- அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர்
அம்மன் : பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி
தல விருட்சம் : பவள மல்லிகை
தீர்த்தம் : சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம்
புராண பெயர் : திருத்தென்குரங்காடுதுறை
ஊர் : ஆடுதுறை
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு அஞ்சிய சுக்கிரீவன் தென்குரங்காடுதுறை சிவனிடம் தன்னைக் காக்குமாறு வேண்டினான். அவனது அன்புக்கு மனமிரங்கிய சிவன் அவனை அன்னப்பறவையாக வேற்றுருக்கொள்ளச் அவனுக்குச் சகாயம் செய்தார். இதனால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று வழங்கப்படுகிறார். அம்பிகை- ‘பவளக்கொடியம்மை’.
ஒரு சமயம் திருக்கயிலாய மலையில் கல்லும் கரையும் படி இசை பாடிக்கொண்டிருந்தான் அனுமன். அப்போது அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையில் மெய் மறந்து தம் கையில் இருந்த மகதி எனும் வீணையைக் கீழே வைத்தார். நேரம் அதிகமானதால் வீனணயின் மீது பனி மூடியது. அதனை எடுக்க முடியாமல் அவதியுற்ற நாரதர் சினத்துடன் அனுமனிடம், ‘நீ உன் இசையை மறப்பாயாக’ என்று சபித்தார். தன் இசையை மறந்த அனுமன் அந்த சாபம் நீங்க வழி தேடினான். சுக்ரீவன் வழிகாட்டுதலால் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை அனுதினமும் வழிப்பட்டான். ஈசன், அவன் மறந்துபோன இசைஞானத்தை அவனுக்கு மீண்டும் அருளினார். ஸ்ரீநடராஜப்பெருமான் தில்லை பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தைக் கோடானுகோடி தேவர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர். ஆனால், அகத்தியரும் சில முனிவர்களும் இந்நடனத்தைக் காணாது வருந்தினர். அதோடு பல தலங்களை வழிபட்டு தென்குரங்காடுதுறை வந்த அகத்தியர், இத் தலத்து இறைவனிடம் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த பெருமான் ஆனந்த நடனத்தை இத்தலத்திலேயே ஆடியருளினார். இதனால் இப்பகுதிக்கு ‘நடராஜபுரம்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இறைவன் ஆனந்த நடனமாடியதற்கு அடையாளமாக கோயில் தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு அருகில் அகத்தியர், நடராஜர் திருவுருவப்புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
கோயில் சிறப்புகள்:
- காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது.
- சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது.
- இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
- மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
- இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.
- கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவைவ உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.
- அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.
- இத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆகியவையாகும்.
- ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5,6,7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன.
- தென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு) அருகாமையிலுள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் இத்தல கல்வெட்டில் காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார வைப்புத்தலமாகும்.
- திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை தனது பதிகத்தால் பாடி தொழுபவர்கள் வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்றும் தனது பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.
- வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான்.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “நீக்கம் இலா நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற தென் குரங்காடுதுறைச் செம்மலே” என்று போற்றி உள்ளார்.
- ஆபத்து வரும் போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராமாயண காலத்தில் வாழ்ந்த சுக்ரீவன், வணங்கி வழிபட்ட தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை திருத்தலம்.
- அரதத்தர் என்பவர் கஞ்சனூரில் அவதரித்த வைணவ பக்தராவார். இவர் இளம்பருவம் முதற்கொண்டே சிவபக்தி மிக்கவராகக் கஞ்சனூரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளி இருக்கும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டுச் சிவஞானம் கைவரப் பெற்றவர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது ஏறி நின்று சிவபரத்துவத்தைத் தாபித்தவர். இவர் நாள்தோறும் கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, ஆகிய ஏழு சிவத்தலங்களையும் தரிசித்த பின்னரே உணவு கொள்ளும் நியமம் உடையவர், ஒரு நாள் வழக்கம் போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது மழை பெய்தது, இருளும் அடர்ந்தது வழியறியாமல் திகைத்து நின்றார். ஆபத்சகாயேசுரர் வயோதிக அந்தண வடிவங் கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித் துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாகக் கூறுவர்.
- வைணவப்பெண் ஒருத்தி திருமங்கலக்குடியில் வாழ்ந்து வந்தாள். அவள் ஆபத்சகாயேசுரர் மீது அளவற்ற பக்தி கொண்டு வழிபடுவது வழக்கம். ஒரு நாள் நிறைமாத கர்ப்பிணியாகிய அவள் ஆடுதுறை அரனைத் தரிசிக்க வந்தாள். தரிசித்துத் திரும்பும்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருகியது. ஓடக்காரனும் இல்லை. ஊர் செல்ல இயலாமல் உடல்நோவ இவ்வாலயத்தை வந்தடைந்தாள். ஆபத்சகாயேசுரரை மனமுருக வேண்டினாள். அப்பெருமான் “”தாயும் நீயே தந்தை நீயே” என வரும் திருஞானசம்பந்தர் வாக்கின் படி தாயாகத்தோன்றி உதவியருளினார். சுகப் பிரசவமாயிற்று. பின்னும் அவர் திருமங்கலக் குடிக்குச் சென்று அவர் பெற்றோரிடம் சுகப்பிரசவச் செய்தியைச் சொல்லி, “தாயும் சேயும் நலம், சென்று அழைத்து வாருங்கள் என்றார். அவர்கள் “தாங்கள் எந்த ஊரினர் ? என்று வினவ; “மருத்துவக்குடி’ என்று சொல்லி இருப்பிடம் மீண்டார் எனச் சொல்லுவர்.
திருவிழா:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,
ஆடுதுறை அஞ்சல் 612 101.
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 – 94434 63119, 94424 25809
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (14 கி.மீ) மயிலாடுதுறை செல்லும் வழியில் ஆடுதுறை உள்ளது.