December 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தான்தோன்றிமலை

  1. அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     கல்யாணவெங்கட்ரமணர்

உற்சவர்        :     ஸ்ரீ நிவாசர்

தாயார்          :     ஸ்ரீ தேவி பூமிதேவி

புராண பெயர்    :     தட்சிணாதிருப்பதி

ஊர்             :     தான்தோன்றிமலை

மாவட்டம்       :     கரூர்

 

ஸ்தல வரலாறு:

உலகைப் படைத்த இறைவன் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக காட்டிலும், மலையிலும் கல், மரம், உலோகம், மண் முதலான அனைத்து உயிரற்றப் பொருட்களிலும் உருவுடனோ உருவமில்லாமலோ உள்ளிறங்கி அருள் புரிகிறான். இவ்வாறு அருள் புரியும் பெருமாள் தானாகத் தோன்றிய இடங்கள் ஸ்வயம் வ்யக்தத் தலங்கள் எனப்படும். அந்த இடங்களில் பெருமாள் தானாகத் தோன்றும் போது அந்த மூர்த்தங்களுக்கு ஸ்வயம்பு எனவும் தமிழில் தானே தோன்றியதால், தான்தோன்றி என்றும் அதுவே பேச்சு வழக்கில் தாந்தோணி என்று மருவி அழைக்கப்படுகிறார் பெருமாள்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் வைகுந்த நாதனைத் தரிசனம் செய்ய வந்தார் வாயு பகவான். வாயிலில் ஆதிசேஷன் முறையாகக் காவல் காத்துக் கொண்டிருந்தார். வாயு உள்ளே செல்ல ஆதிசேஷன் அனுமதிக்கவில்லை. இருவருக்கும் வாதம் முற்றி விவாதமாகி யார் பலசாலி எனத் தீர்மானிக்கப் போட்டி ஏற்பட்டது. வேங்கட மலையே போட்டிக்களம் ஆனது. ஆதி சேஷன் வேங்கட மலையைச் சுற்றியபடி அழுத்திப் பிடிக்க, வாயு  பகவான் மலையைத் தன் வேகவீச்சால் நகர்த்த முயல, இருவரின்  பலப்பரீட்சையில் திருவேங்கட மலையின் பாறைப் பகுதிகள் சில துண்டுகளாய் தெறித்துச் சிதறின. ஒரு துண்டு கொங்கு நாட்டுக் கரூருக்கு அருகில் விழுந்தது. இந்தக் கல்லுக்கும் மகிமை உண்டாக்க நினைத்தான் மணிவண்ணன்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் அரசவையில் புலவராக இருந்தவர் டங்கணாச்சாரி. தன் மனைவி சுந்தராம்பிகையுடன் வாழ்ந்து வந்தார். அவர் சிவன் மீது தீரா அன்பு கொண்டவர். வேறு எந்தக்கடவுளையும் வணங்க மாட்டார். அந்த தம்பதிக்குக் குழந்தை இல்லை. சுந்தராம்பிகை, தனக்கு குழந்தை பிறந்தால் அதனை ஐந்து வயதில் திருப்பதிக்கு கூட்டி வந்து மொட்டை போடுவதாக வெங்கடாஜலபதியிடம் வேண்டிக்கொண்டாள் சுந்தராம்பாள். வெங்கடேசனின் அருளால் சுந்தாரம்பிகை கருவுற்றாள். தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சுந்தராம்பிகை வேண்டிக் கொண்டது டங்கணாச்சாரிக்கு தெரியாது. குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு “குண்டலாச்சாரி‘ என பெயர் சூட்டினர். ஐந்து வயது ஆனதும் வேண்டிக் கொண்ட படி, நேர்த்திக்கடனை செலுத்த கணவரிடம் அனுமதி கேட்டாள் சுந்தராம்பிகை. டங்கணாச்சாரி வெகுண்டார்.  ‘‘கடவுள் சிவனின்றி வேறு யாருமில்லை; நீ திருப்பதிக்கு செல்லக்கூடாது,” எனக் கட்டளையிட்டார். சுந்தராம்பிகை கலங்கினாள். தவமிருந்து பெற்ற மகனுக்கான, வேண்டுதலை நிறைவேற்றாவிட்டால், ஏதாவது ஆபத்து வருமோ எனக் கலங்கினாள். இந்தக் கவலையில் அவளது உடல்நிலை மோசமானது. இதைச் சிறுவன் கவனித்தான். அம்மாவின் கவலைக்கு காரணம் கேட்டான். அம்மா நடந்த விபரத்தைச் சொன்னாள்.” இதற்காகவா கவலைப் படுகிறாய்? நான் அந்த திருப்பதி வெங்கடாசலப் பெருமாளை இங்கேயே வரவழைக்கிறேன்,” என்றான். அம்மா சிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.

