January 12 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குத்தாலம்

  1. அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     சோழீஸ்வரர்

அம்மன்    :     பரிமளசுகந்தநாயகி, சவுந்தரநாயகி

ஊர்       :     குத்தாலம்

மாவட்டம்  :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, திகட்டாத இன்னருள் பெற வேண்டி தேவர்களும் முனிவர்களும் பல திக்குகளில் இருந்தும் வந்து குவிந்தார்கள். இறைவனின் திருமணத்தைக் கண்டு தரிசித்த கையோடு, திரும்பும் வழியில் ஆங்காங்கே தங்கள் பெயருடன் ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்துச் சில நாட்கள் வழிபட்டுள்ளனர்.

இது போல் இறைவனின் திருமணத்தை தரிசிக்க வந்தவர்தான் அக்னி பகவான். அதன் பின் குத்தாலம் தலத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். கயிலைநாதனையும், அவரது கரம் பற்றிய தேவியையும் தரிசித்து, சில காலம் அங்கேயே தங்கி வந்தார். அந்தக் காலகட்டத்தில், தன்னைப் பற்றி மற்றவர்கள் அடிக்கடி பேசி வரும் ஒரு விஷயம் அக்னி பகவானுக்கு மிகுந்த உறுத்தலாகவே இருந்தது. ‘பாழாப் போன நெருப்பு பட்டு கை சுட்டிருச்சு…’, ‘வீடே தீப்பிடிச்சு எரிஞ்சு சாம்பல் ஆயிடுச்சு…’ என்றெல்லாம் தன்னைப் பற்றி எல்லோரும் துக்கப்படுகிறார்களே… ஆனால், நாமோ பஞ்சபூதங்களுள் ஒன்றாகப் பெருமையுடன் தேவலோகத்தில் விளங்குகிறோம். பூலோகத்தில்தான் சாபத்துக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாகிறோம் என்று கவலைப்பட்டார். இதிலிருந்து முற்றிலுமாக விடுபட விரும்பினார். அதாவது, எல்லோரும் தன்னை பூஜித்து வழிபட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

தனது இந்தக் கோரிக்கையை சொன்னவாறு அறிவாரிடமே வைத்து, மிகுந்த சிரத்தையுடன் தவம் இருந்து அவரை வழிபட்டார். நறுமணம் வீசும் மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்து, நலம் பயக்கும் ஈசனை வணங்கினார். நல் உணவு சமைத்து தம்பதி சமேதராக விளங்கும் ஈசனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார். இறைவன் தனக்கு அருளும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

தூய பக்தியுடன் வழிபடும் எவரையும் அரவணைத்து அருள்பவர் அல்லவா அந்த ஆதிசிவன்? அக்னியின் வழிபாட்டில் நெகிழ்ந்தார். ஒரு நாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். மகிழ்ந்தார் அக்னி பகவான். தன்னை நினைத்துப் பிரார்த்தனை செய்யக் காரணம் என்ன என்று வினவினார் மகேசன். அக்னி பகவானும் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பழிச் சொல் குறித்து பலவாறும் விளக்கிச் சொன்னார். ‘‘கவலை வேண்டாம்… உனது பிரார்த்தனையும் எண்ணமும் நிறைவேறும். இங்கிருந்து தென்கிழக்குத் திசையில் ஓர் ஆலயம் எழுப்பு. திருக்குளம் வெட்டு. அங்கு என்னை வழிபடு. உனது பிரார்த்தனை பூர்த்தி ஆகும்’’ என்று ஆசீர்வதித்து மறைந்தார்.

நெருப்புக்கு அதிபதியான அக்னி பகவான் மனம் குளிர்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு, ஈசன் சொன்ன இடத்தை அடைந்தார். விக்கிரகம் வடிப்பதில் தேர்ந்த தேவலோகச் சிற்பிகளை வரவழைத்து இறைவனுக்கும் இறைவிக்கும் விக்கிரகம் வடித்தார். பரிவார தேவதைகளையும் அமைத்தார். திருக்கோயிலுக்கு எதிரே திருக்குளம் வெட்டி, அதில் கங்கை, காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து நிரப்பினார். ஆகம முறைப்படி வழிபாடுகளைத் துவக்கினார். சித்திரைத் திருநாள் முதல் அனைத்து உற்சவங்களையும் ஆரம்பித்து வைத்தார்.

