January 09 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செய்யூர்

  1. அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கந்தசுவாமி

அம்மன்         :     வள்ளி-தெய்வானை

தல விருட்சம்   :     வன்னி, கருங்காலி

ஊர்             :     செய்யூர்

மாவட்டம்       :     காஞ்சிபுரம்

 

ஸ்தல வரலாறு:

சூரபத்மன் சிவபெருமானை வேண்டி தவம் இயற்றி, ‘தங்களால்கூட எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தைக் கேட்டுப் பெற்றான். இப்படி சாகாவரம் கிடைக்கப் பெற்ற சூரபத்மன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி மகிழ்ந்தான். திருமால், பிரம்மன், இந்திரன் முதலானோர் சிவபெருமானை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர். சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்க, அவை சரவணப் பொய்கையில் இணைந்து, ஆறுமுகங்களோடும் பன்னிரண்டு கரங்களோடும் முருகப்பெருமான் அவதாரமாக நிகழ்ந்தது. முருகப்பெருமான் நிலமார்க்கத்தில் திருப்பரங்குன்றத்திலும், ஆகாயமார்க்கத்தில் திருப்போரூரிலும், கடல்மார்க்கத்தில் திருச்செந்தூரிலும் அசுரர்களுடன் போரிட்டார். சிங்கமுகாசுரனை வென்று சிங்கமாக மாற்றி அம்பிகைக்கு வாகனமாக்கினார். தாரகாசுரனை வென்று யானையாக மாற்றி அய்யனாருக்கு வாகனமாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த சூரபத்மன் பல மாயைகளை உருவாக்கி முருகப்பெருமானுக்கு எதிராகப் போர் தொடுத்தான். இறுதியாக மாமர வடிவெடுத்து கடலில் நின்றான். உமாதேவியார் வழங்கிய வேலை தியானித்து எய்தார் முருகப்பெருமான். மாமரம் இரண்டு கூறுகளாயின. அவற்றில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் ஆயின. மயிலைத் தனது வாகனமாகவும், சேவலைத் தனது கொடியிலும் அமைத்துக் கொண்டார். இவ்வாறு சுரபத்மன் மாறிய நாள் சஷ்டியாகும்.

சூரபத்மன் முதலான அசுரர்களை போரில் வெற்றி கொள்ள முருகப்பெருமானுக்கு உதவிய பைரவரின் பூத வேதாள கணங்கள் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையோடு வீற்றிருக்கும் திருக்கோலத்தைக் காண விரும்பி, பைரவரைக் கோரினர். அந்தக் கோரிக்கையை முருகப்பெருமானிடம் தெரிவித்து விண்ணப்பித்துக் கொண்டார் பைரவர். இதை ஏற்ற முருகப்பெருமான் பைரவரிடம், ‘யாம் சேயூர்  எனும் பதியில் தினமும் ஈசனை ஆராதிக்க உள்ளோம். பூத வேதாள கணங்கள் அப்பதிக்கு வந்தால் யாம் வள்ளி-தெய்வானை சகிதமாக காட்சியளிப்போம்’ என்று தெரிவித்தார். பைரவர் பூத கணங்களை அழைத்துக் கொண்டு சேயூர்வந்தார். சேயூரில் அனுதினமும் அர்த்தஜாமத்தில் கந்தசுவாமியும் இருபத்தி ஏழு பூத வேதாள கணங்களும் சோமநாதரை வழிபடுகிறார்கள் என்பது ஐதீகம்.

 

கோயில் சிறப்புகள்:

  • சேய் என்றால் குழந்தை என்று பொருள். முருகனுக்குரிய பெயர்களுள் சேய் என்பதும் ஒன்று. செய்யூரில் எழுந்தருளியுள்ள கந்தசுவாமியை குழந்தையாக பாவித்து அந்தகக்கவி வீரராகவ முதலியார் ‘சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதினார்.

 

  • சேயூர் என்ற பெயர் நாளடைவில் மருவி செய்யூர் என்று ஆனது.

 

  • மூலவர் கந்தசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சந்நதிக்கு வெளியே சுவீரன், சுஜனன் இருவரும் துவாரபாலகர் களாக நிற்கிறார்கள். கருவறை வெளிப்புறத்தில் இருபுறங்களிலும் முறையே துவார கணபதியும், துவார லட்சுமியும் அருள்பாலிக்கிறார்கள்.

 

  • கந்தர் அனுபூதியில் “வேதாள கணம் புகழ் வேலவனே” என்று அருணகிரி நாதர் பாடியதற்கேற்ப அமைந்த கோவில் இது என்றே சொல்லலாம். முருகன் சூரபத்மனையும் மற்ற அரக்கர்களயும் வதம் செய்வதற்கு உறு துணையாக இருந்த சிவ கணங்கள் இக்கோவிலில் சுற்றி அமைந்து நிற்க முருகன் கந்தச்சுவாமியாய் வள்ளி தெய்வானையுடன் நமக்கு அருள் புரியும் இடம் செய்யூர்.

 

  • கந்தசுவாமி திருக்கோயில் இயற்கை எழில் சூழ்ந்த செய்யூர் கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கருவறை, அந்தராளம், மகாமண்டபம், வெளிப்பிரகாரம் என்று கோயில் அமைப்பு கொண்டது.

 

  • வலப்பக்கம் வள்ளி, இடப்பக்கம் தெய்வானையுடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு நோக்கி ஸ்ரீ கந்தசுவாமி சேவை சாதிக்கிறார்.

