November 20 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சோற்றுத்துறை

  1. அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சோற்றுத்துறை நாதர், ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர்,

அம்மன்         :     அன்னபூரணி, தொலையாச்செல்வி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     காவிரி, சூரிய தீர்த்தம், குடமுருட்டி

புராண பெயர்    :     திருச்சோற்றுத்துறை

ஊர்             :     திருச்சோற்றுத்துறை

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை வழிபட்டு, தங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டு சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர். ஒரு முறை மழை பொய்த்துப் போனது. அதனால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருளாளரும், அவரது மனைவியும் மனம் வருந்தினர். தங்களின் இந்த நிலையை இத்தல ஈசனிடமும், அம்பாளிடமும் கூறி முறையிட்டனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் ‘அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு’ என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு அன்னமிட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.

 

கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.

இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து,  அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு.

 

  • காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.

 

  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 

  • தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்துள்ளது.

 

  • மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை. காட்சி தருகிறார்

 

  • மூலவர் ஓதனவனேஸ்வரர் ‘தொலையாச் செல்வநாதர் என்னும் திருநாமங்களுடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். ஆனால் தற்போது ‘ஓதவனேஸ்வரர்’ என்றும் அழைக்கின்றனர்.

 

  • அம்பாள் ஒப்பிலா நாயகி அன்னபூரணி என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

 

  • இக்கோயிலில் சுவாமி, அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகின்றனர். இவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் மயில்மீது சுமார் 5 அடி உயரமுடன் காட்சி அளிக்கின்றார். அதனால் இது ‘சோமாஸ்கந்த தலம்’ என்று போற்றப்படுகிறது

 

  • அருளாளன் என்னும் அந்தணனும், அவனது மனைவியும் சிவபெருமானை நோக்கி மண்டியிட்ட நிலையில் தவம் செய்யும் திருவுருவங்கள் மூலவரின் கருவறைக்கு வெளியே இடப்புறம் உள்ளது.

 

  • பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.

 

  • பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம்.

 

  • திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் நான்காவது தலம். திருவையாறு, திருப்பழனம், திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள்

 

  • சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது

 

  • அருணகிரிநாதர் தமது திருப்புகழில் ‘ஏழு திருப்பதி’ என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.

 

  • இந்த ஆலயத்திற்கு அருகில் உள்ள திருமழபாடியில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமணத்திற்கு, திருச்சோற்றுத்துறையில் இருந்துதான் உணவுகள் அனைத்தும் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

 

  • திருஞானசம்பந்தர் 1 பதிகமும், திருநாவுக்கரசர் 4 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், கொண்டு இயல்பின் வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும் சோற்றுத்துறையுள் சுக வளமே என்று போற்றி உள்ளார்.

 

  • முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

 

திருவிழா: 

சப்தஸ்தான விழா, சித்திரை விசாகம், ஏழூர் திருவிழா.

 

திறக்கும் நேரம்:

காலை 7 முதல் 12 மணி வரையும்

மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும்

 

முகவரி:  

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,

திருச்சோற்றுத்துறை – 613 202

திருவையாறு,

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 9943884377

 

அமைவிடம்:

தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது.. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

8 + 9 =