November 30 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   கோவில்பட்டி

  1. அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பூவனாதர்

அம்மன்         :     செண்பகவல்லி

தல விருட்சம்   :     களா மரம்

தீர்த்தம்         :     அகத்தியர்

புராண பெயர்    :     கோவிற்புரி (மங்கைநகர்)

ஊர்            :     கோவில்பட்டி

மாவட்டம்       :     தூத்துக்குடி

 

ஸ்தல வரலாறு:

சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.

அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும். அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.

முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்று பெயர் பெறும். புன்னைக்காவலில் (சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது.

 

  • இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

 

  • அருள் தரும் அம்பிகை செண்பகவல்லி அம்பாள் 7 ஆடி உயரத்தில் எழில் ‌‌கொஞ்சும் தோற்றததுடன் காட்சி தருகிறார்.

 

  • இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர்.

 

  • இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம்.

 

  • இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது.

 

  • இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்கிறார்கள்.

 

  • இத்திருத்தலத்தில் இறைவன் தோன்றிய களாமரமே இன்றும் உயிர் மரமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவிழா உற்சவ மூர்த்திகள் சந்நிதியின் முன்புறம் அமைந்துள்ள இத்தல விருட்சத்தினை சுற்றி கருங்கல்லினால் மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரே பீடத்தில் விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி, அம்மன், சாஸ்தா ஆகிய திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

  • இத்திருக்கோயில் தீர்த்தமானது அகத்திய முனிவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். எனவே இது அகத்திய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

 

  • மது‌‌ரையில் எப்படியோ அதுபோல் இங்கு அம்பாளுக்குத்தான் முக்கியத்துவம். இந்த சந்நிதி நு‌ழைவாயிலில் பிரம்மாண்டமான துவாரபாலகிகள் காண்ப்படுகின்றனர்.

 

  • மூல விக்ரகம் எப்படியுள்ள‌தோ அப்படியேதான் அலங்காரம் செய்வது எல்லா கோயில்களிலும் உள்ள வழக்கம். இங்கு மட்டும் நிற்கும் அம்பாளை உட்கார்ந்துள்ளது போல அலங்காரம் செய்கிறார்கள்.

 

  • வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பக பாண்டியன் எனும் மன்னன் இக்கோயிலை எழுப்பியதால் இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு செண்பகவல்லி என்ற பெயர் வந்ததாகவும் , ‘கோவிற்புரி’ என அந்த மன்னன் உருவாக்கிய இந்நகரே பின்னாளில் திருமங்கை நகராகி கோவில்பட்டி என்றானதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

திருவிழா: 

வசந்த உற்சவம் வைகாசி 10 தினங்கள். அம்பாள் ‌‌வளைகாப்பு உற்சவம் (ஆடிப்பூரம்) அம்பாளுக்கான சிறப்புத் திருவிழா. நவராத்திரி புரட்டாசி 10 தினங்கள். திருக்கல்யாணத் திருவிழா 12 நாள் பெருந்திருவிழா. சித்திரைத் தீர்த்தம் தமிழ் புத்தாண்டு தினம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு செண்பகவல்லி பூவனாதர் திருக்‌கோயில்

கோவில்பட்டி-628501,

தூத்துக்குடி மாவட்டம்

 

போன்:    

+91 4632 2520248

 

அமைவிடம்:

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் மதுரையிலிருந்து 96 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து 59 கி.மீ., தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

two × 5 =