January 11 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

348.அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்)

தல விருட்சம்   :     வேம்பு

ஊர்            :     தஞ்சாவூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். அதில், எந்த வடிவில் ஆஞ்சநேயருக்கு சிலை உருவாக்குவது? அவருக்குப் பல வடிவங்கள் உண்டே! இந்தத் தலத்தில் எந்த மாதிரியான விக்ரகத்தை அமைப்பது பொருத்தமாக இருக்கும்? என தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர ஸ்தபதியால் இயலவில்லை. ஒருநாள் ஸ்தபதியின் கனவில் தோன்றிய ராமபிரான், ‘என் அவதார காலத்தில் ஆஞ்சநேயர் செய்த அற்புதங்கள் ஏராளம்; அவற்றில் எனக்கு பிடித்தது சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து, லட்சுமணன் முதலான என் அன்பிற்கினியவர்களை மூர்ச்சை தெளிவித்து உயிர் பிழைக்க வைத்ததுதான். அத்தகைய சாதனையைச் செய்த ‘சஞ்சீவி மலை தாங்கி’ ஆஞ்சநேயர் உருவத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்’ என்று ஆணையிட்டார். இதன்படி தனக்கு இப்பொறுப்பை அளித்த தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் (கிபி.1739-1763) மூலை அனுமார் கோயில் கட்டப்பட்டது. தஞ்சை அரண்மனை நூலகத்து நாடி ஆவணங்களில் இந்த சம்பவத்துக்கான ஆதாரங்கள் உள்ளன.

பிரதாப சிம்மன், மூலை அனுமார் என்ற பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். ஒருசமயம், எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, இந்த மூலை அனுமாரை மனமுருகி வேண்டிக்கொள்ள, ஆஞ்சநேயர் அருளால் வானர சேனைகள் உருவாகி, எதிரிப் படையை ஓட ஓட விரட்டின. மன்னன் தன் இறுதி நாட்களில், பிரதாப வீர ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாகச் சொல்வார்கள். தஞ்சையில் நான்கு ராஜவீதிகள் உள்ளன. இந்த மூலை அனுமார் கோயிலானது வடமேற்கு மூலையில், கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • தஞ்சை பெரியகோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனுமன் வடமேற்கு வாயுமூலையில் நின்றபடி அருள்பாலிப்பதால், இந்த அனுமனை மூலை அனுமார் என்றும் மூலை அனுமார் கோயில் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். பிரதாப வீர அனுமன் என்றும் போற்றுகின்றனர்.

 

  • வேறு தலத்தில் தரிசிக்க முடியாத காட்சியாக, இங்கே உள்ள மூலை அனுமன், இடது காலை முன்னே வைத்து, வலது காலை லேசாக உயர்த்தியபடி அபய முத்திரையுடன் அற்புதமாக நம் குறைகளையும் கவலைகளையும் தீர்க்க ஓடி வரும் தோரணையில் காட்சி தருகிறார்.

 

  • மூலை அனுமார் சந்நதி கிழக்கு நோக்கியும், திருமுகம் வடக்கு பார்த்தும், திருக்கரம் தெற்கு பார்த்தும் அருள்புரியும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. அனுமாரின் இதயக் கமலத்திலேயே ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்பதால், மூலை அனுமார் கோயிலில் ராமபிரானுக்கு என தனிச் சந்நதி இல்லை

 

  • ஆலயத்தின் ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம். அனுமனின் தலத்தில் வேம்பு தலவிருட்சமாக அமைந்திருப்பதும் விசேஷமான ஒன்று என்கிறது ஸ்தல வரலாறு.

 

  • பகவத்கீதையில் உள்ள 18 அத்தியாயங்களை நினைவுபடுத்தும் விதமாக கோவில் 18 தூண்கள் உள்ளன.

 

  • முகலாய படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன், தஞ்சை நோக்கி பயணப்பட்டாள். அம்மனுக்கு அந்தக் காலத்தில் தஞ்சையில் எவரும் அடைக்கலம் தர பயந்தார்கள். அப்போது மூலை அனுமார், தன்னுடைய திருத்தலத்தில் அம்மனுக்கு அடைக்கலம் அளித்தார். ராமபக்தர்கள் கனவில் தோன்றி, பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் திருக்கோயிலுக்கு அருகிலேயே தன் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வகையில் கோயில் கட்ட ஆணையிட்டார் என்பார்கள். இன்றும் தஞ்சை பங்காரு காமாட்சி அம்மனை தரிசனம் செய்பவர்கள், மூலை அனுமாரை வழிபட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

 

  • மூலை அனுமார் கோயில் நுழைவாயிலின் இருபுறமும் வானர சேனை தளபதிகள் இருவர் துவார பாலகர்களாக காட்சி அருள்கிறார்கள். பொதுவாக, வைணவத் திருத்தலத்தில் வேப்பமரம் இருப்பது இல்லை. ஆனால், இத்திருக்கோயிலில் வேப்பமரம் உள்ளது. ராமஜபத்தை எப்போதும் கேட்பதற்காகவே அம்மன் வேப்பமரமாக இங்கு எழுந்தருளி இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

 

  • இந்தக் கோயிலில் அருள்புரியும் அனுமனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் காலை பத்து மணிக்கு மேல் பக்தர்கள் தேங்காய் துருவல் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அனுமனுக்கு இப்படி ஒரு அதிசய அபிஷேகம் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் நடைபெறுகிறது.

 

  • ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போது, தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த சிற்பம் புகழ் பெற்றது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 

திருவிழா: 

ராம நவமி, அனுமன் ஜெயந்தி.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில் மேலராஜவீதி,

தஞ்சாவூர்.

 

போன்:    

+91 99433 81527

 

அமைவிடம்:

தஞ்சாவூர் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பில் கோயில் அமைந்துள்ளது. தஞ்சை பெரியகோயிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனுமன் கோயில்

Share this:

Write a Reply or Comment

6 + 10 =