அப்பனும் அம்மையும் அகம் மகிழ்ந்தனர். அக்னி தேவன் தங்களை அனுதினமும் ஆராதிப்பது கண்டு அவன் முன் மீண்டும் தோன்றி அருள, இறைவன் திருவுளம் பூண்டார். ஒரு தினத்தில் அக்னி பகவான், ஈசனை மனமார வழிபட்டுக் கொண்டிருக்கும்போது லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்டார் ஈசன். ‘‘அக்னி தேவா… உனது அயராத இறை பக்தியில் மகிழ்ந்தோம். எம் சொல்லுக்கு இணங்கி, இங்கு வந்து கோயில் எழுப்பிய உனது பக்தி கண்டு பெருமிதம் கொண்டோம். கேள், என்ன வேண்டும்?’’ என்றார்.

அக்னி பகவான் மண்டியிட்டு நின்றார். ‘‘இறைவா… உனது அன்பே எனக்கு என்றென்றும் வேண்டும். இந்தப் புனிதக் குளத்தில் மூழ்கி வழிபடும் பக்தர்களது துயரைத் தாங்கள் போக்க வேண்டும். அவர்களது பாவங்களை விலக்க வேண்டும். உனது பொருட்களைத் திருடுபவரது குலம் நாசம் அடைந்து, அவர்கள் நரகத்தில் உழல வேண்டும்’’ என்றவர் கடைசியாக, தனது தனிப்பட்ட வேண்டுகோளையும் வைத்தார். ‘‘மகேசா… என்னால் தீண்டப்பட்ட பொருட்களை நான் சுடுகின்ற காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் என்னை பாவம் சூழ்கிறது. அதில் இருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூயவனாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

அனைத்து வரங்களையும் இக்கணமே நிறைவேற்று கிறோம்’’ என்று அக்னிக்கு அருளிவிட்டு, லிங்கத் திருமேனியில் புகுந்தார் இறைவன். அக்னி பகவான் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அன்று முதல் இந்தத் தலம் ‘அக்னீஸ்வரம்’ என்றும், இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்றும், அவர் வெட்டிய திருக்குளம் ‘அக்னிக் குளம்’ எனவும் வழங்கப்படலாயிற்று. இதில் குளம் தற்போது தூர்ந்து போய் குட்டையாகக் காட்சி அளிக்கிறது. எவரும் பயன்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. எனினும், ஆலயத்தில் உள்ள கிணற்றின் தீர்த்தத்தையே அக்னிக் குளத்தின் தீர்த்தமாகக் கருதி அபிஷேகத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த ஜய்தா பல்லவராயர் என்ற அரசு அதிகாரியால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயிலுக்கு வேண்டுவன எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள் சோழ மன்னர்கள். அதுபோல் இந்த இறைவனும் அவர்களுக்கு அருளையும் ஆசியையும் வழங்கி உள்ளதை அறிய முடிகிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். விக்கிரம சோழனின் மனைவியாகிய கோமளை, வெண்குஷ்ட நோயால் பெரும் அவதிப்பட்டு வந்தாள். தன் மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வந்து, நோய் அகல பிரார்த்தித்து வந்தான் விக்கிரம சோழன்.

பிரார்த்தனையும் பலித்தது. ஒரு சுப தினத்தில் கோமளையின் உடலில் இருந்த வெண்குஷ்ட நோய் முற்றிலும் அகன்று புதுப் பொலிவுடன் ஆனாள். சோழர்கள் குடும்பமே பெரிதும் மகிழ்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக, இந்த ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டான் விக்கிரம சோழன். ஆலய வழிபாடு தங்கு தடை இல்லாமல் நடைபெறுவதற்காக வெவ்வேறு ஊர்களில் விளை நிலங்களை எழுதி வைத்தான். இத்தகைய விளைநிலங்கள் உள்ள ஊர் ‘விக்கிரமன் குத்தாலம்’ என இன்றைக்கும் வழங்கப்படுகிறது. இவனுடைய காலத்தில்தான் இந்தப் பகுதி ‘சோழீசம்’ என ஆனது. இறைவனும் ‘சோழீஸ்வரர்’ ஆனார்.

 

கோயில் சிறப்புகள்:

  • தேவார வைப்புத்தலங்களில் இதுவும் ஒன்று

 

  • ஆடுதுறைக்கு அடுத்து வரும் ஊர்- குத்தாலம். புராணத்தில் இந்த ஊர் திருத்துருத்தி எனப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பற்றி ‘திருத்துருத்தி புராணம்’ விரிவாகச் சொல்கிறது.

