December 01 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவண்வண்டூர்

  1. அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாம்பணையப்பன் (கமலநாதன்)

தாயார்          :     கமலவல்லி நாச்சியார்

தீர்த்தம்         :     பம்பை தீர்த்தம்

புராண பெயர்    :     திருவண்வண்டூர்

ஊர்             :     திருவண்வண்டூர்

மாவட்டம்       :     ஆலப்புழா

மாநிலம்        :     கேரளா

 

ஸ்தல வரலாறு:

பெருமாளிடமிருந்தே நாரதர் தத்வ ஞானம் பெற்றதற்கு மூலகாரணம், அவர் தன் தந்தை பிரம்மனிடம் கொண்ட விவாதமும், கோபமும்தான் சாதாரணமாகத்தான் இருவருக்கிடையேயும் பேச்சு தொடங்கியது. இப்போதைய மனித இயல்பான தந்தை மகன் கருத்து வேற்றுமை அப்போதே இருந்திருக்கிறது! மகன் பேச்சால் கோபமுற்ற பிரம்மன், மகன் என்றும் பாராமல் சபித்துவிட்டார். தேவலோகத்திலிருந்து விலகி, சிலகாலம் பூலோகத்தில் அவர் வாழவேண்டும் என்பதுதான் அந்த சாபம். பொதுவாகவே மகன் மீதான தந்தையாரின் சாபம், அப்போதைய தற்காலிகக் கோபத்தால் எழுவதல்ல; அதிலும் அவனுடைய எதிர்கால நன்மை அடங்கியே இருக்கும்.

முக்கியமாக அவனுடைய நல்வாழ்வுக்கான திருப்புமுனையாகத்தான் அந்தக் கோபம் அமையும். அதுபோலவே, மகன் நாரதன், ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து தத்வஞானம் பெறுவதற்காகவே பிரம்மனின் சாபம் வழி செய்தது! தந்தையாருடன் பிணக்கு கொண்ட நாரதர், பூமியில் சிலகாலம் சஞ்சாரம் செய்தார். அந்தப் பயணத்தில், அவர் திருவண்வண்டூர் திருத்தலத்துக்கு வந்தார். இந்த இடத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, அவரறியாமல் மனம் பேரானந்தத்தில் திளைத்தது. உடனே, அங்கேயே திருமாலை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது நீண்ட தவம் கண்டு மெச்சிய பரந்தாமன், அவர்முன் தரிசனம் தந்தார். பிரம்மன் அவர்மீது கோபம் கொண்டதை அறிந்தார். அந்தக் கோபமும் நாரதரை மேலும் நல்வழிப்படுத்தவே என்பதையும் உணர்ந்தார். அதனால், நாரதருக்கு தத்வ ஞானத்தை அளித்தார். அதன்படி, அங்கேயே நாரதர் புராணத்தை எழுதி முடித்தார் நாரதர்.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் திருவண் வண்டூர் மகாவிஷ்ணு கோயில், 85-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

 

  • திருவமுண்டூர் என்றும் திருவண் வண்டூர் என்றும் அழைக்கப்படும் இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 

  • நாரதருக்கு, மொத்தம் 25000 கிரந்தங்களில் இறைவனை பூஜிக்கும் முறை, துதி முதலானவற்றை பாம்பணையப்பன் பெருமாளே உபதேசித்திருக்கிறார் இந்த கிரந்தங்களின் தொகுதி நாரத புராணம் என்று தலைப்பு பெற்றது.

 

  • பம்பை நதியின் வடக்கே இத்தலம் அமைந்துள்ளது.

 

  • வேதாலய (சகல வேத விமானம்) விமானத்தின் கீழ் உள்ள வட்ட வடிவ கருவறையில் மூலவர் சங்கு, சக்கரத்துடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.

 

  • இங்கு இறைவியாகக் கமலவல்லி நாச்சியார் இருக்கிறார்.

 

  • இவ்வூரில் பூமியை தோண்டும்போது, புதிய பெருமாள் விக்கிரகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை இக்கோயிலுக்கு கொண்டு வந்து புதிய சந்நிதிகள் மற்றும் மண்டபங்கள் கட்டப்பட்டன.

