January 05 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தல்லாகுளம்

  1. அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பிரசன்ன வெங்கடாசலபதி

உற்சவர்   :     ஸ்ரீ நிவாசன்

தாயார்     :     பூ‌தேவி, ஸ்ரீ தேவி

தீர்த்தம்    :     கிணற்று நீர்

ஊர்       :     தல்லாகுளம்

மாவட்டம்  :     மதுரை

 

ஸ்தல வரலாறு:

மதுரையை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தராக இருந்தார். அவர் வெங்கடாஜலபதி கோயிலில் தினசரி பூஜைகள் நடத்தப்படும் ‌போது, தமது மாகலில் இருந்தே அவரை பூஜித்து விட்டு பின்பு உணவு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்காக, திருப்பதியில் பூஜை செய்யும் போது தாமும் தரிசனம் செய்ய வசதியாக கோயிலில் இருந்து அவரது மகால் அமைந்திருந்த பகுதி வரையிலும் வழி நெருகில் மணிகட்டி மண்டபங்களை அமைத்தார்.

கோயிலில் பூஜை ‌தொடங்கிய உடன் அவரது பணியாளர்கள் முதல் மணியை அடிக்க, தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்படும். இறுதியில் மகால் அருகேயுள்ள மணி ஒலித்த பின் இங்கிருந்‌தே வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து விட்டு, உணவினை உண்பார். இந்நிலையில் ஒர் நாள் மணி ஒலிக்காது போக, கோபமடைந்த மன்னர் என்‌ன பிரச்னை என அறிவதற்காக தனது குதிரையில் மணிகட்டி மண்டபம் நோக்கிச் சென்றார்.முன்பு மாதுளை தோட்டமாக இருந்த பகுதி அரு‌‌கே அவர் வந்த போது அவரது குதிரை அவ்விடத்தை விட்டு நகராமல், அங்கேயே மிரட்சி உடன் கணைத்தபடி நின்றது. அப்போது கீழே இறங்கிய மன்னர் அங்கே சுயம்புவாக வீற்றிருந்த ஆஞ்சநேயர் சிலையினைக் கண்டு மனம் வியந்தார்.அப்போது அவரது மனதில் பிரசன்னமாக காட்சியளித்த ஸ்ரீவெங்கடாஜலபதி தினமும் தன்னை தரிசனம் செய் அத்தலத்திலேயே கோயில் ஒன்றினைக் கட்டும் படி அறிவுறுத்தினார். அதன் பி‌ன்பே திருமலைநாயக்கர் மன்னர், இவ்விடத்தில் இக்கோயிலைக் கட்டியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

 

கோயில் சிறப்புகள்:

  • மதுரையின் பிரதானப் பகுதியான தல்லாகுளத்தில் இருக்கும் ஆலயம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில். 17-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது.

 

  • கருவறையில் வெங்கடாசலபதி நின்றகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அருள்கிறார். நேராக நின்று தரிசனம் செய்தால் பெருமாள் மட்டுமே காட்சிகொடுப்பார். அருகில் சென்றால் ஸ்ரீதேவி பூதேவித் தாயாரையும் தரிசனம் செய்து மகிழலாம்.

 

  • இங்கு கருவறையின் அருகிலேயே சுயம்பு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயர் உக்கிர ஆஞ்சநேயர் என்கிறார்கள். ஒரே கல்லில் உருவான மூர்த்தி இவர். வாலில் மணியும் கையில் தாமரை மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தில் அபய முத்திரையும் காட்டி அருள்கிறார் ஆஞ்சநேயர்.

 

  • இந்த அனுமன் உக்கிர மூர்த்தியாக அருள்வதால் இவரின் உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் எதிரே சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 

  • தெற்கு பார்த்தவாறு பெருமாள் வீற்றிருக்கும் ஒரே வைணவ தலமாகும்.

 

  • 108 திவ்ய தேசங்களில் தல்லாகுளம் பெருமாள் கோயில் இல்லை எனினும் குறிப்பிடத்தகுந்த பழமை சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

 

  • இக்கோயில் மதுரை கள்ளழகர் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்டதாகும். இக்கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளமும் வைகையோடு இணைக்கப்பட்டிருந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டு காணப்படுவது இதன் தனிச்சிறப்பு.

 

  • அழகர் மலையில் இருந்து இறங்கி வந்து மதுரை வைகையில் இறங்க வரும் கள்ளழகர் தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் ஓய்வெடுப்பார்.

 

  • இத்தலத்தில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதி, திருமலை நாயக்கர் மன்னருக்கு பிரசன் னமாக காட்சியளித்ததால், பிரசன்ன வெங்கடாஜலபதி என அழைக்கப்படுகிறார்.

 

  • சித்ரா பவுர்ணமி திருவிழாவின்‌ போது, தங்க குதிரையில் பவனி வரும் அழகர்,இக்கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் மாலை சாத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பே ஆற்றில் இறஙகச் செல்வார்.

 

  • தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசன பூஜை ( கோமாதா பூஜை) நடைபெறுகிறது.

 

திருவிழா: 

தமிழ் புத்தாண்டு, ஆனிப்பூரம், புரட்டாசி பிரமோத்சவம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், ராப்பத்து உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்,

தல்லாகுளம் – 625 002,

மதுரை மாவட்டம்.

 

போன்:    

+91 452 2530329

 

அமைவிடம்:

மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ., தூரத்தில், தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

two × one =