 

  • குத்தாலத்தில் ஐந்து சிவன் கோயில்கள் இருக்கின்றன. சொன்னவாறு அறிவார் (இந்த இறைவன் திருநாமத்தை ‘சொன்னவர் அறிவார்’ என்றும் சொல்வதுண்டு. இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் உத்தாலம் என்கிற ஒரு வகை மரம். ஆதி காலத்தில் இந்த ஊர் உத்தால வனம் என்றே அழைக்கப்பட்டது. அதுவே, பின்னர் மருவி, குத்தாலம் ஆயிற்று!), மன்மதீஸ்வரர், சோழீஸ்வரர், ஓம்காளீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியவையே அந்த ஐந்து திருத் தலங்களாகும்.

 

  • சிவன் சந்நிதிக்கு அருகில், கிழக்குப் பார்த்த நிலையில் ஸ்ரீபரிமள சுகந்த நாயகி. இந்த ஆலயத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள். ஒன்று- பிரதான அம்பாளாகிய சௌந்தரநாயகி. மற்றொரு அம்மன்- பரிமள சுகந்தநாயகி. இறைவனை மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்காக இந்த அன்னைதான் பரத மகரிஷி நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றி, திருமணஞ்சேரியில் இறைவனின் திருக்கரம் பற்றினார். நான்கு திருக்கரங்களுடன் சுமார் நான்கடி உயரத்தில் அருள் புரிகிறார் இந்த மண நாயகி.

 

  • பிரதான அம்பாளாகிய ஸ்ரீசௌந்தரநாயகி, தென்திசை நோக்கித் தனிச் சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார்.

 

  • மகரிஷிகள், தேவர்கள் சிவனை வழிபட்ட தலம் இது. இவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது, சனீஸ்வரர் அவர்களை கையில் அமிர்த கலசம் ஏந்தி வரவேற்றாராம். இந்த அமைப்பிலேயே காட்சி தருவதால் இவர் அமிர்த கலச சனீஸ்வரர் என்றும், பாதாளத்திலிருந்து சுயம்புவாக தோன்றியதால், பாதாள சனீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

  • பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை அவர்கள் சொன்னபடி அறிந்து நிறைவேற்றி வைப்பவர் என்பதால் இத்தலத்து சிவனை சொன்னவாறு அறிவார் என்றும் அழைக்கிறார்கள்.

 

  • ஆஞ்சநேயர் இத்தலத்தில் சோழீஸ்வரரை வழிபட்டுள்ளார். இதை குறிக்கும்விதமாக சுவாமி சன்னதி கோஷ்டத்தில் ஆஞ்சநேயர் கையில் தாமரையுடன் சிவபூஜை செய்யும் சிற்பம் உள்ளது. அருகில் நந்தியும் இருக்கிறது. தவிர, இங்குள்ள ஒரு தூணிலும் ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

 

  • கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சோழீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். இந்நாட்களில் சுவாமி காவிரி நதிக்கரைக்கு எழுந்தருளுவார். கடைசி ஞாயிறன்று புண்ணிய நதிகள் அனைத்தும் காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். அன்று சோழீஸ்வரர், உத்வேதீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களில் உள்ள பஞ்சமூர்த்திகளும், இவ்வூரிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்திலும் காவிரிக்கரைக்கு எழுந்தருளுவர். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

 

  • இங்கு நவக்கிரக சன்னதி இல்லை.

 

  • இங்கு ஓடும் காவிரி நதி துருத்திக்கொண்டு (முனைப்பான வேகத்துடன்) ஓடுவதால் தலத்திற்கு, திருந்துருத்தி என்றும், சிங்கு நீர் திருத்துருத்தி என்றும் பெயர்கள் உண்டு.

 

  • விக்கிரம சோழ மன்னன், இந்த ஆலயத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்ததால் அவனுடைய பெயரைக் கொண்டே ஈஸ்வரர், ‘சோழீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். அதற்கு முன் வரை அக்னீஸ்வரர் எனவும், திருத்தலத்துக்கு அக்னீசம் என்றும் பெயர் இருந்து வந்தது. அக்னி பகவான் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளார்.

 

திருவிழா: 

வைகாசி பவுர்ணமி, மாசி மகம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்,

குத்தாலம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91 94435 64607, 94878 83734.

 

அமைவிடம்:

குத்தாலம். கும்பகோணம்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் இருக்கும் ஊர்- குத்தாலம். கும்பகோணத்தில் இருந்து குத்தாலத்துக்கு சுமார் 24 கி.மீ. தொலைவு. மயிலாடு துறையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.

 

Share this:

Write a Reply or Comment

3 × five =