November 29 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பாளையங்கோட்டை

  1. அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி

தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி

ஊர்       :     பாளையங்கோட்டை

மாவட்டம்  :     திருநெல்வேலி

 

ஸ்தல வரலாறு:

சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.

அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் இந்த வீர தீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது.

 

தாமிரபரணியின் தென்திசை பகுதியில் மணற்படைவீடு என்ற பகுதியினை உக்கிர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனது மகனான சீவலனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத நிலையில் புத்திர பாக்கியம் வேண்டி யாத்திரை சென்றான். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பூஜித்த கோபாலனது விக்கிரகத்தை கங்கையாற்றில் விட்டு சென்றதாகவும், அதை எடுத்து வந்து செண்பகாரண்யத்தில் பிரதிஷ்டை செய்தால் சீவலனது விருப்பம் நிறைவேறும் என்று கேள்விப்பட்டு சீவலன் கருடன் வட்டமிடும் கங்கை கரையில் கோபாலனின் விக்கிரகத்தை கண்டெடுத்து அதை கண்வ முனிவர் ஆலோசனைப்படி வேதநாராயணர் எழுந்தருளியிருக்கும் திருமங்கை நகரான செண்பகாரண்ய ஷேத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும், இதைத்தொடர்ந்து அரசனுக்கு இரு புத்திரர்கள் பிறந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இன்றும் பக்தர்கள் சந்தான பாக்கியத்திற்காக (குழந்தை பாக்கியம்) கோபாலசுவாமியை பிரார்த்திக்கின்றனர்.

 

கோயில் சிறப்புகள்:

  • இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மத்தியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, அழக மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் மாநவல்லபன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு கோபுரங்களுடனும், விமானங்களுடனும், இரண்டு திருச்சுற்றுக்களுடனும், எண்ணற்ற மண்டபங்களுடனும் காட்சி தருகிறது இந்தக் கோவில்.

 

  • இங்கு அழகே வடிவான ராஜ களை நிரம்பிய அழகிய மன்னாரும், வேதங்களுக்கு அதிபதியான வேதநாராயணரும், ஆநிரைகளின் தலைவனான கோபால சுவாமியும் எழுந்தருளியுள்ளனர்.

 

  • கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான வேதநாராயண பெருமாள் 8 அடி உயரத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். தேவியர்கள் இருவரும் வேதவல்லி தாயார், குமுதவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

  • ஸ்ரீகோபாலன் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அர்த்த மண்டபத்தில் இருந்து காட்சி தருகிறார். இவரை உற்சவமூர்த்தி என்றும் அழைப்பர். வேதநாராயண பெருமாளுக்கு தென்திருச்சுற்றில் ஸ்ரீதேவி தனிக்கோவிலும், வடக்கு திருச்சுற்றில் பூதேவி தனிக்கோவிலும் கொண்டுள்ளனர்.

 

  • அருள்மிகு செண்பக விநாயகர் தென்பகுதியில் ஒரு சிறிய அளவில் தனி சன்னிதியில் காணப்படுகிறார்.

 

  • உள் திருச்சன்னிதியின் மேற்கே ஸ்ரீ பரமபதநாதர் தமது தேவிமார்களுடனும், ஸ்ரீ ஆதிவராகர் லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணமும், தசாவதார மூர்த்திகளும் காட்சி தருகின்றனர்.

 

  • கருவறையின் மேல்தளத்தில் ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் வேறு சில ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அழியாத தாவரக்கலை வர்ணத்தால் இச்சிலைகள் மெருகேற்றப்பட்டு உள்ளன.

 

  • ஐந்து நிலைகளுடன் கூடிய அன்னக்கூட ராஜகோபுரம், 5 அடுக்கு உயரத்துடன் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சுமார் 69 அடி உயரத்தில் கருவறை விமானம் அமைந்து உள்ளது.

 

  • பிற்காலத்தில் மலையை (சிறு குன்று) சரி செய்து இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் வர்ணகலாப திருமேனியாக கீழேயும், மேலேயும் எழுந்தருளியுள்ளார். வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே அபிஷேக மூர்த்தியாக காணப்படுகிறார். ஸ்ரீ வித்யா ராஜகோபால மூர்த்தியான இவர், மிகவும் வரப்பிரசாதியாக உள்ளார்.

 

  • இந்த ராஜகோபுரத்தில் தெய்வ சிலைகளை தவிர மனித உருவ வழிபாடுகளே கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

 

  • தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது.

 

  • இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ளது.

 

  • இந்த கோயிலில் விஷ்ணுப்பிரியன் என்ற அர்ச்சகர் பூஜை செய்துவந்தார். அவருக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தன. எனவே தமக்கு பின் சுவாமிக்கு பணிவிடை செய்ய ஆண் குழந்தை வேண்டும் என கோபாலனிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் பின்னரும் அவரது மனைவி கலாவதிக்கு பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கோபமடைந்த விஷ்ணுப் பிரியன், ஆரத்தி தட்டினை சுவாமி மீது வீசினார். இதனால் சுவாமியின் மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றுபார்த்தபோது பிறந்திருந்த பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது. வெலவெலத் துப்போன அர்ச்சகர் கோயிலுக்கு வந்து சுவாமியிடம் வருந்தினார். அப்போது கோபாலசுவாமி, பாமா ருக்மணி சமேதராய் காட்சியளித்தார். இதனால் சுவாமிக்கு “பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்’ என்ற பெயர் ஏற்பட்டது.

 

திருவிழா:

ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி மாதத்தில் பதினோறு நாட்கள் பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரம் அன்று தேரோட்டமும் மிகப் பெரிய விழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் பத்தாம் நாள் தேரோட்டம் முடிந்து அன்று இரவு பெருமாள் தவழும் கண்ணனாக பல்லக்கில் எழுந்தருளுவார். பதினொராம் திருநாளன்று தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். ஆவணி மாதத்தில் வருகின்ற கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை மற்றும் விஜயதசமி பரிவேட்டை, கார்த்திகை தீபம், மார்கழி திருப்பாவை வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, தை மாத ரதசப்தமி ஆகியவையும் சிறப்பான விழாக்களாக நடைபெறுகின்றது.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு மன்னார் ராஜகோபால் சுவாமி திருக்கோயில்,

பாளையங்கோட்டை – 627 002

திருநெல்வேலி மாவட்டம்.

 

போன்:    

+91-462-257 4949.

 

அமைவிடம்:

திருநெல்வேலி பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஒரு கி.மீ, தூரத்திலுள்ள கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.

Share this:

Write a Reply or Comment

6 + 18 =