- அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு
மூலவர் : லெட்சுமணப்பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன்,ஸுக்திநாதன்)
தாயார் : மதுரவேணி நாச்சியார்
தீர்த்தம் : சங்க தீர்த்தம், சிற்றாறு
புராண பெயர் : திருமூழிக்களம்
ஊர் : திருமூழிக்களம்
மாவட்டம் : எர்ணாகுளம்
ஸ்தல வரலாறு:
இரு சகோதரர்களிடையேயான உணர்வு பூர்வமான மோதலோடு திருமூழிக்களம் என்ற திவ்ய தேசம் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த சகோதரர்கள் லட்சுமணனும், பரதனும். லட்சுமணனுடனும், சீதையுடனும் சித்ரகூடத்தில் ராமன் தங்கியிருந்தபோது ஏற்பட்டது அந்த மோதல். வெகு தொலைவில் மண் புழுதி விண்ணை எட்டும் அளவுக்கு உருவாக்கிய பெரும் ஆரவாரத்தை லட்சுமணன் உடனே அடையாளம் கண்டுகொண்டான். ஆமாம், படை, பரிவாரங்களோடு அப்படி வருபவன் பரதன்தான்! ராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று கைகேயி, தசரதனின் ஆணையாகக் கூறி ராமனை அயோத்தியை விட்டு விரட்டியபோது அங்கே பரதன் இல்லை, அவன் தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்றிருந்தான். இதுவே ராமனுடன் காட்டுக்குச் சென்ற லட்சுமணனுக்குப் பெரிய உறுத்தலாக இருந்தது – – ‘தெரிந்தேதான் போய் மறைந்துகொண்டானோ?’ அப்போது முதல் அவன் பரதனைப் பரம எதிரியாகவே கருதத் தொடங்கினான். அதனால்தான் இப்போது பரதன் வரும்போது அவனை இன்னமும் சந்தேகிக்கத் தோன்றியது லட்சுமணனுக்கு. ராமனை முற்றிலுமாக ஒழித்திட படைகளுடன் பரதன் வருகிறான் என்றே குரூரமாக சிந்தித்தான். ராமனை நெருங்கு முன்னாலேயே பரதனை அழித்துவிட ஆவேசப்பட்டான். ஆனால், நிலைமை வேறாக இருந்தது. தன் படைகளோடு மட்டுமல்ல அயோத்தி மக்கள் பலருடனும் ராமனை நாடி வந்திருந்த அவன், ராமன் இப்போதே, உடனடியாக அயோத்திக்குத் திரும்பவேண்டும் என்றும் சிம்மாசனத்தில் அமர்ந்து அதனை சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். இதைப் பார்த்த லட்சுமணன், தன் துர்சிந்தனைக்காக வெட்கப்பட்டான். ஆனாலும், அவனுடைய மனதில் திடமாகக் குடியிருந்த வன்மம், பரதனுடன் அவனை சுமுகமாகப் பேச வைக்கவில்லை. பரதன் மீதான சந்தேகம் லட்சுமணனை விட்டு முற்றிலுமாக நீங்கவில்லை. இறுதியாக ராமன், லட்சுமணனை ஆசுவாசப் படுத்தினான். பரதன் விரும்பிக் கேட்டுக்கொண்டபடியே தன் விக்கிரகங்களை அவனிடம் அளித்தான்.
கிருஷ்ணாவதாரத்தின்போது, கிருஷ்ணர் துவாரகையில் ராமபிரான், லட்சுமணர், பரதன், சத்ருகனன் விக்கிரகங்களை வழிபட்டு வந்தார். ஒருசமயம் வெள்ளம் ஏற்பட்டு, இப்பகுதி தண்ணீரில் மூழ்கியது. அப்போது வாக்கேல் மைமல் முனிவரிடம் இந்த விக்கிரகங்கள் கிடைத்தன. அன்றிரவு அவரது கனவில் தோன்றிய திருமால், பாரதப்புழா ஆற்றங்கரையோர தலங்களில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் பணித்தார். அதன்படி திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் ராமர் கோயில், இரிஞ்சாலக்குடா பரதன் கோயில், பாயமல் சத்ருக்னன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில் அமைந்தன.
ஹரித முனிவர், திருமூழிக்களம் என்ற இந்தத் திருத்தலத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே தன் எண்ணங்களை எழுத்தாக வடித்தார். தனக்குப் பின்னால் தோன்றும் மக்கள் அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய பல ஞானநூல்களை அவர் உருவாக்கினார். வெறும் செல்வம் சேர்ப்பதையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொள்ளாமல் கல்வி, அறிவு, ஞானத்தை, மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின அந்த நூல்கள்.இப்படி அற்புதமான நூல்களை உருவாக்கிய அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், சாட்சாத் பெருமாளின் திவ்ய தரிசனமே! பகவானைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளம் உருக, கண்களில் நீர் வழிய, அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்தார். ‘உன்னுடைய ஞானத் திரட்சியைக் கண்டு பிரமித்தே நான் வந்தேன். வருங்கால சந்ததியின் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் அற்புத நூல்களை உருவாக்கிய உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று பரந்தாமன் கேட்டபோது மேலும் நெகிழ்ந்து குதூகலித்தார் ஹரித முனிவர்.
