November 26 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருவண்ணாமலை

  1. அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்

அம்மன்         :     அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்

தல விருட்சம்   :     மகிழமரம்

தீர்த்தம்         :     பிரம்மதீர்த்தம், சிவகங்கை

புராண பெயர்    :     திருண்ணாமலை

ஊர்            :     திருவண்ணாமலை

மாவட்டம்       :     திருவண்ணாமலை

 

ஸ்தல வரலாறு:

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.

 

முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் மகிழ மரத்தடியில் சுயம்பு லிங்கம் சிறு மண்சுவர் கோவிலாக இருந்தது. 4 ம் நூற்றாண்டில் கருவறை செங்கல்லால் கட்டப்பட்டது. 5 ம் நூற்றாண்டில் அது சிறு ஆலயமாக மேம்பட்டது. 6, 7, 8 ம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் அண்ணாமலையார் பாடப் பெற்றார். அப்படி பாடப் பெற்றபோது கூட அண்ணாமலையார் செங்கல் கருவறையில்தான் இருந்தார். ஆலயமும் ஒரே ஒரு அறையுடன் இருந்தது. 9-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு செல்வாக்கு பெற்ற போது திருவண்ணாமலை ஆலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. 817 ம் ஆண்டு முதலாம் ஆதித்ய சோழ மன்னன் செங்கல் கருவறையை அகற்றி விட்டு கருங்கல்லால் ஆன கருவறையைக் கட்டினார். பிறகு ஒரு காலக்கட்டத்தில் அந்த கருவறை மகிழ மரத்தடியில் இருந்து தற்போதைய இடத்துக்கு மாறியது. 10 ம் நூற்றாண்டில் கருவறையைச் சுற்றி முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்கள் கட்டப்பட்டன. சோழ மன்னர்களின் வாரிசுகள் தான் இந்த பிரகாரங்களைக் கட்டினார்கள். அப்போதே திருவண்ணாமலை ஆலயம் விரிவடையத் தொடங்கி இருந்தது.

 

11-ம் நூற்றாண்டில் கோபுரங்கள் எழத் தொடங்கின. முதலாம் ராஜேந்திரச் சோழன் கொடி மர ரிஷி கோபுரத்தையும் சுற்றுச் சுவர்களையும் கட்டினான். 1063 ம் ஆண்டு வீரராஜேந்திர சோழ மன்னனால் கிளிக்கோபுரம் கட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை ஆலயம் கம்பீரம் பெறத் தொடங்கியது.

 

12 ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னர் உண்ணாமலை அம்மனுக்கு தனி சன்னதி கட்டினார். 13-ம் நூற்றாண்டில் சிறு, சிறு சன்னதிகள் உருவானது. சோழ மன்னரிடம் குறுநில மன்னராக இருந்த பல்லவராஜா கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் இந்த சன்னதிகளைக் கட்டினார்கள். அதோடு ஏராளமான நகைகளையும் திருவண்ணாமலை கோவிலுக்கு அவர்கள் வாரி வழங்கியுள்ளார்கள்.

 

14 ம் நூற்றாண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும். அந்த நூற்றாண்டில்தான் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டப்பட்டன. 1340 ம் ஆண்டு முதல் 1374 ம் ஆண்டுக்குள் இந்த மூன்று கோபுரங்களும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹொய்சாள மன்னர் வீரவல்லாளன் இந்த திருப்பணிகளைச் செய்தார்.

 

15 ம் நூற்றாண்டில் திருவண்ணாமலை ஆலயத்துக்கு நிறைய பேர் தானமாக நிலங்களை எழுதி வைத்தார்கள். திருவண்ணாமலை ஆலயம் பொருளாதாரத்தில் மேம்பாடு பெற்றது இந்த நூற்றாண்டில் தான்.

