December 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆழ்வார் திருநகரி

  1. அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.

உற்சவர்        :     பொலிந்து நின்ற பிரான்.

தாயார்          :     ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி.

தல விருட்சம்   :     புளியமரம்.

தீர்த்தம்         :     தாமிரபரணி, குபேர தீர்த்தம்.

புராண பெயர்    :     திருக்குருகூர்

ஊர்             :     ஆழ்வார் திருநகரி

மாவட்டம்       :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

ஒரு சமயம் திருமாலின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது மகனான சுகமுனிவர் இத்தலத்தின் மகிமையைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் இத்தலத்தின் மகிமையைக் கூறலானார். பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது பரந்தாமனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். நான்முகனுக்கு முதன்முதலில் படைப்புத் தொழில் செய்யும் பணியை அளித்தபோது, நான்முகன் அதற்கு சிறிது அஞ்சினான். தனது ஐயத்தைப் போக்கிக் கொள்ள, திருமாலை சந்திக்க எண்ணி ஓராயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். தனது கடும் தவத்தின் பயனாக நான்முகன் முன்னர் திருமால் தோன்றினார்.

நான்முகனின் படைப்புத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். பின்னர் நான்முகனின் தவ வலிமையால் அவனது படைப்புத் தொழிக்கு உதவி புரியும் வண்ணம், தான் இப்போது அவதரித்ததால், இந்தத் தலம் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் என்றார். இத்தலத்தில் தன் திருநாமம் ஆதிநாதன் என்று விளங்கும் என்றார். இதைக் கேட்ட நான்முகன், தனக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் இத்தலம் குருகுகாக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தார். ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிய திருமால், “ஆதிக்ஷேத்ரத்தில் ஆதிநாதனை வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். கலியுகத்தில் சடகோபர் என்ற பெயருடன் யோகியாக அவதரித்து, வடமொழி வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதங்களை படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தி அவையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன்” என்றார்.

இரண்யாட்சன் என்னும் அரக்கன் முற்காலத்தில் பூமி உருண்டையை எடுத்து சமுத்திரத்துக்குள் மறைத்து வைத்ததும், அதனை பெருமாள் வராக அவதாரம் எடுத்து கொண்டுவந்த வரலாறும் நாம் அறிந்ததே. பல்வேறு புராணங்களிலும் இந்த வராக அவதாரம் பெருமையாக விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வராக அவதாரத்தை தரிசிக்கும் பொருட்டு இங்கு வாழ்ந்த வைணவ முனிவர்கள் சிலர் இங்கு தவமியற்றினார்கள். அவர்களின் தவத்திற்கு இறங்கி தன் மடியில் பூமாதேவியை இருத்தியபடி வராகராக பெருமாள் காட்சியளித்தார். இந்த வராக மூர்த்தியே ஞானப்பிரானாக இங்கு சேவை சாதிக்கிறார்.

 

முற்காலத்தில் கரிமாற பாண்டியன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு உடையநங்கை என்னும் பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஆதிநாதர் மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைபேறு இல்லை. எனவே குழந்தை பேறு வேண்டி இவர்கள் ஆதிநாதரை வழிபட்டு வந்தனர். இவர்களின் வேண்டுதலுக்கு பலனாக வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் கடக லக்னத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சடகோபன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

அந்த குழந்தை மற்ற குழந்தைகளை போல உண்ணாமல், உறங்காமல், இமைக்காமல், தும்மாமல், அழாமல், அசையாமல் அப்படியே இருந்தது. இதனால் வருந்திய பெற்றோர் அக்குழந்தையை ஆதிநாதர் சன்னதியில் கிடத்தி கண்ணீர்மல்க வேண்டினர். அப்போது அதுவரை அசைவில்லாமல் கிடத்தப்பட்ட குழந்தையானது தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரத்தினடியில் சென்று அமர்ந்துகொண்டது. அக்காட்சியை கண்ட பெற்றோர்கள் இது பெருமாளின் திருவிளையாடலே என்பதை உணர்ந்து அக்குழந்தையை தொந்தரவு செய்யாமல் பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுச்சென்றார்கள். அதன்பின் 16 ஆண்டுகள் அக்குழந்தை அப்புளியமரத்தினடியில் அமர்ந்தபடியே யோக நிஷ்டையில் இருந்தது. 16 ஆண்டுகள் கழித்து கண்விழித்த அந்த குழந்தையே நம்மாழ்வார். நம்மாழ்வார் கண்விழித்ததும் வேதத்தின் சாரத்தையெல்லாம் பிழிந்து திருவாய்மொழியாக அருளினார். பின்னர் திருக்கோளூரில் இருந்த மதுரகவியாழ்வார் இங்கு வந்து நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்று பணிவிடைகள் செய்து வந்தார். மதுரகவியாழ்வார் வயதில் மூத்தவராய் இருந்தும் 16 வயது பாலகனான நம்மாழ்வாரை குருவாக ஏற்றதோடு அல்லாமல் நம்மாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடியுள்ளார். அவற்றுள் கண்ணி நுன் சிறுதாம்பு என்று துவங்கும் பாடல் பிரசித்தி பெற்றது ஆகும்.

