- அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம் : மகாமகம், காவிரி
புராண பெயர் : திருக்குடமூக்கு
ஊர் : கும்பகோணம்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
முன்பொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்தது. அப்போது பிரம்மதேவர், சிவபெருமானிடம், தான் படைப்புத் தொழிலை எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டார். சிவபெருமான், பிரம்மதேவரிடம், “புண்ணிய தலங்களில் இருந்து மணலைச் சேகரித்து, அமுதத்தோடு சேர்த்து மாயகும்பத்தை செய்ய வேண்டும். பிறகு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து, நீரில் மிதக்க விடவும்” என்று கூறினார். அதன்படி பிரம்மதேவரும் கும்பத்தை செய்து, வெள்ளத்தில் மிதக்க விட்டார். கும்பம் ஓரிடத்தில் தங்கியதும், சிவபெருமான், அதன் மீது பாணத்தை எய்தார். அப்போது கும்பம் சிதைந்து, அதிலிருந்த அமுதம் அனைத்துப் பகுதியிலும் பரவியது. வெண்மணலுடன் கலந்த அமுதம் ஒரு லிங்கமாக உருவானது. அந்த லிங்கமே ‘கும்பேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. கும்பத்தை அலங்கரித்த மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய் முதலான பொருட்கள், காற்றால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் தனித்தனி லிங்கங்கள் தோன்றின. அவை தற்போது தனிக்கோயில்களாக விளங்குகின்றன.
மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார். தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, “கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி” என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.
சிவபெருமானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. வராக வடிவம் கொண்டு, சிவபெருமானின் அடியைத் தேடிச் சென்ற திருமால், அதைக் காணாது சோர்ந்து மீன்கள் நிறைந்த கடலுக்கு (பாற்கடல்) வந்து இளைப்பாறுகிறார். அன்னப் பறவை வடிவம் கொண்டு, உயர உயரப் பறந்து, சிவபெருமானின் முடியைக் காணாது, களைத்த பிரம்மதேவர், நிறைவாக அன்னையின் நடையால் கவரப்பட்டு, அன்னையைப் பின் தொடர்கிறார். மங்களாம்பிகையை வேண்டி, அவர்வழியில் செயல்பட்டால், அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்ற பொருள்பட, பிள்ளைத் தமிழ் அமைந்துள்ளது.
கோயில் சிறப்புகள்:
- அமிர்த கும்பம் அடங்கிய கலசம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்கு தங்கியது. சிவபெருமான் கிராத மூர்த்தி வேடம் தாங்கி ஒரு பாணமெய்தி குடத்தை உடைத்து சிருஷ்டியை துவக்கி வைத்தார். குடம் தங்கிய இடமாதலால் இத்தலம் ‘குடமூக்கு’ என்று பெயர் பெற்றது. இக்கோயில் ‘ஆதி கும்பேஸ்வரர் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.
- மூலவர் கும்பேஸ்வரர், லிங்க வடிவத்தில் காட்சி தருகின்றார். பார்ப்பதற்கு கும்பத்தை கவிழ்த்து வைத்தது போல் உள்ளது. சுவாமி தன்னைத் தானே பூசித்துக் கொண்ட தலம். இது ஐந்தாம் நாள் பிரம்மோற்சவத்தின்போது நடத்திக் காண்பிக்கப்படுகிறது.
- ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் உடையது. கிழக்கிலுள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமுடையதாகும்.
- இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பௌர்ணமை நாட்களில் மட்டும் புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படும்.
- கொடிக் கம்பத்திற்கருகில் லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சந்நிதி இருக்கிறது.
- அம்பிகை ‘மங்கள நாயகி’ என்று வணங்கப்படுகின்றார்.
- அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோயிலில் கோயில் கொண்டுள்ள மங்களாம்பிகை, விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மந்திரிணி சக்தி பீடமாகவும் அழைக்கப்படும் இத்தலம், சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும்.
- கும்பேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு.
- திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை ‘வளர் மங்கை’ என்று அழைக்கிறார்.
- சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை ‘மந்திரபீடேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
- கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.
- விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.
- கும்பேஸ்வரர் கோயிலில் ஆவணி ஞாயிறு தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையாள ஆண்டின் (கொல்லம்) தொடக்க மாதமாக ஆவணி (சிம்மம்) மாதம் உள்ளது. சூரியனின் நிலையைப் பொறுத்தே அந்த ஆண்டின் தட்ப வெட்ப நிலை அமையும் என்பதால் சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ஆவணி மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
- சிவபெருமானும் மங்களாம்பிகையும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இத்தல விநாயகர் ‘ஆதி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்,
- இங்குள்ள கார்த்திகேயர் ஆறு முகம், ஆறு கரங்களுடன் உள்ளார். சூரசம்ஹாரத்துக்குச் செல்லும் முன், முருகப் பெருமான் இங்கு வந்து மந்திரபீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார்.
- இத்தல கார்த்திகேயரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
- வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த கும்பத்தை, சிவபெருமான் உதைத்ததால், இத்தலத்தில் கிராத மூர்த்திக்கு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. மகம் நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. கோயில் முன்பு பொற்றாமரை குளமும் அமைந்துள்ளது. மகாமக திருவிழாவின்போது குடந்தை வரும் பக்தர்கள், பொற்றாமரைக் குளம், மகாமகக் குளம், காவிரி ஆகியவற்றில் நீராடுவது வழக்கம்.
- குடந்தை நகரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமகக் குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் அமிர்தம் நிறைந்த கும்பத்தில் இருந்து அமிர்தம் பொங்கியபோது, ‘பூமி குழிந்து தாங்குக’ என்று சிவபெருமான் நினைத்ததால், அமிர்தம் திரண்டு மகாமகக் குளத்தில் தங்கியது.
- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரிய பகவான் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பௌர்ணமி நாளில் கும்பகோணத்தில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோஷிணி, சரயு ஆகிய நதிகள் இங்கு வந்திருந்து நீராடி, தங்களது பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.
- குடந்தையை மையமாகக் கொண்டு குடந்தை சப்தஸ்தான விழா நடைபெறும். கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில், சாக்கோட்டை திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி, கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், சுவாமிமலை சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் ஆகியன சப்தஸ்தான கோயில்கள் ஆகும். சித்திரை மாதம் மகாமகக் குளத்தில் நடைபெறும் சப்தஸ்தான நிகழ்ச்சியில், தீர்த்தவாரிக்குப் பிறகு, கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இந்த ஏழு தலங்களுக்கும் பல்லக்கில் எழுந்தருள்வர்.
- மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.
- இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.
- இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.
- மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இத்தலம் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் இக்கோயிலில் லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்லச் செல்ல ஊசி வடிவிலும் காணப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் கல் நாகஸ்வரம் உள்ளது.
- இந்திரன் முதலான திக் பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிப முனிவர் உள்ளிட்ட பலர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
திருவிழா:
மாசி மகத்தில் தீர்த்தவாரி, பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழா, சித்திரையில் சப்தஸ்தான நிகழ்ச்சி, வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கும் இங்கு விமரிசையாக இருக்கும். ஆடிப்பூர தினங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மாசி மக திருவிழாவில் அசுவதி தினத்தில் கொடியேற்றம் நடைபெற்று, எட்டாம் நாளில் வெண்ணெய்த் தாழி உற்சவம், ஒன்பதாம் நாளில் தேரோட்டம், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில்,
கும்பகோணம்- 612 001,
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91-435- 242 0276.
அமைவிடம்:
கோயில் கும்பகோணம் நகரின் மையத்தில் உள்ளது.