December 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சத்தி முற்றம்

  1. அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சிவக்கொழுந்தீசர், தழுவக்குழைந்த நாதர்

அம்மன்         :     பெரியநாயகி

தீர்த்தம்         :     சூல தீர்த்தம்

புராண பெயர்    :     சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம்

ஊர்             :     திருச்சத்தி முற்றம்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

காஞ்சிபுரத்தில் அம்பிகை இறைவனைத் தழுவக் குழைந்தது போலவே திருசத்திமுற்றத்திலும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஒருமுறை அம்பிகையை பூலோகத்தில் இத்தலத்தில் தம்மை பூஜை செய்யுமாறு பணித்தார். அம்பிகையும் இத்தலத்துக்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்து வந்தாள். இறைவன், அம்பிகையை சோதிக்க விரும்பி, காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். ஆற்று வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்றுவிடுமோ என்று அஞ்சிய அம்பிகை, இறைவனை ஆரத் தழுவினார். இறைவன், அம்பிகைக்கு காட்சி கொடுத்து அம்மையை தழுவக் குழைந்தார். சக்தி, இறைவனை தழுவக் குழைந்ததால், இத்தலம் திருசத்திமுற்றம் என்று அழைக்கப்படுகிறது.

மேற்கொண்டு இத்தலத்தில், இறைவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த அன்னையின் பக்திக்குக் கட்டுப்பட்டு, அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் சோதி ரூபமாகக் காட்சி கொடுத்தார். தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே என்று உணர்ந்த அம்பிகை மகிழ்ந்து, அத்தீப்பிழம்பையே தழுவிக் குழைந்தாள். இறைவன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலித்து, தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார். அன்னை தழுவி முத்தமிட்டதால், “சக்தி முத்தம்” என்பது மருவி “சத்தி முற்றம்” என்று ஆகி இருக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலவர் சிவக்கொழுந்தீசர், கருவறையின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அம்பிகை, சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது.

 

  • அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கிவைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம், வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.

 

  • விதிவசத்தால் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதியர், தழுவக்குழைந்த அன்னைக்கும், ஈசனுக்கும் சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர். கணவன் மனைவி உறவு பலப்படவும், பிரிந்து இருக்கும் தம்பதியர் கூடி வாழவும் இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

 

  • இந்த ஆலயம், கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலில் வல்லபகணபதி காட்சி அளிக்கிறார்.

 

  • முதல் கோபுர வாயிலைக் கடந்தால், பெரிய வெளிப் பிராகாரத்தைக் காணலாம். அடுத்துள்ள இரண்டாவது கோபுர வாயிலில், விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன.

 

  • மூலவர் சிவக்கொழுந்தீசர், சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் காட்சி கொடுக்கிறார். திருமேனியில் மூன்று சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. தெரியாதவர்கள் குருக்களிடம் கேட்டால், தீப ஆராதனை செய்து காட்டுகிறார்.

 

  • அன்னை, பெரியநாயகியாகத் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

 

  • சுவாமி சந்நிதிப் பிராகாரத்தில் உள்ள பைரவர் சந்நிதியில், பைரவர் நிஜமாகவே ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கிறார். கண்ணையும் கருத்தையும் கவரும் அழகு வாய்ந்த சிற்பம். மற்ற கோயில்களில் சிறு சிற்பமாகக் காணப்படும் காவல் தெய்வமான பைரவர், இங்கே நிஜமான ஒரு ஆள்போல இருக்கிறார்.

 

  • நடராஜர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளும் பார்க்க வேண்டியவை. உட் பிராகாரத்தில் தலவிநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன.

 

  • இந்தத் தலத்தில் உள்ள முருகப் பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக மயில் மீது அமர்ந்த கோலத்தில், கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

 

  • அப்பர் இத்தலத்தில் தங்கி ஆலயத் திருப்பணி செய்துகொண்டு, இறைவனை வணங்கித் தொழுது வந்தார். ஒருநாள் திருநாவுக்கரசர், இறைவனை விழுந்து வணங்கி இறைவன் திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருள வேண்டும் என்று பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். இறைவன் சிவக்கொழுந்தீசர், “திருநல்லூருக்கு வா” என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்பருக்கு இவ்வாறு அருள் புரிந்த தலம் திருச்சத்திமுற்றம்.

 

  • செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி ஆவார். முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “ஓவாது சித்தம் உற்ற யோகம் செழும்பொழிலில் பூவை செயும் சத்திமுற்றம் மேவும் சதாசிவமே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

ஆனிமாதம் முதல் நாள் முத்துப்பந்தல். தைமாதம் ரதசப்தமி, கார்த்திகையில் சோமவார வழிபாடு சிறப்பு.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்,

திருச்சத்திமுற்றம்-612 703.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91 4374 267 237, 94436 78575, 94435 64221

 

அமைவிடம்:

கும்பகோணம் பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் திருச்சத்திமுற்றம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

2 × one =