மதுரகவியாழ்வார் இக்குருகூர் வந்து முதன்முதலாக யோக நிஷ்டையில் இருந்த நம்மாழ்வார் மீது சிறு கல் எறிந்து எழுப்பினார். எழுந்த நம்மாழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்ற கேள்வியை மதுரகவியாழ்வார் கேட்க, அதற்கு அக் குழந்தை நம்மாழ்வாரோ “அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்ற உயர்ந்த அத்வைதத்தை பதிலாக உரைத்தார். இதனால் மகிழ்ந்த மதுரகவியாழ்வார் ஆகா இவர் அல்லவா என் உண்மையான குரு என்று கூறி நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றார்.

நம்மாழ்வார் இங்கு புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் யோக நிலையில் இருந்து பின் கண்விழித்து பல திருவாய்மொழி பாடல்களை அருளியுள்ளார். அவர் பல கோவில்களுக்கு எழுந்தருளி தன் பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு இங்கு ஆதிநாதப்பெருமாள் தனக்கு நிகரான அந்தஸ்து அழித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருகுருகூர் (ஆழ்வார் திருநகரி) ஆதிநாத பெருமாள் கோயில் 98-வது திவ்ய தேசம் ஆகும்.

 

  • நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். நம்மாழ்வாரின் அவதாரத் தலம் இதுவாகும்.

 

  • மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • குருகு என்றால் சங்கு என்று பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருகுருகூர் என்ற பெயரைப் பெற்றது இத்தலம்.

 

  • கருவறையில் மூலவராக ஆதிநாதப்பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார். இவர் சுயம்பு மூர்த்தி என்றாலும் நெடிதுயர்ந்த திருமேனி ஆவார். நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும் நின்ற கோலத்தில் நிற்கும் பெருமாளின் திருப்பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக ஜதீகம்.

 

  • இங்கு கருவறையில் நின்று அருள்பாலிக்கும் பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள நம்மாழ்வார் திருமேனி மதுரகவியாழ்வாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

 

  • அலைமகளின் அம்சமாக இங்கு ஆதிநாத நாயகி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் காட்சித்தருகிறாள்.

 

  • நிலமகளின் அம்சமாக இங்கு திருக்குருகூர் நாயகி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் காட்சித்தருகிறாள்.

 

  • இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு பொலிந்துநின்றபிரான் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி சகிதமாக அருள்பாலிக்கிறார். பொலிவு என்றால் அழகு என்று பொருள். ஆக இத்தல பெருமாள் அழகே வடிவாக நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதனால் பொலிந்துநின்றபிரான் என்று அழைக்கப்படுகிறாரோ என தோன்றுகிறது.

 

  • நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு திருவாய்மொழி பாசுரங்கள் (3106 முதல் 3116வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் மற்ற கோவில்களை போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபய-வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பு.

 

  • இத்திருக்கோவிலின் மதில்சுவற்றின் வடகிழக்கு மூலையின் மேல் காட்சி தரும் கருடாழ்வார் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் இப்பகுதியிலுள்ள பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறார். இந்த கருடாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடப்பட்டுள்ளதாம். இவருக்கு ஆடி சுவாதியன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று இவருக்கு அமிர்தகலசம் என்னும் கொழுக்கட்டை படைத்து வழிபடுவதும், தேங்காய் விடலை சமர்ப்பிப்பதும் விசேஷமாக நடைபெறும்.

 

  • திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அரையர் சேவை பிரசித்தமாக நடைபெறும். நம்மாழ்வார் பல கோவில்களின் பெருமாள் மீது பாசுரங்கள் பாடியிருக்க, இங்கு அவரின் சிஷ்யரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை போற்றி அவர் மீதே பாசுரங்கள் பாடியுள்ளார்.

 

  • இங்குள்ள பெருமாளின் கருவறை விமானத்தை காட்டிலும், நம்மாழ்வாரின் கருவறை விமானமே அளவில் சற்று பெரியதாகும்.

 

  • பெருமாளின் அம்சமாகவே பிறந்த நம்மாழ்வாருக்கு இங்கு, ஆதிநாதர் தனக்கு நிகரான அந்தஸ்து அளித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வார் தனி விமானம், தனி கொடிமரம் கொண்டு தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தருகிறார். இவருக்கு வருடத்தில் இரண்டு முறை மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் கொடியேற்றமாகி திருவிழா நடைபெறும்.

 

  • இங்கு வேடன் ஒருவனும், வேழம் ஒன்றும், இங்கு வாழ்ந்த நாய் ஒன்றும் இத்தல மகிமையால் முக்தி பெற்றுள்ளது.

 

  • இங்கு பிரம்மன், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், சங்கன், தாந்தன், இந்திரன், பல ரிஷிகள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளார்கள்.

 

  • இங்கு நடைபெறும் திருஅத்யன உற்சவத்தில் நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு பெருமாளே நேரில் சென்று காட்சியளித்து, நம்மாழ்வாரின் திருமுடி மீது தன் திருவடி வைத்து சேவை சாதிப்பார். இதற்கு திருமுடி சேவை என்று பெயர்.

