January 16 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கங்கை கொண்ட சோழபுரம்

  1. அருள்மிகு கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரகதீஸ்வரர்

அம்மன்         :     பெரியநாயகி

தல விருட்சம்   :     பின்னை, வன்னி

தீர்த்தம்         :     சிம்மக்கிணறு

ஊர்            :     கங்கை கொண்ட சோழபுரம்

மாவட்டம்       :     அரியலூர்

 

ஸ்தல வரலாறு:

தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. கும்பாபிஷேக நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான். இக்கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. இங்குள்ள லிங்கம் தமிழகத்தின் மிகப்பெரிய லிங்கம் ஆகும். இவருக்கு உடுத்துவதற்கு தனியாக வேட்டி, துண்டு நெய்யப்படும். இங்குள்ள சண்டிகேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

 

கோயில் சிறப்புகள்:

  • தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.

 

  • ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

 

  • தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

 

  • லிங்கத்தின் அடியில் சந்திரகாந்தக்கல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் தருகிறது.

 

  • பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும்.

 

  • இங்கு சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர். பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.

 

  • ராஜேந்திர சோழன் கோவிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோவிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

 

  • ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து “பெரிய கோவில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?” என கேட்டான். அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். “காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு” என நினைவு வந்தது. எனவே “கணக்கு விநாயகர்” என்று அழைக்கப்பட்டார். தற்போது “கனக விநாயகர்” எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

 

  • தென்கிழக்கு மூலையில் முப்பரிமாண நடராஜர் சிலை இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் கால கட்டட கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

 

  • தனது தந்தை தஞ்சையில் கட்டியதைவிட பெரியதாக கோயிலை கட்டினான். தஞ்சை பெரிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்டிருந்தாலும் இது பல வகையிலும் மாறுபட்டது. தஞ்சை பெரிய கோயில் விமானம் நான்கு பக்கங்களை கொண்டது. இக்கோயிலோ எட்டு பக்கங்களோடு,நளினத்தோடு அமைக்கப்பட்ட விமானம் கொண்டது.

 

  • கிழக்கு நுழைவு வாயில் பெரிய நந்திபகவான். பிரம்மாண்டமான மூலமூர்த்திகள்.

 

  • இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள லிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சியாகும்.

 

  • 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.

 

  • தனது சாதனைகளின் காரணமாக “பரகேசரி’ என்றும் “யுத்தமல்லன்’ என்றும் அழைக்கப்படுகிறான். “கடாரம் கொண்ட சோழன்’ என்ற பெயரும் பெற்றான்.

 

  • சாளுக்கியர்கள் மீது படையெடுத்து அவர்களை வென்று சாளுக்கிய தலைநகரை கைப்பற்றியது தான் ராஜேந்திர சோழனின் மகன் ராஜாதிராஜனின் முதல் பெரிய யுத்தம். இந்த வெற்றியின் நினைவாக தனது தந்தைக்கு இரண்டு ஜதை துவார பாலகர் சிலைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒன்று இக்கோயிலின் வாயிலிலும் மற்றொன்று திருப்புவனம் சரபேஸ்வரர் கோயிலும் வைக்கப்பட்டுள்ளது.

 

  • கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு(1025 – 1279) மேல் சோழர்களின் தலைநகராக விளங்கியது. சோழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இதைதான் தலைநகராக வைத்து ஆட்சி செய்தனர்.

 

  • இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது.

 

  • கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அதிகமான பெயர்கள் உள்ளன. அதில் பண்டைய காலத்து புலவர்கள் கங்காபுரி, கங்கை நகர் கங்காபுரம் என்ற  பெயர்களில் இவ்வூரை அழைத்தனர். இராஜேந்திர சோழன் 1019இல்  கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களை இராஜேந்திர சோழன் வெற்றிக் கொண்டதால்.  இதன் காரணமாக சிவனுக்கு  கங்கைகொண்ட “சோழீசுவரர் கோயில்” எனும் மாபெரும் கோவிலை அமைத்தார். கங்கை வரை பெற்ற வெற்றிகளின் காரணமாக கங்கை கொண்ட சோழப் பேரேரி  என்றும் அழைக்கப்பட்டது.  அதோடு இதற்கு  “சோழகங்கம்” என்றும் அழைக்கப்பட்டது.

 

  • இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம். கர்ப்பக்கிரகம் 10 டன் A/c போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது. இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது.

 

  • கல்வெட்டுகளில் ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது. தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

 

  • கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வடகைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

 

  • சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும்.

 

  • செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள்.

 

  • கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன.

 

  • சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்தபதி.

 

திருவிழா:

மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்,

கங்கை கொண்ட சோழபுரம்- 621 901,

அரியலூர் மாவட்டம்.

 

போன்:    

+91 97513 41108

 

அமைவிடம்:

கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

two × three =