December 09 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாடம்பாக்கம்

  1. அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     தேனுபுரீஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     தேனுகாம்பாள்

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     கபில தீர்த்தம்

புராண பெயர்    :     மாடையம்பதி

ஊர்             :     மாடம்பாக்கம்

மாவட்டம்       :     சென்னை

 

ஸ்தல வரலாறு:

கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். அப்போது, வழக்கத்திற்கு மாறாக இடது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தினால் சிவபூஜை செய்ததால் ஏற்பட்ட தோஷத்தினால் முக்திபேறு கிடைக்காமல், பூலோகத்தில் மீண்டும் பசுவாகப் பிறந்தார்.

பசுவாகப் பிறந்த கபிலருக்கு விமோசனம் அளித்து, அருளுவதற்காக இங்கு, சுயம்பு லிங்கமாக பரமேஸ்வரன் தோன்றினார். ஆனால், சிவலிங்கம் கண்களுக்குப் புலப்படாத வகையில் மண் புற்றில் இருந்துள்ளது. ஆனால், அந்த தெய்வப் பசு சுயம்பு லிங்க மூர்த்தி இருப்பதைத் தன் ஞானத்தினால் அறிந்து, சிவலிங்கத்தின் மேல் பாலைத் தானாகப் பொழிந்து வந்தது.

 

ஒருநாள் இதைக் கண்ட பசு மேய்ப்பவன் பசுவைக் கல்லால் ஓங்கி அடித்தான். பசு நகராமல் அப்படியே நின்றது. மறுபடியும் தன் கையில் உள்ள தடியால் பால் பொழியும் காம்பின் மீது அடிக்க மடி காம்பிலிருந்து ரத்தம் கொட்டியது. அடிப்பட்ட வலியைத் தாங்க முடியாமல் பசு தன் காலை எட்டி சுயம்பு லிங்க மூர்த்தின் மேற்பகுதியில் உதைத்து விட்டு ஒடி மறைந்தது. உதைத்த இடம் காயமாகி ரத்தம் பெருகி, ஏரித் தண்ணீர் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறம் பரவியது. இதனைக் கண்டு பயந்த மேய்ப்பன், ஊர் மக்களை அழைத்தான்.

இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் இறைவனை வேண்டினார்கள். அப்போது, மக்களுக்குக் காட்சியளித்த சிவபெருமான், மக்களை அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், கபிலமகரிஷியின் தோஷ நிவர்த்திக்காக இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியதாகக் கூறி, கபிலருக்கு முக்தி அளித்து மறைந்தார். இங்கு நடந்த காட்சியை அரசனிடம் தெரிவிப்பதற்காக மக்கள் கூட்டமாகச் சென்றனர். ஆனால், அன்று இரவு சுந்தர சோழரின், கனவிலும் இக்காட்சி தோன்ற, மாடம்பாக்கம் விரைந்த அரசர் சுயம்பு லிங்க மூர்த்திக்குக் கோயிலைக் கட்டினார். மூலவரின் பெயரில் உள்ள தேனு என்பது பசுவை குறிக்கிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார்.

 

  • லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது.

 

  • நம் முன் ஜென்ம பாவங்களைப் போக்கி அருளுவதற்காக, மாடம்பாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார் தேனுபுரீஸ்வரர்.

 

  • கபில முனிவர், பூஜித்து வரம் பெற்றார். அதேபோல், இந்திரன் தன் சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபூஜை செய்து, வரம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

 

  • சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார்.

 

  • துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.

 

  • இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார்.

 

  • இத்திருத்தலத்தின் கட்டடக்கலை சிறப்புடன் திகழ்கிறது. மூலவரான சுயம்பு லிங்க, தேனுபுரீஸ்வரின் கர்ப்பக்கிரகமானது, தூங்கும் யானையின் பின்புறம் போல (கஜபிருஷ்டம்) மாடமாக அமைக்கப்பட்டுள்ளது‌.

 

  • கோயிலின் அர்த்தமண்டபம் மற்றும் 18 தூண்கள் உடைய முன் மண்டபம் அழகான, சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. முன் மண்டபத்தின் தூண்களில் கணபதி, துவார பாலகர்கள், வீணாதட்சிணா மூர்த்தி, கங்கா விசர்ஜனர், ஊர்த்துவ தாண்டேஸ்வர், சங்கர நாராயணன், வீரபத்திரஸ்வாமி, பத்திரகாளி, கஜசம்ஹர மூர்த்தி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரிவர், நரசிம்மர், பஞ்சமுக லிங்கேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், ஸ்வரஹரேஸ்வரர், ராமர் பட்டாபிசேகம், நால்வர் மூர்த்திகள், இசைக்கும் கிருஷ்ணர், ஆஞ்சிநேயர் எனப் பல தெய்வத் திருவுருவச் சிற்பங்கள் உள்ளன.

 

  • பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் திருப்புகழில், தோடுறுங் குழையாலே என்ற பதிகத்தில், இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு. வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீ சுப்புரமணிய முருகப்பெருமான் குறித்துப் பாடியுள்ளார்.

 

  • இந்தக் கோயில், இந்தியத் தொல்லியல் துறையால், பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் இரண்டாம் பராந்தக சோழன் எனும் சுந்தர சோழரால், கி.பி. 10- நூற்றாண்டுக் (கி.பி.954-971) காலத்தில் முதலில் கட்டப்பட்டுள்ளது இந்தத் திருக்கோயில். அதற்கு பின் முதலாம் குலோத்துங்கச் சோழரால் கற்றளிக் கோயிலாக இந்தக் கோயில் மாற்றப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் அம்பிகையான ‘தேனுகாம்பாள்’ சந்நிதி பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, 18 தூண்களை உடைய மஹாமண்டபமானது என்கிறார்கள்.

 

திருவிழா: 

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

மாடம்பாக்கம் – 600073,

சென்னை.

 

போன்:    

+91- 44- 2228 0424, 93826 77442, 99411 49916.

 

அமைவிடம்:

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பஸ்களில், 5 கி.மீ., தூரத்திலுள்ள ராஜகீழ்பாக்கம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் மாடம்பாக்கம் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. தாம்பரத்தில் இருந்து குறித்த நேரத்தில் கோயிலுக்கு நேரடி பஸ்கள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

13 + 8 =