February 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சின்னாளப்பட்டி

அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில்

 

மூலவர்         :     சுப்பிரமணியசுவாமி

அம்மன்         :     வள்ளி-தெய்வானை

தல விருட்சம்   :     வேங்கை மரம்

புராண பெயர்    :     சின்னாள் பட்டி

ஊர்             :     சின்னாளப்பட்டி

மாவட்டம்       :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு :

பிரம்மரிஷி பட்டம் ஒன்றே நோக்கமாக கொண்டு கடும்தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர். அவர் முன் தோன்றிய பரமேஸ்வரர், தவமுனியே பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை உனக்கு சொல்ல வல்லவள், பாலதிரிபுரசுந்தரிதான். எனவே அவளை எண்ணி தவம் செய் என சொல்லி மறைந்தார். அதன்படியே தவம் செய்த விஸ்வாமித்திரர் தன் முன் ஜல் ஜல் என சலங்கை ஒலி எழவே, விழித்துப் பார்த்தார். அழகே வடிவான சின்னஞ்சிறுமி ஒருத்தி அவர் எதிரே நின்றிருந்தாள். தெய்வீகம் கமழ்ந்த அவளது திருமுகத்தை பார்த்ததுமே முனிவருக்குப் புரிந்துவிட்டது. ஈசன் சொன்ன பாலதிரிபுரசுந்தரியே இப்படி சிறுமி வடிவில் தோன்றியிருக்கிறாள் என்பது அந்த தெய்வீகக் குழந்தையை பணிந்தார். விஸ்வாமித்திரா பிரம்மரிஷி பட்டத்திற்காகவா இப்படி உடலை வருத்தி கொண்டாய் இதற்கு சுலபமான வழி இருக்கிறது. நீ எனக்கு ஒரே ஒரு குங்குமப் பொட்டு வை. அதன் பலனாகவே உனக்கு அந்தப் பட்டம் கிடைத்துவிடும் என்கிறாள் தேவி.

 

மனம் நெகிழ்ந்து மகிழ்ந்த மகரிஷி, தாயே உங்களுக்கு பொட்டு வைத்துவிட வேண்டும், அவ்வளவுதானே. இதோ இப்போதே திலகம் இட்டுவிடுகிறேன் என்று பணிந்தார். சிவனது வழிகாட்டலின்படி குங்குமம் தயாரித்து அதை தேவியின் திருமுகத்தில் திலகம் போல் இட்டார். அவர் திலகம் இட்டதை சரிபார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். சிறுமி வடிவில் இருந்த அம்பிகை, குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. அடுத்த நொடி, அந்தக் குளத்தில் இருந்து தெய்வீக ஒளி பொருந்திய முகம் ஒன்று தோன்றியது. விஸ்வாமித்திரர், அவ்வதனத்தைக் கைகூப்பி வணங்கினார். அடுத்தடுத்து அதே போன்று மேலும் மூன்று முகங்கள் தோன்றின. அனைத்தும் இணைந்து, நான்கு முகங்களுடன் கூடிய ஒளிவெள்ளம் நிறைந்த தெய்வத் திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, நான்முக முருகா வருக வருக என்று அழைத்து அணைத்து கொண்டாள் தேவி.

 

ஆறுமுகனை தன் பொருட்டு நான்முகத் தெய்வமாக தேவி படைத்ததை கண்டு மெய்சிலிர்த்த விஸ்வாமித்திரர், மனம் உருகினார். முருகப் பெருமானே கந்தா கதிர்வேலா என்று பாடி ஆடித் துதித்துப் பரவசமானார். உடனே திரிபுரசுந்தரி, விஸ்வாமித்திரா ஈஸ்வரன் அன்று என் அம்சம் இன்றி ஆறுமுக வேலனை படைத்தார். நான் இன்று அவரது அம்சம் இன்றி நான்முக வேலனைப் படைத்தேன். இவனே நீ வேண்டும் வரத்தினை அருள்வான் என்று கூறி மறைந்தாள். நான்முக முருகனின் தாள் பணிந்த முனிவர் அடுத்த கணமே தனது உள்ளத்தில் இருந்த தான் என்ற அகந்தை அழிவதை உணர்ந்தார். அதேசமயத்தில் கொஞ்சம் தொலைவில் கல் மழை பெய்யத் தொடங்கியது. அந்தக் கல் மழையை அவருக்குக் காட்டிய நான்முக முருகன், முனிவரே அங்கே வந்தால், ஆவன செய்வோம் என்று சொல்லிவிட்டு மறைந்தார். அப்படியே கல் மழை பெய்த இடம் நோக்கி நடந்த முனிவருக்கு சிறுவன் ஒருவன் அடையாளம் காட்ட, அவர் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு முருகன் கோயில் இருந்தது. அங்கே பாலதிரிபுர சுந்தரியும், நான்முக முருகனும், ஒன்றாக நின்று விஸ்வாமித்திரருக்குக் காட்சி தந்தார்கள்.