 

16 ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு திருவண்ணாமலை கோவில் மிக பிடித்து போய் விட்டது. திருவண்ணாமலை ஆலயத்தை மிகப்பெரிய ஆலயமாக மாற்றி அமைத்த பெருமைக்கு சொந்தக்காரர் அவர். அவர் மற்ற மன்னர்கள் போல ஏதோ ஒன்றிரண்டு திருப்பணிகள் மட்டும் செய்யவில்லை. இருபது பெரிய திருப்பணிகளை செய்தார். அந்த திருப்பணிகள் ஒவ்வொன்றும் இன்றும் திருவண்ணாமலையில் கிருஷ்ண தேவராயரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. 217 அடி உயரத்தில் கம்பீரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் கிழக்கு ராஜகோபுரம் சிவகங்கை தீர்த்தக்குளம், ஆயிரம் கால் மண்டபம், இந்திர விமானம், விநாயகர் தேர் திருமலைத்தேவி அம்மன் சமுத்திரம் என்ற நீர்நிலை, ஏழாம் திருநாள் மண்டபம், சன்னதியில் உள்ள 2 கதவுகள், வாயில் கால்களுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் ஆலய வாயில் கால்கள் கதவுக்கு தங்க முலாம் பூசியது, உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன் ஆராஅமுதக்கிணறு வெட்டியது, அண்ணாமலையார்க்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் கிருஷ்ணராயன் என்ற பெயரில் பதக்கம் செய்து கொடுத்தது, நாகாபரணம், பொற்சிலை, வெள்ளிக்குடங்கள் ஆகியவை கிருஷ்ண தேவராயரின் முக்கிய திருப்பணிகளில் சில.

 

1529 ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்கர் கிழக்கு ராஜகோபுரத்தை 1590-ல் கட்டி முடித்தார். இதற்கிடையே குறுநில மன்னர்களும் சிவனடியார்களும் சிறு சிறு கோபுரங்களைக் கட்டினார்கள். பே கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், வல்லாள மகாராஜ கோபுரம் ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை. இன்று 9 கோபுரங்களுடன் திருவண்ணாமலை ஆலயம் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரங்கள் அனைத்தும் 1370 ல் கட்டத் தொடங்கப்பட்டு 1590 ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. கோபுரங்கள் கட்டி முடிக்கவே சுமார் 220 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னர்கள் மட்டுமில்லாமல் மகாராணிகள், இளவரசர்கள், இளவரசிகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், அரசு பிரதிநிதிகள், சித்தர்களும் இந்த ஆலயத்தின் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சோழ, பாண்டிய, பல்லவ, ஹொய்சாள, சம்புவராய, விஜயநகர, தஞ்சை மன்னர்கள் போட்டி போட்டு செய்த திருப்பணிகள்தான் திருவண்ணாமலை தலத்தை நோக்கி மக்கள் வர உதவி செய்தது. 14 ம் நூற்றாண்டில் இருந்து 17 ம் நூற்றாண்டு வரை திருவண்ணாமலை நகரம் பல்வேறு போர்களை சந்ததித்தது. என்றாலும் அண்ணாமலையார் அருளால் இடையிடையே திருப்பணிகளும் நடந்தது. கடந்த சுமார் 150 ஆண்டுகளாக நகரத்தார் செய்து வரும் பல்வேறு திருப்பணிகள் மகத்தானது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாட்டுக்கோட்டை நகரத்தார் திருவண்ணாமலையில் குடியேறினார்கள். மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலை ஆலயத்தில் மாபெரும் திருப்பணிகள் செய்த பெருமையும் சிறப்பும் நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு உண்டு. 1179 ம் ஆண்டு கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் ஆலயத்தை முழுமையாக அகற்றி விட்டு புதிய சன்னதியை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் கட்டி கொடுத்தனர். அது மட்டுமின்றி இத்திருக்கோவிலை முழுமையாக திருப்பணி செய்து 12-06-1903, 4-6-1944, 4-4-1976 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்த புண்ணியமும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கே சாரும்.

 

கோயில் சிறப்புகள்:

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

  • கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள் ரகசியங்களில் பெரும்பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள் தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள் ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. இதுவரை ஆராயப்பட்ட 119 கல்வெட்டுகளில் இருந்து திருவண்ணாமலை ஆலயம் முதலில் எப்படி தோன்றியது எப்படி வளர்ச்சி பெற்றது, யார் யாரெல்லாம் கோவிலை கட்டினார்கள் என்ற உண்மை ஆதாரப்பூர்வமாக நமக்கு கிடைத்துள்ளது.

