November 22 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   தாண்டிக்குடி

298.அருள்மிகு தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாலமுருகன்

உற்சவர்        :     முருகன்

புராண பெயர்    :     தாண்டிக்குதி

ஊர்            :     தாண்டிக்குடி

மாவட்டம்       :     திண்டுக்கல்

 

ஸ்தல வரலாறு:

முருகப் பெருமான் சூரபத்மனுடன் சண்டைப் போட்டு அவனை வதம் செய்தப் பின் அவனது படையினரையும் அழித்தார். ஆனால் அதில் இடும்பன் மட்டும் தப்பி உயிர் பிழைத்து அகஸ்தியரின் சிஷ்யனாகி விட்டான். ஒருமுறை கைலாயம் சென்ற அகத்திய முனிவருக்கு இரண்டு மலைகள் பரிசாகக் கிடைத்தன. அதை எப்படி எடுத்துப் போவது என அவர் யோசனை செய்து கொண்டு இருந்தார். சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற அந்த இரண்டு மலைகளையும் தானே தூக்கிக் கொண்டு வருவதாக அவருடைய சிஷ்யனான இடும்பன் அகஸ்திய முனிவரிடம் கூறினான். அதைக் கேட்டு மகிழ்ந்த அகஸ்தியரும் அந்த இரண்டு மலைகளையும் அவன் தோளில் ஒரு காவடியைப் போல தூக்கிக் கொண்டு வருமாறு கூறினார். அந்த மலைகளை தோளில் சுமந்து கொள்ள வசதியாக அவற்றை அஷ்ட நாகங்களினால் அகஸ்திய முனிவரின் பிரும்ம தண்டத்தின் இரு முனைகளிலும் கட்டி அதை அவன் தோளின் மீது சுமந்து கொண்டு வருமாறு ஆணையிட்டார். அவர் கொடுத்த சக்தியினால் அவனால் எளிதாக அவற்றை தூக்கிக் கொண்டு முடிந்தது.

அதற்கு முன்னால் இடும்பன் தான் முருகப்பெருமானைக் தரிசித்து அவருக்கும் சேவை செய்ய வேண்டும் வேண்டும் என்றும் அதற்கு அகஸ்தியர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்திருந்தான். அவரும் அதற்கு தன்னால் ஆனா உதவியை செய்வதாக வாக்களித்து விட்டு இடும்பனுக்கு காட்சி தர வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டார். அந்த நேரத்தில் தனது பெற்றோர்கள் மீது கோபம் கொண்ட முருகப் பெருமான் பழனிக்குப் போகும் வழியில் தாண்டி மலையில் தங்கி இருந்தார். இடும்பன் மலைகளை சுமந்து கொண்டு செல்வதைக் கண்ட முருகப் பெருமான் இடும்பனுக்கு காட்சி தந்து அவனை தனக்கு சேவகனாக பழனியில் வைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தார். ஆனால் அவனை தானே சம்ஹாரம் செய்தால்தான் அவனது அசுர குணம் மறைந்து அவனும் தேவகணமாகி தனக்கு சேவகம் செய்ய முடியும் என்பதினால் வேண்டும் என்றே இடும்பன் முன்னிலையில் ஒரு மிகச் சிறுவன் உருவில் சென்று அவன் செல்லும் வழியில் படுத்துக் கிடந்தவாறு அவனை வம்புச் சண்டைக்கு இழுத்தார். அவன் மலை மீது தான் ஏறி நிற்க அவனால் அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் அவற்றைக் கீழே வைக்க வேண்டி இருந்தது. அவன் கோபமடைந்து அந்த சிறுவன் யார் என அறியாமல் அவரை அடித்துத் துரத்தச் செல்ல முயல  தற்போது உள்ள இடும்பன் மலை அருகே சென்றதும் அவனுடன் சண்டைப் போட்டு அவனை அங்கேயே வதம் செய்த பின் அவனுக்குக் காட்சி தந்தார். அந்த மலையைத் தாண்டிக் குதித்து முருகன் பழனிக்கு சென்றதினால் அந்த மலைப் பகுதியின் பெயர் அவர் தாண்டிக் குதித்துச் சென்ற இடமாக தாண்டிக் குதி என ஆகி அது பின்னர் மருவி தாண்டிக் குடி என ஆகிவிட்டது.  இப்படியாக அகஸ்தியரின் மூலம் நடைபெற்ற நாடகத்தினால்  அந்த இடம் முருகனின் ஆலயம் ஏற்பட  காரணமாகி விட்டது.

ஒருமுறை, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதிக்கு வந்த  பன்றி மலை சாமியார் என்ற மகான், மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி ‘இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார். மக்கள், அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அங்கே, ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. அதையடுத்து, கற்பக மகா முனிவர் வழிபட்ட இடம் அது என்பது தெரிந்து, பூரித்துப் போனது ஊர். அந்த ஊர் தாண்டிக்குடி எனப்படுகிறது..

