அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஸ்ரீநிவாசப் பெருமாள்
உற்சவர் : ஸ்ரீநிவாசப் பெருமாள்
தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தீர்த்தம் : பத்ம புஷ்கரிணி
ஊர் : குடவாசல்
மாவட்டம் : திருவாரூர்
ஸ்தல வரலாறு:
பூலோகத்தில் பிரளய காலம் நெருங்க ஆரம்பித்த வேளை, அச்சமடைந்த பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சென்று சதுர் வேதத்தையும், சிருஷ்டிக்கான வித்துக்களையும் பாதுகாத்து தரச்சொன்னார். அமிர்தம் மற்றும் மண் கலந்து செய்த குடம் ஒன்றில் சிருஷ்டிக்கான வித்துக்களை நடுவிலும், அதைச் சுற்றி சதுர்வேதங்களையும் வைத்து, அமிர்தத்தையும் அதனுடன் சேகரித்து அதன் மேல் மாவிலை, தேங்காய் வைத்து மேருமலையில் உச்சியில் வைத்து ஆராதித்து வருமாறு மகாவிஷ்ணு யோசனை கூறினார். பூலோகத்தில் பிரளயம் ஏற்பட்டு கடல்நீரால் சூழப்படும் போது அந்தக் குடமானது தென்திசை நோக்கி மிதந்து சென்று ஓரிடத்தில் நிலைபெறும். அமிர்த குடம் நிலை பெற்ற இடத்திற்குச் சென்று உமது சிருஷ்டி வேலையைத் தொடங்கலாம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படியே அமிர்தகுடம் சென்றடைந்த ஸ்தலம் தான் குடவாசல். அந்த குடத்தை உருட்டி வந்த நதியின் பெயர் குடமுருட்டி நதி. மகாவிஷ்ணு உத்தரவுப்படி தனது சிருஷ்டித் தொழிலை பிரம்மா மீண்டும் தொடங்கிய இடம்தான் குடவாயில். அதுவே தற்போது மருவி குடவாசல் என்றானது.
முன்னொரு காலத்தில், குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, நான் எப்பொழுதும் தங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, கலியுகத்தில், கடத்துவாரபுர சேத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன் என்று கூறினார். அதன்படியே தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசராக – திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழு மலையான், குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் – ஈசான்ய பாகத்தில் தேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை சேதப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோயில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள்.
திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோயிலும்; தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோயிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும் என்று கூறி மறைந்தார். கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பின்னர் சுபமுகூர்த்தத்தில் பூமிபூஜை செய்து, பொன் ஏர் பூட்டி ஈசான்ய பாக நிலத்தை உழத் தொடங்கினர். ஓரிடத்தில் ஏர் தடைப்பட்டு நின்றது. அந்த இடத்தில் குடங்களிலிருந்த பாலை ஊற்றச் சொன்னார் மன்னர். அப்படியே செய்யப்பட, அங்கே வடக்கு நோக்கி எழுந்தருளியிருந்த பெருமாளின் திருமேனியைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். பூஜை செய்து அந்த விக்ரகத்தை எடுத்து, பெருமாள் அருளியபடியே வடக்கு நோக்கிய ஆலயம் அமைத்து, திருமலையைப் போன்றே வைகானஸ ஆகமப்படி பிரதிஷ்டை செய்து வைத்தார் கிருஷ்ண தேவராயர். ஆலயப் பராமரிப்புக்கு வேண்டிய நிலங்களை நிவந்தமாகக் கொடுத்து, நித்திய பூஜைகளைச் செய்து வருவதற்கு சில குடும்பங்களை அங்கேயே குடியமர்த்தினார் கிருஷ்ண தேவராயர்.
கோயில் சிறப்புகள்:
- பெருமாளே விரும்பி கோயில் கொண்ட தலம் என்னும் சிறப்போடு, வடக்கு நோக்கி பெருமாள் கோயில் கொண்டுள்ள தலம் என்னும் சிறப்போடும் இத்தலம் விளங்குகிறது.
- இங்கு தாயாருக்கு தனி சன்னதி இல்லாமல் எப்போதும் பெருமாளுடன் இணைந்து திருமணக்கோலக் காட்சி தருகிறார்.
- மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று வடக்கு நோக்கிய சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலனை வடக்கு நோக்கிய இத்தலத்தில் தினமும் பெறலாம்.
- இவ்வாலயத்தில் நடைபெறும் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் திருப்பதி திருமலையில் நடப்பது போன்றே நடத்தப்படுகின்றன.
- திருமலை பெருமாளைப்போலவே இத்தலத்துப் பெருமாளும் சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.
- இங்கு நடைபெறும் ஏகாந்த சேவையும் (அர்த்த சாம பூஜை) சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
- இங்கு நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், நாதமுனிகள், திருமங்கையாழ்வார், ஆண்டாள், நிகமாந்த மாகதேசிகர், ஸ்ரீராமானுஜர் ஆகியோர் தனிச் சன்னதிகளில் சேவை சாதிக்கிறார்கள்.
- உற்சவத்தின் போது பெருமாளுடன் வேதாந்த தேசிகளும் தனி வாகனத்தில் வீதியுலா வருவது வேறெங்கும் காணாது சிறப்பு. புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில் இவருக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
திருவிழா:
புரட்டாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, திருவோணம்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91 94439 61467,81482 65469
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 20 கி. மீ. தூரத்தில் குடவாசல் உள்ளது.