சிறுவன் தன் ஊரிலுள்ள தான்தோன்றி மலைக்கு சென்றான். “திருப்பதி வெங்கடாசலபதியே! என் அன்னையின் கவலை தீர்க்க இந்த மலைக்கு வா. என் அம்மாவைக் காப்பாற்று. என் அம்மாவின் உயிர் போனால் நானும் இறந்து விடுவேன்,” என்று அழுதான். அப்போது ஒரு துறவி அங்கு வந்தார். அவனைத் தேற்றி அழுகைக்கான காரணம் கேட்டார். பிறகு, “இதற்காகவா அழுகிறாய்? நாம் இருவரும் சேர்ந்து இங்கு கோயில் கட்டுவோம். அதில் வெங்கடாசலபதி எழுந்தருள்வார், வா,” என்று கூறினார். சிறுவன் சிறு கற்களைத் தூக்கி வந்தான். இதற்குள் இருட்டி விட்டது. மறுநாள் வருவதாக சொல்லி விட்டு குண்டலாச்சாரி வீட்டுக்குப் போய்விட்டான். அடுத்த நாள் காலையில் அங்கு வந்த போது பெரிய கோயில் உருவாகி இருந்தது. சிறுவன் ஆச்சரியப்பட்டான். துறவியைக் காணவில்லை.

புதியதாகக் கோயில் கட்டப்பட்டுள்ள தகவல் அரசனை எட்டியது. தன்னைக் கேட்காமல் கோயில் கட்டியவனை கொன்று விட அரசன் உத்தரவிட்டான். டங்கணாச்சாரி ஆவேசப் பட்டார். “சிவன் இருக்க வேண்டிய ஊரில், விஷ்ணுவுக்கு கோயில் கட்டியவனை நானே அழித்து விடுகிறேன்,” என்ற ஆவேசத்துடன் ஆத்திரம் கண்ணை மறைக்க, இரவில் சென்று கோயிலுக்குள் ஒளிந்து நின்றார் டங்கணாச்சாரி, குண்டலாச்சாரி வந்ததும் தன் மகன் என்று  தெரியாமலேயே வெட்டிச் சாய்த்தார். ஆனால் இறந்தது தன் மகன் என்று அறிந்ததும் அரற்றினார். சுந்தராம்பிகை நடந்ததை அறிந்து ஓடி வந்தாள். அப்போது சன்யாசி ஒருவர் அங்கு வந்து ஒரு பிடி துளசி கொண்டு வரப் பணித்தார், முதலில் மறுத்தாலும் பின்னர் சென்று கொண்டு வந்தார் டங்கணாச்சாரி. குண்டலாச்சாரியின் வெட்டுப்பட்ட இடத்தில் துளசிச் சாறு பிழிய உயிர்த்து எழுந்து நடந்த அனைத்தும் கூறினான், மகன். அனைவரும் மலை மீது அமைந்திருந்த கோயிலுக்குள் சென்றனர். உடன் வந்த சன்யாசி மறைந்து குகை நடுவே வேங்கடேசப் பெருமாள் தோன்றினார். தானாய் தோன்றிய அப்பெருமாள் ‘‘குண்டலாச்சாரிக்காக இங்கு தோன்றி காட்சி தந்தேன்; இனி இந்தத் தலத்திலும் நான் லட்சுமியுடன் குடியிருப்பேன். உன் பிரார்த்தனையை இங்கேயே செலுத்து,” எனக் கூறினார். அது முதல் திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு அங்கே செல்ல இயலாதவர்கள் தம் காணிக்கைகளை இங்கேயே செலுத்தத் தொடங்கினார்கள் எப்போதும் லட்சுமியை மார்பில் கொண்டு  பெருமாள் காட்சி தருவதால், பெருமாள் கல்யாண வெங்கடரமண சுவாமி என அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இக்கோயிலில் அதிசயிக்கும் வகையில் பெருமாள் மேற்கு நோக்கி அமைந்திருக்கிறார். இங்கு தாயாருக்கு தனியாக சந்நிதி கிடையாது என்பதால் வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார்.

