அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார்.
அம்மன் : மங்களாம்பிகை, பங்கஜவல்லி
தல விருட்சம் : அரசு
தீர்த்தம் : பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு
புராண பெயர் : ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்)
ஊர் : ஆவூர் (கோவந்தகுடி)
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
ஒருசமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேஷன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப் பற்றிக்கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேஷன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய வாயு, இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டுவந்து, தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
பூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு “கவர்தீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான பட்டி என்ற பசு உணர்ந்தது. ஒரு லிங்கம் அமைத்து தனது பாலால் அபிஷேகம் செய்தது. அதற்கு காட்சியளித்த சிவனிடம், அந்த தலத்திலேயே நிரந்தரமாக தங்குமாறு கேட்டுக்கொண்டது. பசு வழிபட்ட தலமாதலால் இறைவன் “பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
கோயில் சிறப்புகள்:
- வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்..
- காமதேனு உலகிற்கு வந்த இடம் – கோ+வந்த + குடி கோவந்தகுடி ஆயிற்று கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது. மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
- இக்கோயிலில், மூலவராக பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் அமைந்துள்ளார். இவர் அஸ்வந்தநாதர், ஆவூருடையார் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்,
- மங்களாம்பிகை, பங்கஜவள்ளி ஆகிய அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர்.
- தசரத மன்னர், சுயம்பு மூர்த்தியாகிய பசுபதீஸ்வரரை பூஜை செய்து, பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து பேரு பெற்ற தலமாகும்.
- பூஜை காலத்தில் சிவபெருமானுடன் இருக்க அம்பாள் தேவை என எண்ணி, ஸ்ரீ பங்கஜவள்ளி அம்பாளை பிரதிஷ்டை செய்தார் தசரதர். மேலும், சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், அவருக்கு அபிஷேகம் செய்யும் வகையில் குளம் வெட்டப்பட்டது. அப்போது, குளத்திலிருந்து ஸ்ரீ மங்களாம்பிகை எனும் அம்மன் கிடைத்தார். இந்த அம்மனுக்கு நெற்றிக்கண் இருப்பது சிறப்புடையது. இந்த அம்மனும் இதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இந்த ஆலயத்தில், மங்களாம்பிகை அம்மனே சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
- கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஆவூர் பசுபதீசுவரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
- இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும்.
- இத்தலத்தில் தசரதர் சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை உட்பிரகாரத்தில் நாம் காணலாம்.
- இத்தல முருகன், வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி, மேற்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன், தனுசு சுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
- தர்மத்வஜன் என்ற அரசன், இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்டநோய் நீங்கப் பெற்றான் என்று தல வரலாறு குறிப்பிடுகிறது.
- தமிழில் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்று நூலை இயற்றிய சாத்தனார், ஆவூரில் பிறந்தவர் என்பது குறிப்படத்தக்கது.
- இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் “ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே” என்று தனது நாவுக்குக் கட்டளையிடுகிறார்.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மல் ஆர்ந்த மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே” என்று போற்றி உள்ளார்.
- கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
- பிரமன், சப்தரிஷிகள், கணங்கள், தேவர், இயக்கர், கந்தருவர், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், திருமால், தசரதர் முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
திருவிழா:
சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
ஆவூர்
கும்பகோணம்,- 612 701.
தஞ்சை மாவட்டம்.
போன்:
+91 94863 03484
அமைவிடம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து கோவிந்தகுடி வழியாக ஆவூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.