அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
அம்மன் : உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம் : தில்லைமரம்
புராண பெயர் : தில்லை
ஊர் : சிதம்பரம்
மாவட்டம் : கடலூர்
ஸ்தல வரலாறு:
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு “ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லை வனக்காட்டில் உள்ள சுயம்பு லிங்கத்தை வணங்குமாறு” முனிவர் சொன்னார். இதையடுத்து மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள லிங்கத்தை தினமும் பூஜை செய்தார். பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை.
பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம் என்று கூறியருளினார். மேலும் புலிக்கால், புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன் என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
சிதம்பர ரகசியம்:
சித் + அம்பரம் = சிதம்பரம். சித் = அறிவு, அம்பரம் = வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள். சித்ர சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும்
சித்தர்கள் கண்டுபிடித்த மனித உடலின் தத்துவத்தின் படி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இருக்கும் 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் சுவாசிக்கும் மூச்சின் சரியான எண்ணிக்கையாகும். அக்கூரையில் அடிக்கப்பட்டிருக்கும் 72,000 ஆணிகள் மனித உடலில் ஓடும் 72,000 நாடி, நரம்புகளை குறிப்பதாகும். இக்கோவிலில் இருக்கும் 9 வாயில்கள் மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிக்கிறது. “சிவாயநம” எனும் 5 எழுத்துக்களை குறிக்கும் பொன்னம்பலத்தின் 5 படிகள், 64 கலைகளை குறிக்கும் 64 சாத்துமரங்கள், 96 தத்துவங்களை குறிக்கும் 96 ஜன்னனல்கள், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 5 பூதங்களை குறிக்கும் வகையில் இக்கோவிலின் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் சிறப்புகள்:
- இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator )
- பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
- பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை பஞ்சாட்சர படி என்று அழைக்கப்படுகின்றது, அதாவது சி,வா,ய,ந,ம என்ற ஐந்து எழுத்தே அது. கனகசபை பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது.
- பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
- சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
- சிதம்பரம் கோவில் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரியமான ஒரு இடம். கோவிலில் கொஞ்சம் புதிதாக தெரியும் பகுதியானது சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் கோவிலின் புராதன உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்பதுபற்றி யாருக்குமே தெரியவில்லை. 3500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று மக்களால் கருதப்படுகிறது.
- சுவிட்சர்லாந்து நாட்ட்டு CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச்செய்வது, பிளப்பது என அணுவை பற்றிய எல்லாவிதமான ஆராய்ச்சிகளும் இங்கேதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்படடு இருக்கிறது. ஏனெனில் இப்போது அவர்கள் செய்து வரும் செயல்களுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில் உள்ள வேறுஎதுவும் அருகில்கூட வரவில்லை என்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
- சிதம்பரம் கோவிலின் ஒரு சிறப்பம்சமாக நடராஜர் இருந்தாலும், ஆகாய தத்துவத்தின் அடையாளமாக வெற்றிடமே மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் கோவிலை பிரதிஷ்டை செய்தவர் நவீன யோகக் கலையின் தந்தையாக அறியப்படும் பதஞ்சலி முனிவரேதான்.
- இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.
- இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.
- கோவிலுக்குள் திருமூலட்டானக் கோவில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.
- நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம்.
- இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி.
- பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயம் தலம் ஆகும்.
- மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது.
- சைவத்தில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைக் குறிக்கும்.
- சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 1 வது தேவாரத்தலம் ஆகும்.
- நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது தனிச்சிறப்பு..
- சிவன், விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள திருத்தலம் இது.
- இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
- சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோவில் நடராஜர் கோவில் அருகில் உள்ளது.
- 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம். நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம்.
- இக்கோவிலுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய (பஞ்ச சபை) 1. சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. இராசசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
- இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம்.
- இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம்.
- பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோவிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோவிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்”. பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே தில்லை மூலவாரயிவர் என்று சொல்வதுண்டு.
- அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார்.
- மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்து பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது. திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம்.
- திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா என அப்பர் கூறியுள்ளார்.
- வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோவிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார். தில்லைவாழ் அந்தணர்களை கொண்டே நந்தனாரை வரவேற்க வைத்து சிதம்பரம் கருவறையில் நந்தனாரை தன்னுள் ஏற்று கொண்டார் ஈசன். சிதம்பரத்தில் ஈசன் உடன் கலந்து முத்தி பெற்ற பெருமை மாணிக்கவாசகருக்கும் நந்தனாருக்கும் மட்டுமே கிடைத்தது. ஆன்மீகத்தில் சாதி பாகுபாட்டை நம் ஆன்மீகம் எங்குமே சொல்லவில்லை.
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோவில் கொண்டுள்ளார். இரவு பத்து மணி அளவில் நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும். அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.
- சோழ மன்னர்களின் கட்டுமான திறனுக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாகும். பல சோழ மன்னர்கள் எல்லாக்காலங்களிலும் இக்கோவிலை ஆதரித்து வந்துள்ளனர். முதலாம் பராந்தக சோழ மன்னன் 9 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் சிவபெருமானின் சந்நிதிக்கு பொன் கூரையை வேய்ந்தான். பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டிய மன்னனும் இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் கம்போடியா நாட்டு அரசன் இக்கோவிலின் இறைவனுக்கு தங்கம் மற்றும் மாணிக்க கற்களை கொண்ட நகைகளை தனது நாட்டு தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பியதாக கல்வெட்டு குறிப்புக்கள் கூறுகின்றன.
திருவிழா:
10 நாள் திருவிழா – திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும்.
10 நாள் திருவிழா – ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர் , சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள்.
சிதம்பரம் திருத்தலத்தில் நடைபெறுகின்ற பல உற்சவங்களுள் தைப்பூசத்திருநாளில் நடைபெறும் திருப்பாவாடை உற்சவமும் ஒன்று. இதற்கென்று ஒரு சாசனமும் எழுதப்பட்டுள்ளது. இந்த சாசனத்தில் திருப்பாவாடை உற்சவத்தை தைப்பூசத்தன்று விமரிசையாக நிகழ்த்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நிலம் தானம் செய்யப்பட்டதாக பல குறிப்புகள் இருக்கின்றன.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில்,
சிதம்பரம்- 608 001
கடலூர் மாவட்டம்.
அமைவிடம்:
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.நகரின் நடுவிலேயே கோயில் அமைந்துள்ளது.