 

  • அடி முடி காண முடியாதபடி ஆக்ரோஷமாக தீப்பிழம்பாக நின்ற ஈசன் மனம் குளிர்ந்து மலையாக மாறியபோது அவரிடம் விஷ்ணுவும் பிரம்மாவும் இவ்வளவு பெரிய மலையாக இருந்தால் எப்படி மாலை போட முடியும்? எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? என்று கேட்டனர். இதைத் தொடர்ந்தே ஈசன் மலையடி வாரத்தில் சுயம்பு லிங்கமாகத் தோன்றியதாகத் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  • பஞ்சபூத தலங்களில் அக்னி தலம்.

 

  • நினைத்தாலே முக்தி தரும் தலம்.

 

  • சித்தர்கள் பலர், ஜோதியில் இணைந்த அற்புத தலம்.

 

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • லிங்கமே மலையாக அமைந்த மலை

 

  • தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம்.

 

  • இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும்.இது ஏகத்தை குறிக்கும்.மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும். மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.

 

  • முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

 

  • சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.
  • மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

 

  • அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பெயர். அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்று பொருள் தரும்.பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

 

  • கயிலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலைதான் இத்தலத்துக்கே மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

 

  • இந்த மலையையே சிவலிங்கமாக கருதி சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்.

 

  • உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.

 

  • கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில்.

 

  • கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.

 

  • சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, “”ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்” தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

 

  • பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதி இருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இவரது சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி பூஜிக்கின்றனர். அதன்பின்பு, அத்தீபத்தை பெருமாளாகக் கருதி, பிரகாரத்திலுள்ள “வைகுண்ட வாசல்’ வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

 

  • கோயில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். முழுமுதற்கடவுள் என்பதால் இவரை வணங்கிவிட்டு சன்னதிக்குள் செல்வர். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள்.

 

  • சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அவரது பக்தியை இகழ்ந்தான். அருணகிரியார் முருகனை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், “கம்பத்திளையனார்’ (கம்பம் தூண், இளையனார் முருகன்) என்று பெயர் பெற்றார். இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது. இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார். அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார். அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்ற போது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர். இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.

 

  • அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

 

  • காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

 

  • எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்துள்ள போதிலும் வல்லாள மகாராஜா மீது அண்ணாமலையாருக்கு தனிப்பட்ட முறையில் பாசம் அதிகம் இருந்தது. அதற்கு காரணம் வல்லாள மகாராஜா வாரிசு எதுவும் இல்லாமல் தவித்தது தான். திருவண்ணாமலையை ஆட்சி செய்த அந்த மன்னன் மீது இரக்கப்பட்ட அண்ணாமலையார் அவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார். அந்த மன்னனின் மகனாக மாறி அற்புதம் செய்தார். அது மட்டுமின்றி வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது அவருக்கு இறுதிச்சடங்குகள் அண்ணாமலையார் சார்பில் செய்யப்பட்டன. மேலும் ஆண்டு தோறும் வல்லாள மகாராஜாவுக்கு மாசி மாதம் அண்ணாமலையார் திதி கொடுத்து வருகிறார். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை அண்ணாமலையார் செய்து வருகிறார்.

 

  • நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

 

திருவிழா: 

  • கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா,

 

  • மாசி மகா சிவராத்திரி

 

  • இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா)

 

 

திறக்கும் நேரம்:

காலை 5மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,

திருவண்ணாமலை-606 601.

திருவண்ணாமலை மாவட்டம்.

 

போன்:

+91-4175 252 438. 254 425

 

அமைவிடம்:

திருவண்ணாமலை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ் வசதி உள்ளது.

Share this:

Write a Reply or Comment

15 − four =