 

  • கோயிலின் மேற்குப் புற வாயிலில் நுழையும்போது, காளிங்கன் மேல் கண்ணன் நர்த்தனம் ஆடுவது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. இந்தக் கண்ணனை இரண்டு தூண்கள் தாங்கி நிற்கின்றன.

 

  • பஞ்ச பாண்டவர்கள் வன வாசத்தின்போது கேரள தேசத்துக்கு வருகை புரிந்தனர். அப்போது, மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்ததாகக் கூறப்படுகிறது.

 

  • மார்க்கண்டேய மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார்.

 

  • நாரதீய புராணத்தை இயற்றச் செய்த பெருமைக்குரிய கோவிலாகக் இந்த பாம்பணையப்பன் கோவில் இருக்கிறது. தெய்வங்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. புராணங்களில் முக்கியமானவையாக பதினெண் புராணங்கள் திகழ்கின்றன. இவை தவிர்த்து பல புராணங்கள், தெய்வங்களின் பெருமைகளையும், புராண சிறப்புகளையும் பறைசாற்றும் வகையில் பக்தர்கள் மனம் லயிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நாராதரைப் பற்றிய சிறப்புகளைக் கூறும் நாராதீயப் புராணமும் ஒன்று.

 

  • இந்தக் கோவில் இறைவனை வழிபாடு செய்தால், வேண்டியது அனைத்தும் அப்படியே கிடைக்கும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

 

  • இத்தல இறைவனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்குப் பால் பாயசம் நைவேத்தியமாக படைத்து தங்களது நன்றிக்கடனைத் தெரிவித்துக்கின்றனர்.

 

  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது பழமொழி. ஆனால் கலகம் செய்பவர்கள் நியாயத்திற்குப்  புறம்பாக செயல்பட்டால் நியாயம் கிடைக்காது.  மாறாக தண்டனைதான் கிடைக்கும் என்பதற்கு  நாரதர் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.  எதுவும் அளவுக்கு மிஞ்சக் கூடாது என்பதை எடுத்துக்காட்ட பகவான் செய்த திருவிளையாடல்களில் திருவண் வண்டூர்  புண்ணிய ஸ்தலத்தில் நடந்திருக்கிறது.

 

  • நம்மாழ்வாரால் மட்டும் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. திருமங்கையாழ்வார் சில திவ்யதேசங்களைப் பாடும்போது தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக்கொண்டு, தாயாய், தோழியாய், காதலியாய் அந்தந்தப் பெருமாளை உருகிப் பாடியதுபோல, நம்மாழ்வாரும் தன்னைப் பராங்குச நாயகியாக உருவகித்துக்கொண்டு, இந்தப் பாம்பணையானைப் பாடிப் பரவசமுறுகிறார்.

 

திருவிழா:

இத்தலத்தில் மலையாள நாட்காட்டியின்படி சிம்மம் (ஆவணி) மாதம் வரும் அஷ்டமி நாளில் கிருஷ்ணர் தோற்றம் பெற்ற நாளும், தனுர் (மார்கழி) மாதம் வரும் ஏகாதசி நாளில் வைகுண்ட ஏகாதசி நாளும் மிகச் சிறப்புடையதாக இருக்கின்றன. மேலும், இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதம் வரும் அனுசம் நட்சத்திர நாளில் கொடியேற்றம் செய்து பத்து நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது இறைவன் மோகினித் தோற்றம் மற்றும் அவரது பத்துத் தோற்றக் (தசாவதாரம்) காட்சிகளில் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறார். இந்த நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வதைக் காண முடியும். இவைத் தவிர விஷ்ணுவுக் குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 4.30 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில்,

திருவண்வண்டூர்- 686 109.

ஆழப்புழை மாவட்டம்,

கேரளா மாநிலம்.

 

போன்:    

+91- 94461 93002

 

அமைவிடம்:

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் செங்கணூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவண்வண்டூர் திருத்தலம். இந்த இடத்திற்குச் செல்ல ஆலப்புழை, செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Share this:

Write a Reply or Comment

4 − 2 =