December 31 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சுருளிமலை

  1. அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பூதநாராயணன்

தல விருட்சம்   :     புலிச்சிமரம்

தீர்த்தம்         :     சுரபிநதி

புராண பெயர்    :     சுருதிமலை

ஊர்            :     சுருளிமலை

மாவட்டம்       :     தேனி

 

ஸ்தல வரலாறு:

திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், சுருளிமலைப் பகுதியில் இருந்த பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்துகொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து வரும்படி, தன்னிடம் அடிமைப்பட்டிருந்த சனீஸ்வரரை அனுப்பி வைத்தான். அவரும் வேறு வழி இல்லாமல் தன் தலைவிதியை நொந்தபடி சுருளிமலைப் பக்கம் வருகிறார். அதை உணர்ந்துகொண்ட பெருமாள் தம்முடைய சக்ராயுதத்தை ஏவி, சனீஸ்வரரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திவிடுகிறார். அப்படி சனீஸ்வரர் பாதி வழியில் தடுத்து நிறுத்தப்பட்ட ஊர்தான் குச்சனூர். பெருமாளின் சக்ராயுதம் தடுத்துத் தாக்கியதால், குச்சனூர் சனீஸ்வரரின் இடது கரம் சேதம் அடைந்தது. அந்தக் கோலத்திலேயே சனீஸ்வரர் இங்கே காட்சி தருகிறார்.

சனீஸ்வரர் தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி அறிந்த ராவணன், தேவர்களை அழிப்பதற்காக அசுரப் படைகளை சுருளிமலைக்கு அனுப்பி வைத்தான். தான் அருள்புரியும் இடத்தில் அசுரர்கள் நுழைவதா என்று சினம் கொண்ட பெருமாள், பூத வடிவம் கொண்டு விசுவரூபம் எடுத்து, அசுரர்களை வதம் செய்தார். அன்று முதல் இந்தத் தலத்து இறைவன் பூதநாராயண பெருமாள் என்று திருப்பெயர் கொண்டார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

  • இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர்.

 

  • இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

 

  • இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

 

  • இத்தலத்தில் விநாயகர், வல்லபகணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

  • பூத வடிவம் கொண்டு நின்ற பெருமாளை பிரமனும் சிவபெருமானும் சாந்தப்படுத்தினர். மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட மூன்று கடன்களில் ஒன்று பித்ரு கடன். அதை நிறைவேற்றுவதற்கு உகந்த தலமாகக் கருதப்படுகிறது இந்தத் தலம். காரணம், காசியைப் போலவே இந்தத் தலத்திலும் சுருளியாறு, அருவியாறு, வெண்ணியாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இந்தச் சங்கம தீர்த்தத்தில் நீராடி, பூதநாராயண பெருமாளை வழிபட்டு, அவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால், பித்ருக்களின் சாபம் நீங்கி நலம் பெறலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

 

  • வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் ஆகிய தலங்களைப் போலவே, மூன்று நதிகளும் ஒன்று சேரும் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பது மிகவும் புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு சிறு பகுதி இங்கே கரைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

 

  • சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர். சுருளிமலையை தேவலோக கிரி என்று கூறுவர்.

 

  • மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக தகவல் உண்டு.

 

  • இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார்.

 

  • புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ள இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

 

திருவிழா: 

சித்திரையில் மூன்று வார திருவிழா. ஆடி அமாவாசை, தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமியில் இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில்,

சுருளிமலை – 625 516

தேனி மாவட்டம்.

 

போன்:    

+91- 4554- 276715

 

அமைவிடம்:

தேனியில் இருந்து 51 கி.மீ., கம்பத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் சுருளித்தீர்த்தம் உள்ளது. கம்பத்தில் இருந்து குறித்த நேரத்தில் மட்டும் சிட்டி பஸ்கள் செல்கின்றன. மினிபஸ்களும், வேன்களும் அவ்வப்போது செல்கின்றன.

 

Share this:

Write a Reply or Comment

six + 16 =