 

இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேனே என்று தன் தவறுகளை உணர்ந்து வருந்தினார். அப்போது, பிரம்மரிஷி விஸ்வாமித்திரரே என்று குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார். அங்கே கோயில் வாசலில் வசிஷ்டர் நின்று கொண்டு இருந்தார். வசிஷ்ட முனியே நான் திருந்திவிட்டேன். உங்கள் மேல் பொறாமை கொண்டு அல்லலுற்ற நான் ஈஸ்வரியின் அருளாலும், சதுர்முக முருகனின் அனுகிரகத்தாலும் அகந்தை நீங்கி, அவர்களின் அருள் பெற்றேன். இப்போது தங்கள் ஆசிவேண்டுகிறேன் என்று கூறிப்பணிந்தார் விஸ்வாமித்திரர். அவருக்கு பிரம்மரிஷி பட்டம் தந்து ஆசி ர்வதித்தார் வசிஷ்டர். திண்டு திண்டாக கல்மழை பெய்த தலம், திண்டுக்கல். ஆடு மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகன் வழிகாட்டிய படியால் அவனது கோயில் இருக்கும் இடம் சின்னாள் பட்டி இன்று சின்னாளப்பட்டி. திண்டுக்கல் சின்னாளப்பட்டி தவிர, அநேகமாக வேறு எங்கும் நான்கு முகம் கொண்ட முருகன் எழுந்தருளவில்லை என்பது இத்திருத்தலத்தின் தனிசிறப்பு என்கிறது தல வரலாறு.

 

கோயில் சிறப்புகள் :

  • மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.

 

  • தென்திசை பார்த்து அமைந்துள்ள சதுர்முக முருகனுக்காக எதிரே கோயிலின் முன்புறம் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

 

  • வலது கரத்தில் சங்கு முத்திரையும், இடது கரத்தில் சக்கர முத்திரையும் கொண்டவர். மார்பில், கௌரி சங்கரர் ருத்ராட்சம் சூடியுள்ளார்.

 

  • பிரணவத்தின் பொருளைக் கேட்டு, அதற்கு விளக்கம் தெரியாமல் தவித்த பிரம்மாவை சிறையில் அடைத்தார் அல்லவா, ஞானவேல் முருகன்! அதை நினைவுகூரும் வகையில் இங்கே, இந்தத் தலத்தில் நான்முகனாக, சதுர்முகத்துடன் அமைக்கப்பட்டுள்ளார் முருகப்பெருமான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

 

  • இத்திருத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சரியாக எட்டு மணிக்கு சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த “செம்பால் அபிஷேகம்” செய்வது இத்தலத்தின் சிறப்பு.

 

  • இங்கே உள்ள ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.

 

  • மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார். அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள். வெளி பிராகாரத்தில் வைஷ்ணவி தேவிக்கும், சதுர்முக ஆஞ்சநேயருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வேங்கை மரம் உள்ளது.

 

திருவிழா :

வைகாசி விசாகம், கந்த சஷ்டி 6 நாட்கள் திருக்கல்யாணம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள், ஆடி கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதந்தோறும் பூசம், கார்த்திகை, மிருகசீரிஷ நட்சத்திரம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி சிறப்பு பூஜைகள். இதுதவிர பிரதோஷம், சஷ்டி, வளர்பிறை அஷ்டமி பைரவர் பூஜை யாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சதுர்முக முருகன் திருக்கோயில்,

சின்னாளப்பட்டி

திண்டுக்கல் -624301

 

போன்:    

+91 9944059802, 9003754242.

 

அமைவிடம் :

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் கண்டாங்கி சேலைக்கு பெயர் பெற்ற சின்னாளப்பட்டி என்ற ஊர் உள்ளது

 

 

Share this:

Write a Reply or Comment

1 + fourteen =