December 11 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

  1. அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்

அம்மன்         :     தவளவெண்ணகையாள்

தல விருட்சம்   :     பனைமரம் மற்றும் பாலை

புராண பெயர்    :     திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை

ஊர்             :     பாபநாசம்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

மாநிலம்        :     தமிழ்நாடு

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிப்பதற்காக து‌‌ஷ்டவேள்வி நடத்தி யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன், அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது

சிவபெருமானது பற்றற்ற நிலையை கலைத்து பார்வதியை மணம்புரிந்து கொள்ளும்படி செய்ய மன்மதன், பூ அம்புகளை எய்தபோது தழல் விழியால் நோக்கி அவனை சாம்பலாக்கினார். பின்னர் தேவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி அவனை உருவில்லாதவனாக்கி பார்வதியை மணம் புரிந்து கொண்டார். காமன் எரிந்த சாம்பல் முட்டாயிருந்ததை அங்கு சென்ற பிள்ளையார் கண்டு அதில் இருந்து ஒரு உரு அமைத்து உயிர் உண்டாக்கினார். அவனே பண்டாசுரனாகி தேவர்களை எதிர்த்து துன்புறுத்தினான். அவர்கள் மேருமலைக்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் பார்வதியிடம் தெரிவிக்குமாறு கூறினார். அதன்படி அவர்கள் தேவியிடம் தெரிவித்தனர். அம்மையார் கூறியபடி தேவர்கள் இந்த இடத்திற்கு வந்து ஒரு பெருவேள்வி செய்தனர். அப்போது அம்மையார் திரிபுரை என்ற உருவத்துடன் நான்கு கைகளிலும் கரும்பு வில், பூவாளி, அங்குசம், மலர்மாலை தாங்கி காட்சி கொடுத்து கரும்புவில்லை வளைத்து, மலர் அம்பினால் எய்து பண்டாசுரனை கொன்றாள். அந்த வேள்வி குண்டத்தின் வெப்பம் எவராலும் தாங்க முடியாதிருந்ததால் அம்மையாரின் ஆணைப்படி சிவபெருமானை வேண்ட அவர் வீரபத்திர உருவத்துடன் தமது தலையில் இருந்த கங்கையை அக்குண்டத்தில் விட, அது குளிர்ந்து ஒரு திருக்குளமாயிற்று. இங்கு பல முனிவர்கள் வசித்ததால் இதற்கு பிரம்ம வனம் என்னும் பெயர் உண்டாயிற்று.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலவர் பால்வண்ணநாதர் என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.

 

  • அம்பாள் தவள வெண்ணகையாள் என்னும் திருநாமத்துடன் அழகாகக் காட்சித் தருகின்றாள்.

 

  • இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

 

  • அம்பிகை, கோயிலின் வடக்குத் திசையில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பிகையின் பெயர் தவள வெண்கையாள். அப்பர் பெருமான், தம் திருப்பாட்டுள் ‘தவள வெண்ணகை மங்கையொர் பங்கினர்’ என்று அம்பாள் பெயரைச் சூட்டியுள்ளார். மூலஸ்தானலிங்கம் அமைந்துள்ள கருவறையின் வலப்புறம் அம்பிகை சந்நிதி அமைந்தால் அத்தலம் திருமணத்தலமாகும். நீண்டநாள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து சிவன், அம்பாளை வழிபட்டால் விரைவில் திருமணம் நிகழும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

 

  • ராம பிரான் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

 

  • மகாவி‌‌ஷ்ணு, பிரம்மன், வசி‌‌ஷ்டர், தவுமியர், அர்ச்சுணர் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

 

  • திருமண கோல தலங்களாக கருதி போற்றப்படும் சோழநாட்டு தலங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப்பெறுகிறது.

 

  • இத்திருக்கோவிலில் அம்பாளின் இடத்திருக்கரத்தில் அன்னப்பாத்திரம் உள்ளதால் அம்பாளை வழிபடுவோர்க்கு எக்காலமும் அன்னத்திற்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.

 

  • கோவிலை சுற்றிலும் அ‌‌ஷ்டதிக்கு பாலகர்கள் நீராடி வழிபட்ட 8 தீர்த்தங்களும், 8 லிங்கங்களும் இருந்தனவாய்க் கூறப்பெறினும், தற்போது வசிட்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் உள்பட 3 தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன.

 

  • காவிரியின் கிளை நதியான குடமுருட்டி இங்கே பாய்கிறது. சுமார் 11 கல்வெட்டுகள் இங்கே படி எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். அத்தனையும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை இரண்டாம் இராஜராஜன், முதல் குலோத்துங்கன், விக்கிரம சோழன், மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோரின் காலத்தைச் சேர்ந்தவை.

 

  • இந்தக் கல்வெட்டுகள் ஒருபுறம் நம்மை வசீகரித்தாலும், அதையும் கடந்து இன்னொரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. அது அங்கே இருக்கும் நெற்களஞ்சியம். அது அங்கே அருள்பாலிக்கும் பாலைவன நாதர் திருக்கோயிலில் உள்ளது. இதன் பிரமாண்டமான தோற்றம் ஒருபுறம், அதில் நெல்லை சேகரிக்க அமைக்கப்பட்டுள்ள வாசல்கள் இன்னொரு புறம். அத்தனை உயரத்துக்கு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றால் அதில் எந்த அளவுக்கு நெல் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. பழைய நெல்லை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளக் கீழே தனி திறப்புகளும், புது நெல்லை மேலே கொட்ட தனித்தனி திறப்புகளும் உள்ளான. அன்றைய மனிதர்களின் சிந்தனையும், திட்டமிடுதலும் நமக்கு எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. மாற்றிச் சொன்னால் சிறு பொருளையும் வீணடித்து விடக்கூடாது என்கிற பொறுப்புணர்வு அவர்களுக்கு இருந்துள்ளது. பிரம்மாண்டமான இந்த களஞ்சியத்தில் 12 ஆயிரம் கலம் நெல் சேமிக்கப்பட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

  • வேதங்களின் நடுவணதாகிய யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள “விண்ணினார் பணிந்து ” என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் இதுவேயாகும்.

 

  • கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.

 

  • பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.

 

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்,

திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் – 614 205.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-94435 24410

 

அமைவிடம்:

கும்பகோணம் – தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். கோயில் வாயிலில் இறங்கலாம். குடமுருட்டியாற்றின் கரையில் உள்ளது. கும்பகோணம் – தஞ்சை இருப்புப் பாதையில் பாபநாசம் நிலையத்தில் இறங்கி 1 கி.மீ., வடகிழக்கில் சென்று இத்தலத்தை அடையலாம்.

 

 

விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்

மண்ணினார் மறவாது சிவாய என்று

எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்

பண்ணினார் அவர் பாலைத் துறையரே.

திருநாவுக்கரசர்

Share this:

Write a Reply or Comment

three × three =