 

  • கருவறையின் வடபுலத்தில் கஜலட்சுமியும் தென்புறத்தில் விநாயகர் சிலையும் உள்ளன, சூரியனும், பைரவரும் கருவறைக்கு வெளியில் ஸ்ரீ கந்தசுவாமியை நோக்கியவாறு உள்ளது சிறப்பு

 

  • கருவறையின் வெளிச் சுவரைச் சுற்றி நிர்த்த ஸ்கந்தரும், பிரம்ம சரஸ்தாவும் (பிரம்மாவைச் சிறைப்படுத்திச் சிருஷ்டித் தொழிலைச் செய்ததால் பிரம்மசாஸ்தா), பால ஸ்கந்தரும், சிவகுருநாதரும், புளிந்தரும் (வேடுவர்) என முருகன் பஞ்சகோஷ்ட மூர்த்தியாக நின்று அருள் புரிகிறார்.

 

  • மூலவரின் நேர் எதிரில் வெளிப்பிரகாரத்தில் பெரிய மயில், கொடிமரம், பலிபீடம் உள்ளது.

 

  • 26 நட்சத்திர பூத வேதாள கணங்கள் வெளிப்பிரகாரச் சுவர்களிலும் 1 நட்சத்திரப் பூத வேதாள கணம் மயில் மண்டபத்தின் மேற்புறம் வெளியே மேற்குப்பார்த்த வண்ணமாக மொத்தம் 27 நட்சத்திரப் பூத வேதாள கணங்கள் உள்ளன.

 

  • கந்தசுவாமி கோயிலைச் சுற்றி நான்கு மாட வீதிகளில் நவசந்தி (9) விநாயகர் அமைந்திருப்பது சிறப்பு.

 

  • ஸ்தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் செட்டிகுளம்.

 

  • கார்த்திகை தீபத்தின் முந்தைய நாள் பரணி தீபமும் கார்த்திகை அன்று மகாதீபமும் மறுநாள் நாட்டு தீபமும் கல்தூண் விளக்கில் ஏற்றுவர். இதனைச் “சிவ தீபம்’ என்பர்.

 

  • திருக்கார்த்திகை அன்று மாலையில் மூலவர் கருவறை விமானத்தின் மேல் ஆறு தீபங்கள் ஏற்றுவர். இதனை “முருக தீபம்’ என்பர்.

 

  • சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகள் பழைமை கொண்ட இக்கோயிலுக்கு குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ளான்.

 

  • அந்தகக்கவி வீரராகவ முதலியார், அருணகிரிநாதர், சேறை கவிராஜ பிள்ளை, ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் சேயூர் முருகனைப் பாடிப் புகழ்ந்துள்ளது சிறப்பாகும்.

 

  • வழக்கமாக சிவதலங்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோர் கருவறை சுற்றுச்சுவரில் கோஷ்ட தெய்வங்களாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். . இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். இப்படி கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும்  சுப்பிரமணிய ரூபங்களாய் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

 

  • நுழைவாயில் ராஜகோபுரமின்றி அமைந்துள்ளது. கோயிலினுள் இடதுபுறத்தில் பிரதான கணபதியை தரிசிக்கலாம். பொதுவாக கணபதியின் மேற்கரத்தில் பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்கள் காணப்படும். ஆனால், இங்கு இடது மேற்கரத்தில் ஜபமாலையுடன் அவர் வீற்றிருக்கிறார்.

 

  • கணபதி சந்நதிக்குள் ஒரு சிறிய அறை உள்ளது. முற்காலத்தில் சித்தர் ஒருவர் அந்த அறையில் மரகதலிங்கத்தை வைத்து முறையாக வழிபட்டதாக கருதப்படுகிறது. சந்நதியின் பின்புறத்தில் இரண்டு கோமுகிகள். சிவலிங்கம் இருந்த இடத்தில் தற்போது ஒரு அணையா விளக்கு ஏற்றப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்த விளக்கை வெளிப்புறத்திலிருந்து ஒரு சிறிய துளை வழியாகக் காணமுடிகிறது. அருகில் நாககன்னிகள் சந்நதியும் அமைந்துள்ளது.

 

  • பள்ளியறை உற்சவர், முத்துக்குமாரசுவாமியின் சந்நதி. நான்கு திருக்கரங்களுடன் வலது காலை மயிலின் முதுகின் மீது வைத்தபடி நிற்கிறார் சுவாமி

 

  • இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், பெரியாண்டவர் பூஜையாகும். மயில் மண்டபத்தின் பின்புறத்தில் குலதெய்வ வழிபாடாக பெரியாண்டவர் பூஜை நடத்தப்படுகிறது. சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திர நாட்களில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி பெரியாண்டவர் பூஜையை சிறப்பாகச் செய்கிறார்கள்.

 

திருவிழா: 

ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டி-சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்தர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 9 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,

செய்யூர்,

காஞ்சிபுரம்.

 

அமைவிடம்:

ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் செய்யூர் உள்ளது. செய்யூரில் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. மதுராந்தகத்திலிருந்து நேரடியாக செய்யூருக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம், கல்பாக்கம், கூவத்தூரைத் தாண்டி எல்லையம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிகொண்டால், மூன்று கி.மீ. தொலைவில் செய்யூரை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

 

Share this:

Write a Reply or Comment

one + fifteen =