 

  • பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.

 

  • இத்திருக்கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இது ஒரு குடைவரைக் கோயில் என்றும் கூறப்படுகிறது.

 

  • திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல் சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் அந்த பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.

 

  • இந்த விஷ்ணு தலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல் கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

  • பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.

 

  • ஒரு சமயம் திருக்கோயில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தது. அவர் பூஜைக்குச் செல்ல இயலாத சூழல். அவர் மகன் சிறுவன். அவனை பூஜைக்கு அனுப்பினார் அர்ச்சகர். குகைக்குள் கருவறையில் இருக்கும் பெருமாள் நல்ல உயரம். அவருக்கு தினமும் நிலை மாலை சாத்தும் பழக்கம் உண்டு. அர்ச்சகச் சிறுவனால் அந்த மாலையை சாத்த முடியவில்லை. ‘‘வெங்கடரமணா நீ சற்றே குனிந்துகொள். உனக்கு மாலை சாத்த வேண்டும்,” என்று அவன் வேண்டிக்கொள்ள பெருமாள் தலை சாய்த்து மாலையை ஏற்றுக்கொண்டாராம். மூலவர் பெருமாள் தலை சற்றே சாய்ந்திருப்பதை இப்போதும் காணலாம்.

 

  • உலகம் முழுவதற்கும் படி அளக்கும் இப்பெருமாளுக்கு செம்மாளி (செருப்பு) சமர்ப்பித்தல் பழக்கம். பெருமாளுக்கு செம்மாளி சமர்ப்பிக்க நேர்ந்து கொண்டவர்கள் ஒற்றை பெரிய செருப்பு தயார் செய்து விரதம் இருந்து செம்மாளியை அலங்காரம் செய்து சுமந்து வந்து சமர்ப்பிப்பார்கள். பெருமாள் கனவில் சொன்னபடி அவரவருக்கு எந்த அளவில் எந்த கால் செருப்பு சமர்ப்பிக்கச் சொல்லுகிறாரோ அதனைச் சமர்ப்பிப்பர். இப்படி தனித்தனி பக்தரால் ஒற்றை செருப்பாக சமர்ப்பிக்கும் செருப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து ஜோடியாகி விடும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது

 

  • இத்தலப் பெருமாள் ஏக தள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்

 

 

திருவிழா: 

புரட்டாசி உற்சவம் – 22 நாட்கள்

மாசி மகத்தேர் – 17 நாட்கள்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில்,

தான்தோன்றிமலை – 639005,

கரூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4324 2355531, 2365309

 

அமைவிடம்:

கரூர் – திண்டுக்கல் சாலையில் கரூர் நகரை ஒட்டினாற்போல தான்தோன்றி மலை இருப்பதால் பக்தர்கள் எளிதாக கோயிலை அடையலாம்.

Share this:

Write a Reply or Comment

19 − 5 =