பகவானே, இப்படி ஒரு திவ்ய தரிசனத்தைக் காட்டிய பிறகும் ஏதேனும் வேண்டும் என்று நான் கோருவது தகுமா? ஆனாலும், இந்தத் தலம் மேன்மையடைய வேண்டும். திருமொழிகளால் நல் நூல்களை உருவாக்க வைத்த இந்தத் தலம் திருமொழிக்களம் என்றழைக்கப்பட வேண்டும். இங்கே தாங்கள் அர்ச்சாவதாரமாகக் கோயில் கொண்டு, ‘திருமொழிக்களத்தான்’ என்ற திருப்பெயரோடு அருள வேண்டும்’’ என்று நெஞ்சம் பூரிக்கக் கேட்டுக்கொண்டார் முனிவர்.பரந்தாமனும் அவ்வாறே அக்கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஹரித முனிவர் எழுதிய நூல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு அந்தத் தொகுதி ‘ஹரித ஸம்ஹிதை’ என்று வழங்கப்பட்டது. இன்றும் அந்த நூல்கள் ஞான விளக்கமாகவே துலங்குகின்றன.
கோயில் சிறப்புகள்:
- 108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணப் பெருமாள் கோயில், 79-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.
- இத்தலத்தில் லட்சுமணரும், பரதனும் வழிபாடு செய்துள்ளனர்.
- நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
- இத்தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும்கூட திருமூழிக்களம் என்றுதான் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
- ராமபிரான் வனவாசம் செல்லும்போது, சித்ரகூடத்தில் தங்கினார். அப்போது ராமபிரானை சந்திக்க பரதன் வந்திருந்தார், இதைக் கண்ட லட்சுமணன், ராமபிரானுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவரைத் தாக்க முற்பட்டார், பிறகு தன் தவறுக்கு மன்னிப்பு கோரி இத்தலத்து பெருமாளை வழிபட்டார். அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத் தழுவி இன்சொல் கூறினார். இதனாலேயே இத்தலம் ‘திருமொழிக்களம்’ என்ற பெயரை பெற்றதாக பெரியோர் கூறுவர்.
- தன் குற்றத்துக்குப் பிராயசித்தம் செய்ய விரும்பிய லட்சுமணன், முனிவர் யோசனைப்படி, தனக்கு ‘ஞானோதயம்’ தந்த அந்தத் தலத்தை, திருமொழிக்களத்தான் கோயிலை, புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான்.இப்படி லட்சுமணன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை அதனாலேயே ‘லட்சுமணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள்.
- ராமாயண சகோதரர்களுக்கு கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லட்சுமணனுக்கு மட்டுமே உண்டு. தவறை உணர்வதும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுமான மனப்பக்குவத்திற்குதான் எத்தகைய பெரிய வெகுமதி! ஸ்ரீராமனுக்கு திருப்பரையாரிலும், பரதனுக்கு இரிஞாலகுடாவிலும், சத்ருக்னனுக்கு பாயம்மலிலும் தனித்தனி கோயில்கள் விளங்குகின்றன. ஆனால், திருமொழிக்களத்தில் உறையும் இறைவன் லட்சுமணப் பெருமாள் என்று அழைக்கப்படுவது, இந்த பிற கோயில்களினின்றும் தனிப் பெருமையானது.
- ராம சகோதரர்களின் இந்தக் கோயில்களில் உறையும் பெருமாள்கள், ஸ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவர்கள். துவாரகை நகரை உருவாக்கி அங்கே வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். அப்போது ஏற்பட்ட பிரளயத்தால் துவாரகையை கடல் விழுங்கியது. அதனால் கிருஷ்ணன் வழிபட்ட ராம சகோதரர் விக்ரகங்களும் கடலில் மூழ்கின. பின்னாளில் ஒரு மீனவர் வலையில் சிக்கிய இந்த விக்ரகங்கள் கேரளத்தில் வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்கிறார்கள்.
- கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன்-சீதை-அனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.
- லட்சுமணன் தனியே மூலவராக விளங்குவதால் இந்த சந்நதியில் அவர் இடம் பெறவில்லை
- சாலக்குடி ஆறு, கோயிலின் தீர்த்தமாக பெருமையுடன் ஓடுகிறது. கருவறையில் லட்சுமணப் பெருமாள் என்ற திருமூழிக்களத்தான், பேரழகுடன் ஜொலிக்கிறார். இந்தப் பெருமாளை நம்மாழ்வார் ஒளிச்சுடராகவே கண்டு மகிழ்ந்திருக்கிறார்:
- கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலமாக, ஒருகாலத்தில் திருமூழிக்களம் விளங்கியுள்ளது.
- ஸ்ரீசுக்தி இங்கு அருளப்பட்டதால், பல நூல்கள் ஆராயப்பட்டன. கற்றறிந்த சான்றோர் பலர் குழுமியதால், இந்நகரம் கல்வி மாநகராகவும், கலை மாநகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது
- திருமூழிக்களத்தான் பேரொளியோடுதான் திகழ்கிறார். நான்கு திருக்கரங்கள். இடது கரம் சங்கு ஏந்தியிருக்க, வலது கரம் பிடித்திருக்கும் சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தனுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. கீழ் வலதுகரம் கதையைப் பற்றியிருக்க, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் அமைந்திருக்கிறது.
திருவிழா:
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்,
திருமூழிக்களம்-683 572
எர்ணாகுளம் மாவட்டம்,
கேரளா மாநிலம்.
போன்:
+91- 484 – 247 3996
அமைவிடம்:
ஆலப்புழை-எர்ணாகுளம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூழிக்களம். எர்ணாகுளம்-ஆலப்புழை ரயில் பாதையில் அங்கமாலி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு.