத்தது அழகுமுத்துவின் கணீர்க்குரல் ஓடினான் திருத்தலங்களுக்கு பாடினார் அருட்பாடல்களை.. புகழ்பெற்று ஊரெல்லாம் சுற்றி வயதானபின் வைகாசி மாத விசாக நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜரின் 1000-கால் மண்டபத்தில் ஆவிபிரிந்தபின் நேராக நாகைமெய்கண்ட மூர்த்தி முருகன் சன்னதிக்கு வந்தது அழகுமுத்துவின் ஆவி அப்போது சாயரட்சை தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது முருகனின் அசரீரி ஒலித்தது, என் பக்தன் வருகிறான் வழிவிடுங்கள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன் என்று.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் விசாக விண்மீன் நிலவும் நாளில் ஐக்கியத் திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- மயிலுக்குப் பதிலாக யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறார்.
- இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக ‘மெய்கண்ட மூர்த்தி’ என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
- அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி. (மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்.). தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
- கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்க கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.
- ‘குமரகோயில்’ என்று இவ்வூராரால் அழைக்கப்படும் இவ்வாலயம், கி.பி 1750 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைய புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுனரின் துபாஷியாகப் பணியாற்றிவந்த ஆனந்த ரெங்கம் பிள்ளையால் அமைக்கப்பெற்றதாகும்.
- தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான், இதை அடையாளமாக மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக நம்பிக்கை.
- முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
- அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
திருவிழா:
வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூச 10 நாள் திருவிழா,
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு குமரன் திருக்கோயில்,
நீலா தெற்கு வீதி
நாகப்பட்டினம் மாவட்டம்-611 001.
போன்:
+91 99941 98391, 94429-29270
அமைவிடம்:
நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் நாலுகால் மண்டபம் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. டவுன் பஸ்கள் உள்ளன.