 

கோயில் சிறப்புகள்:

  • போகர் முனிவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருளியதுபோல, கற்பக மகா முனிவருக்கு கந்தக் கடவுள் காட்சி தந்தருளிய தலம் இது என்கிறார்கள்.

 

  • பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம்

 

  • இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது.

 

  • இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

 

  • இங்கு மூலவரான முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவரின் அமைப்பே இக்கோவிலிலும் உள்ளது. பழனி மலை முருகன் சிலையில் இருக்கும் அத்தனை அம்சங்களும் அப்படியே இந்த சிலையில் இருப்பதால், இத்தல முருகனையும், `பழனி முருகன்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

 

  • தாண்டிக்குடி பாலமுருகன் ஆலயம். தாண்டிக்குடி கிராமத்தில் இருந்து கோவிலை சென்றடைய மூன்று கிலோமீட்டர் அழகான மலைப் பாதையில் பயணம் செய்தால், பாலமுருகன் ஆலயத்தை அடைந்து விடலாம். மலையின் உச்சியில் இப்படி ஒரு அற்புதமான ஆலயமா எனப் பிரமித்து மெய்சிலிர்த்துப் போகும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம்.

 

  • தாண்டிக்குடி செல்லும் வழிநெடுகிலும் ஒரு தெய்வீகத் தன்மை காணப்படுகிறது. நம்மையும் அறியாமல் அந்த தெய்வீகத்தன்மை அந்த முருகன் கோவிலுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்.

 

  • மலை உச்சியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த அற்புத ஆலயத்தை அடைவது மிகவும் கடினம் என்பதால், அங்கு செல்ல முருகப்பெருமானின் பரிபூரண அருள் நமக்கு மிகவும் அவசியம். அதனால்தான் மலை அடிவாரத்தில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள மக்கள் மேலே வந்து சிரமப்படக்கூடாது என்பதற்காக ஆலயத்தில் ஓர் மணி கட்டப்பட்டுள்ளது. இறைவனுக்கு பூஜை செய்யப்படும்போது ஒலிக்கப்படும் இந்த மணி, அடிவாரம் வரையிலும் நன்றாக கேட்கும். அப்போது கிராம மக்கள் அங்கிருந்தபடியே முருகப்பெருமானை நினைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.

 

  • கோவிலின் அருகில் வலதுபுறம் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும், மலைப் பாறை ஒன்று உள்ளது. பழனி திருத்தலத்தை நோக்கி இருக்கும் அந்த பாறையில் கால் தடம் ஒன்று காணப்படுகிறது. அது முருகப்பெருமானின் கால் தடம் என்கிறார்கள். இங் கிருந்துதான் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பழனி மலைக்கு முருகப்பெருமான் தாண்டிச் சென்றதாகவும், அதில் ஏற்பட்ட கால் தடம்தான் இது என்று கூறப்படுகிறது.

 

  • அதே போல் இந்தப் பாறையில் ஒரு வேலின் தோற்றம், மயிலின் தோற்றம், அனுமனின் தோற்றம், பாம்பின் தோற்றம் ஆகியவை காணப்படுகின்றன. அதை விட சிறப்பு, இங்குள்ள பாறையின் மீது எந்நாளும் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. சுனையில் ஒரு வேல் நடப்பட்டுள்ளது.

 

  • முருகப்பெருமானின் மற்ற கோயில்களில் இல்லாத பல சிறப்புகள் இத்தலத்துக்கு உள்ளன. கோயில் அருகேயுள்ள பாறையில் நின்று கீழே தெரியும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால், ஊரே மயில் வடிவில் அமைந்திருப்பதுபோல தெரியும். இங்குள்ள பாறையில் மயில் உருவம், பாம்பு உருவம், முருகனை வணங்கும் ஆஞ்சநேயர், வேல் உருவம், முருகன் பாதம் ஆகியவை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.

 

  • பழனி மலை ஆலய அமைப்பிலேயே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இந்த ஆலயமும் உள்ளது.

 

திருவிழா: 

பங்குனி உத்திரத்திருவிழா, மாத கார்த்திகை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும்,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும்

பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்

தாண்டிக்குடி- 624 216

திண்டுக்கல் மாவட்டம்.

 

போன்:    

+91- 4542- 266 378, +91- 99626 71467

 

அமைவிடம்:

திண்டுக்கல் பெரியகுளம் செல்லும் வத்தலக்குண்டிலிருந்து 45 கி.மீ., தூரத்தில் உள்ளது தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில். மலை கிராமம் என்பதால் போக்குவரத்து வசதி மிக குறைவுதான். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து தாண்டிக்குடி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும் அங்கிருந்து மலைமீதுள்ள ஆலயம் செல்ல வாடகை வாகனங்களைதான் அமர்த்த வேண்டும்.

Share this:

Write a Reply or Comment

five + 4 =