November 27 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பவானி

  1. அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ஆதிகேசவப்பெருமாள்

உற்சவர்        :     கூடலழகர்

தாயார்          :     சவுந்திரவல்லி

தல விருட்சம்   :     இலந்தை

தீர்த்தம்         :     காவிரி, பவானி, அமிர்தநதி

புராண பெயர்    :     திருநணா

ஊர்            :     பவானி

மாவட்டம்       :     ஈரோடு

 

ஸ்தல வரலாறு:

அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி பூலோகத்தில் தலயாத்திரை சென்றான்.அவன் இவ்வழியாக சென்றபோது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி என ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்கினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அதைக்கண்ட குபேரன் அருகில் வந்தபோது தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள் என பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் அமைதியாக இருந்தன.ஆச்சர்யமடைந்த குபேரன், கொடிய மிருகங்களும் அமைதியாக இருக்கும் இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமென எண்ணினான். இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பி தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர்.குபேரன் அவர்களிடம், “புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்போதும் அருள வேண்டும்’ என வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார்.

 

கோயில் சிறப்புகள்:

  • ஆதிகேசவர் சிலை முழுக்க சாளக்கிராமத்தால் செய்யப்பட்டதாகும்.

 

  • பிரதோஷ நாளன்று லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 

  • கோயில் முன்மண்டபத்தில் சந்தான கோபாலர் ருக்குமணி, சத்யபாமாவுடன் இருக்கிறார்.

 

  • கருவறையில் ஆதிகேசவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். தாயார் சவுந்திரவல்லி சுவாமிக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

 

  • இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே லட்சுமி நரசிம்மர் சாந்தமான கோலத்தில் இருக்கிறார்.

 

  • இத்தலத்தில் சிவன் சங்கமேஸ்வரராகவும், திருமால் ஆதிகேசவராகவும் அருளுகின்றனர்.

 

  • சிவன் வலது புறத்தில் லிங்க வடிவத்தில் இருக்க, திருமால் இடது புறத்தில் அர்ச்சாவதார வடிவத்தில் இருக்கிறார்.

 

  • இவ்விருவரின் சன்னதிகளுக்கு இடையே அம்பாள் வேதநாயகி, தாயார் சவுந்திரவல்லியின் சன்னதிகள் அமைந்துள்ளது. அம்பாள், தாயாருக்கு சிவன், பெருமாள் இருவரும் பாதுகாப்பாக இருந்து அருளுவதாக இக்கோலத்தை சொல்கிறார்கள்.

 

  • தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும், தாம்பத்யம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

 

  • வடக்கு மற்றும் தென் திசையில் இரண்டு ராஜகோபுரங்கள் இருக்கிறது. இவை சிவன், ஆதிகேசவர் இருவருக்கும் பொதுவானதாக கருதப்படுகிறது. பிரதான வாசல் வழியே நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஆதிகேசவர் சன்னதி இருக்கிறது. ஒரே தலத்தில் சிவன், திருமால் இருவரையும் தரிசிப்பது விசேஷமான பலன்களைத் தரும்.

 

  • ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் ராதா, ருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.

 

  • கொங்கு நாட்டில் உள்ள முக்கியமான 7 தலங்களில் இத்தலமும் ஒன்று. ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்தில்தோன்றியதாகவும், அவற்றின் வடிவமாக இங்கு சிவனும், திருமாலும் இருப்பதாக சொல்கிறார்கள்.

 

  • காவிரி, பவானி, அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் இத்தலத்தில் சங்கமிக்கின்றன. இதில் அமிர்தநதி மட்டும் கண்ணிற்கு தெரியாது.இந்த நதியானது பூமிக்கடியில் இருந்து இவ்விடத்தில் சங்கமிப்பதாக ஐதீகம்.

 

  • மூன்று நதிகள் சங்கமிப்பதால் இத்தலத்திற்கு, “தென்திரிவேணி சங்கமம்’ என்ற பெயரும் உண்டு.இந்நதியில் நீராடி சிவன், திருமாலை வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

 

  • இங்கு அதிகளவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பெருக்கு, வைகுண்ட ஏகாதசி.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,

பவானி – 638 301,

ஈரோடு மாவட்டம்.

 

போன்:    

+91- 4256 – 230 192.

 

அமைவிடம்:

ஈரோட்டில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தே சென்று விடலாம்.

Share this:

Write a Reply or Comment

1 + eight =