 

  • காசிப முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் இத்தலத்தில் ஆதிநாத பெருமாளை வணங்கி விமோசனம் பெற்றார்.

 

  • இங்கு மற்ற கோவில்களை போல இராமானுஜருக்கு காவி உடை சாத்தப்படாமல், வெள்ளை உடையே சாத்தப்படுகிறது.

 

  • இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், பராங்குசநாயகி, வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர்நம்பி, தொண்டர் பிரான், திருநாவீறு உடைய பிரான், உதயபாஸ்கரர், குழந்தைமுனி, ஞானத்தமிழ்க்கடல், மெய்ஞ்ஞானகவி, வரோக பண்டிதன் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகிறது.

 

  • கம்பர் தான் எழுதிய ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் முன்னர், இங்கு வந்து சடகோபன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரை வணங்கி அவர் மீது சடகோப அந்தாதி என்னும் பாடலை பாடி வணங்கி உள்ளார்.

 

  • இங்கு பிறந்த நம்மாழ்வார் 16 வயது வரை இங்கிருந்த புளியமரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்து, வைணவ கோவில்கள் பலவற்றுக்கும் மங்களாசாசனம் செய்து, இறுதியில் மோட்சமடைந்த பின் அவரின் உடலானது இப்புளியமரத்தின் அடியிலேயே வைக்கப்பட்டு தனிக்கோவில் எழுப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

 

  • பெருமாள் அம்சமாக நம்மாழ்வார் இப்பூவுலகில் அவதரிக்கும் முன்பே ஆதிசேஷனின் அம்சமாக இங்கு புளியமரம் அவதரித்ததாம். இம்மரம் சுமார் 5000 ஆண்டுகளை தாண்டி இன்றும் இத்தலத்தில் உறங்காபுளியாக நிலைப்பெற்றுள்ளது. இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்று கூறப்படுகிறது. பொதுவாக புளியமரத்தின் இலைகள் மாலை 6.00 மணிக்கு பின் மூடி ஒன்றாகிவிடும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் எப்போதும் மூடாது என்பதால் உறங்காபுளி என்று சிறப்பிக்கப்படுகிறது.

 

  • இந்த கோவிலில் கல்லில் செதுக்கப்பட்ட நாதஸ்வரம் ஒன்று உள்ளது. இந்த அற்புத நாதஸ்வரத்தை தயார் செய்யவதே தனிக் கலை ஆகும். இந்த கல் நாதஸ்வரத்தை செதுக்க பல நுட்பங்களை கையாண்டுள்ளனர் கலைஞர்கள். இதற்கென சிறப்பு வாய்ந்த கருங்கல்லை தேர்ந்தெடுத்து செதுக்கும் போது அது உடையாமல் இருக்க அந்த கருங்கல்லை பலவகையான மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் மூழ்க வைத்து, பக்குவப்படுத்தியே செதுக்கியுள்ளார்கள். இதனால் தான் இந்த நாதஸ்வரம் தற்போதும் நேர்த்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

  • தமிழ் தாத்தா என்று சிறப்பித்து கூறப்படும் உ. வே. சுவாமிநாத அய்யர் பத்துபாட்டு என்னும் ஓலைச்சுவடிகளை தேடி அலைந்த போது, இத்தலம் வந்து நம்மாழ்வாரை வேண்டிட, அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஓலைச்சுவடி கிடைக்கப் பெற்றதாம்.

 

  • இத்தலத்தில் தான் ராமானுஜரின் பிறப்பிற்கு முன்பே அவருக்கு தனிக் கோவில் எழுப்பப்பட்டது.

 

  • ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுக்குள் சங்கு மண்டபம் எனப்படும் கல் மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் சங்கு வரையப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகரித்து பாய்ந்து வரும் வேளையில் இந்த மண்டபத்தில் இருந்து சங்கு முழங்கும் சத்தம் தானாக கேட்குமாம். அத்தகைய தொழில்நுட்பத்தை கையாண்டு அக்காலத்திலேயே இம்மண்டபத்தை கட்டியுள்ளார்கள். காலப்போக்கில் தற்போது மண்டபம் பழமையாகிவிட்டதால், சங்கு முழக்கம் கேட்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

 

திருவிழா:

சித்திரை மற்றும் பங்குனி மாதங்களில் இங்கு பொலிந்துநின்றபிரானுக்கு கொடியேற்றமாகி பதினொரு நாள் திருவிழா நடைபெறும். பத்தாம் நாள் தேரோட்டமும் நடைபெறும்.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த உற்சவத்திற்கு நம்மாழ்வார் சன்னதியில் கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் திருவிழா நடைபெறும்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 முதல் 12 வரையிலும்,

மாலை 5.00 முதல் இரவு 8 மணிவரையிலும் நடை திறந்திருக்கும்.

 

முகவரி:

அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில்

ஆழ்வார் திருநகரி – 628 612

தூத்துக்குடி மாவட்டம்.

 

போன்:    

+91 4639 273 607

 

அமைவிடம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள இவ்வூருக்கு திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

5 − 5 =