November 28 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தென்குடித்திட்டை

  1. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     வசிஷ்டேஸ்வரர்

அம்மன்         :     உலகநாயகியம்மை, மங்களாம்பிகை

தல விருட்சம்   :     முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி

தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம்

புராண பெயர்    :     திருத்தென்குடித்திட்டை, திட்டை

ஊர்             :     தென்குடித்திட்டை

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. “ஓம்’ என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி. மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் ஓம் என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் ஹம் என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று.

இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.

 

கோயில் சிறப்புகள்:

  • கரைபுரண்டு ஓடும் காவிரியாறில் இருந்து கிளை பிரிந்து வெட்டாறு, வெண்ணாறு என ஓடுகின்றன. இந்த இரண்டு கிளை ஆறுகளுக்கும் நடுவே அழகுற அமைந்திருக்கிறது திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலம்.

 

  • வேதங்கள் நான்கும் சிவனாரை வணங்கி வழிபட்ட திருத்தலம் என்று திட்டை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

 

  • வசிஷ்ட மகரிஷி, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, பர்ணசாலை அமைத்து கடும் தவம் புரிந்து வந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், சுயம்புமூர்த்தமாக சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளினார். இதனால் இந்தத் தலத்து இறைவனுக்கு சுயபூதேஸ்வரர், வசிஷ்டேஸ்வரர் என திருநாமங்கள் அமைந்தன.

 

  • காமதேனுப் பசு வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் இது என்பதால் இங்கே உள்ள சிவனாருக்கு பசுபதீஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு.

 

  • ஸ்ரீபிரம்மா, மகாவிஷ்ணு, காலபைரவர், சூரிய பகவான், சனீஸ்வரர், யமதருமன், இந்திரன், கெளதமர், ஜமதக்னி முனிவர் முதலானோரும் கடும் தவம் புரிந்து ஈசனை வழிபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல புராணம்.

 

  • ரிக்,யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் ஈசனிடம் சென்று தங்களது குறைகளைக் கூறி கலங்கி நின்றன. இந்த வேதங்கள் ஈசனது திருவடிகளைப் பணிந்து வணங்கிய திருத்தலமே தென்குடித்திட்டை என்று தமது தேவாரப் பாடல் மூலம் பாமாலை சூட்டி நெகிழ்ந்துள்ளார் ஞானசம்பந்தப் பெருமான்.

 

  • திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள். பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவ பெருமான்.

 

  • புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார்.

 

  • இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை ‘பஞ்சலிங்கஷேத்திரம்’ என்று கூறுவர்.

 

  • இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

  • மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு ‘சந்திரகாந்தக்கல்’ பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

 

  • ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது.

 

  • அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

 

  • வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

 

  • தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்

 

  • சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.

 

  • திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

 

  • நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது அதிசயம்.

 

  • பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை

 

  • சுமாலி என்பவனின் தேர் அழுந்திய இடமாதலின் ரதபுரி – தேரூர் என்றும்; காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும்; ரேணுகை வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் விளங்குகிறது.

 

திருவிழா: 

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை,

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்,

தென்குடித்திட்டை- 614 206.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91-4362 252 858, 94435 86453

 

அமைவிடம்:

தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

 

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன்

உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம்

பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும்

திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

திருஞானசம்பந்தர்

 

Share this:

Write a Reply or Comment

18 + 8 =