December 08 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சிற்றாறு

  1. திருச்சிற்றாறு இமையவரப்பன் கோயில் வரலாறு

 

மூலவர்        :     இமையவரப்பன்

தாயார்          :     செங்கமலவல்லி

தீர்த்தம்         :     சங்க தீர்த்தம், சிற்றாறு

புராண பெயர்    :     திருச்செங்குன்றூர்

ஊர்             :     திருச்சிற்றாறு

மாவட்டம்       :     ஆலப்புழா

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை என பொருள்படும் வகையில் இமையவரப்பன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

 

சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.

 

மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்று 15-வது தினம். பாண்டவர் படையை எதிர்த்து துரோணாச்சாரியார் போர் புரிந்து கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காக, பீமனை அழைத்து, மாளவ நாட்டு மன்னரின் யானையை (அஸ்வத்தாமா) கொல்லச் செய்துவிட்டு, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று துரோணரிடம் சொல்லச் சொன்னார். அதன்படி பீமனும் அஸ்வத்தாமா என்ற யானையை கொன்றுவிட்டு வந்தார். உடனே கிருஷ்ணர் தருமரை அழைத்து, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்ற செய்தியை துரோணரிடம் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர் அவ்வாறு கூற இயலாது என்றார். (துரோணாச்சாரியாரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதால் இந்த பெயர் குழப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நாடகம் நடத்தப்பட உள்ளது.)

உடனே கிருஷ்ணர் தருமரை அழைத்து, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்பதை சத்தமாகச் சொல்லிவிட்டு, அஸ்வத்தாமா என்ற யானை என்பதை மெதுவாகச் சொன்னால் போதும் என்று கூறுகிறார். தருமரும் அதற்கு உடன்படுகிறார்.

கிருஷ்ணர் கூறியபடி பீமனும் யானையைக் கொன்றுவிட்டு, அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று சத்தமாகச் சொன்னான். இது துரோணர் காதில் விழுந்தது. ஆனால் அவர் பீமன் சொன்னதை நம்பவில்லை. விஷயத்தை உறுதி செய்துகொள்வதற்காக, தருமரைக் கேட்கிறார். உடனே தருமரும், துரோணாச்சாரியாரைப் பார்த்து, ஆமாம். அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்பதை சத்தமாகக் கூறி, அஸ்வத்தாமன் என்ற யானை என்பதை மெதுவாகச் சொன்னார். மெதுவாகச் சொன்னது துரோணர் காதில் விழவில்லை. தன் மகன் இறந்துவிட்டான் என்பதாகப் புரிந்து கொண்டு, தன் ஆயுதத்தை கீழே போட்டார். எளிதில் எதிரணியால் வீழ்த்தப்பட்டார் துரோணர்.

போர் முடிந்ததும், துரோணரின் உயிரிழப்புக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்ற வருத்தத்தில் இருந்தார் தருமர். அந்த வருத்தத்தில் இருந்து விடுபட, தனது சகோதரர்களுடன் கேரள பகுதிக்கு வந்தார். இந்த இடத்தருகே வரும்போது இங்கிருந்த பெருமாள் கோயிலைப் புதுப்பித்து வழிபட்டார். சிற்றாற்றில் நீராடி பெருமாளை வழிபட்டதால் அவர் மன அமைதி அடைந்தார். இந்த தலத்தில் மற்றொரு சமயத்தில் தேவர்களுக்கும் பெருமாள் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றாறு இமையவரப்பன் கோயில், 82-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • செங்குன்றூர் என்று அழைக்கப்படும் இவ்வூரில் சிற்றாறு என்ற நதி பாய்கிறது.

 

  • இத்தலத்தில் சிவபெருமானுக்கு திருமால் தரிசனம் கொடுத்துள்ளார்.

 

  • இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

 

  • தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றுகூடி, திருமாலை நோக்கி தவம் இயற்றினர். இதில் மகிழ்ந்த திருமால், அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இமையவர்கள் என்று அழைக்கப்படும் தேவர்களுக்கு காட்சி அளித்ததால், பெருமாளுக்கு இமையவரப்பன் (தேவர்களின் தந்தை) என்ற திருநாமம் ஏற்பட்டது.

 

  • ஜெகஜோதி விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் இமையவரப்பன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 

  • இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

 

  • இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.

 

  • கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் சங்குதீர்த்தம் என்ற தீர்த்தக்குளம் உள்ளது.

 

  • திருச்செங்குன்றூர் என்ற இடத்தை கண்ணகி அடைந்ததாக சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • சூரன், பத்மன் என்ற இருவர் சிவபெருமானிடம் வரம் பெற்று, ஓர் உடலாக சூரபத்மன் என்ற பெயர் பூண்டு, தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இன்னல் கொடுத்து வந்தனர். சுப்பிரமணியர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, அவர்களை கொடியில் சேவலாகவும் மயிலாகவும் ஆக்கிக் கொண்டார் என்பது வரலாறு.

 

  • பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில், தருமச்சேத்திரம், தரும அம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் திருச்செங்குன்றூர் என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் திருச்சிற்றாறு என்று அழைக்கப்படுகிறது.

 

  • மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர். அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலை புதுப்பித்தார்.

 

 

திருவிழா: 

மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.

தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

 

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில்,

திருச்சிற்றாறு – 689 121,

ஆலப்புழா மாவட்டம் ,

கேரளா மாநிலம்.

 

போன்:    

+91- 479 – 246 6828

 

அமைவிடம்:

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர்,

கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர்,

கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர்,

திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

fourteen + 18 =