அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு
முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார்.
மூலவர் : வேதாயுத சுவாமி
உற்சவர் : முத்துக்குமாரர்
தலவிருட்சம் : கடம்ப மரம்.
தீர்த்தம் : சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம்.
ஊர் : செஞ்சேரி
மாவட்டம் : கோயம்புத்தூர்
ஸ்தல வரலாறு:
சூரபத்மன் என்ற அரக்கன் கடுமையான தவமிருந்து ஈசனிடமிருந்து பெற்ற வரத்தினால் தேவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் கொடுத்து வந்தான். இதையறிந்த ஈசன், சூரனை அடைக்கும் பொருட்டு கார்த்திகேயனைப் படைத்தார். ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனை பின்னர் கயிலைக்கு அழைத்து வந்தனர். தன் அவதார நோக்கத்தை தந்தையிடம் கேட்டுக்கொண்ட முருகன், சூரபத்மனையும் அரக்கர்களையும் அழிக்க, தேவசேனைகளுக்குத் தலைமை தாங்கிப் புறப்படத் தயாரானான். அடிவாரத்தில் வாமதேவர் தவக்குடில் உள்ளது. இங்கு வியாசர், அத்திரி, கலைக்கோட்டு முனிவர், குச்சிகன், கேரிகோசிகன், அகத்தியர் போன்றோர் தவம் புரிந்திருக்கிறார்கள். ஒருமுறை நாரதர் இக்குடிலுக்கு விஜயம் செய்தபோது, யார் தவத்தில் சிறந்தவரோ.. அவருக்கு என் வணக்கம்! என்றார். தவத்தில் சிறந்தவர் அகத்தியர். எனவே நாரதரின் வணக்கம் அவருக்கே உரியது என அனைவரும் நம்பினர். ஆனால் வியாச முனிவரோ இக்கூற்றை ஏற்க மறுத்து, அகத்தியனைவிட யாமே தவத்தில் சிறந்தவன் என இருமாப்புக் கொண்டார். அப்போது ஈசன் அங்கு தோன்றி அகத்தியரே சிறந்த தவசீலர் என உரைத்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். தவத்தை மெச்சிய ஈசன், அகத்தியரின் விருப்பப்படி, சயிலோகத் தீர்த்தம் எனும் சுனையை ஏற்படுத்தி, இங்கு நீராடுபவர்களின் பாவம் அறவே நீங்கி அருள்பெறுவர்! என ஆசி கூறினார். என்றும் வற்றாத இச்சுனை ஞானத் தீர்த்தம் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி சிவபெருமானிடம் கூறினார் பார்வதிதேவி.
‘சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து, ‘குமரா.. சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்’ என்று வழி கூறினார். சிவனின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க.. தாம் தவம் இருக்க சரியான இடம் இது என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
கோயில் சிறப்புகள்:
- திருப்புகழ் தெய்வமான செஞ்சேரிமலை வேலவன் இத்தலத்தில் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய்; இருபுறமும் தேவியர் உடனிருக்க அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
- சேவற்கொடிக்கு மாறாக, இடது மேல் திருக்கரத்தில் சேவலையே ஏந்தியிருப்பது தனித்துவமான திருக்காட்சி. அருணகிரிப் பெருமான் இதனை ‘செஞ்சேவல் செங்கை உடைய சண்முக தேவே’ என்று வியந்து போற்றுகின்றார்.
- கருவறையிலுள்ள மிதமான வெளிச்சம் காரணமாக நாம் நின்று தரிசிக்கும் இடத்திலிருந்து மூலமூர்த்தியின் திருக்கரத்திலுள்ள சேவல் துல்லியமாகத் தெரிவதில்லை. எனினும் அதே அமைப்பில் எழுந்தருளியுள்ள உற்சவ மூர்த்தியின் திருக்கரத்தினில் சேவலை மிகத் தெளிவாக, அருகாமையிலேயே தரிசிக்கலாம்
- கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்
- முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும்.
- பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் ‘எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்’ என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
- முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் செஞ்சேரிமலை.
- சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம்.
- இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம்.
- அருணகிரியார் திருப்புகழில், சுவாமியைப் பற்றி பாடியுள்ளார். சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தில் அருளும் வேலாயுதரை “மந்திர முருகன்’, என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி “மந்திரி முருகன்’ என்றாகி, “மந்திரியப்பன்’ என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது.
- மாணிக்கவாசக சுவாமிகள், மந்திர மாமலை மேயாய் போற்றி.. என இத்தல ஈசனை திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- முப்பெரும் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்ட இரண்டாயிரம் ஆண்டு பழமையான திருத்தலம்.
- சுற்றியுள்ள 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்பும் வேலாயுதசுவாமியிடம் பூப்போட்டு உத்தரவு பெற்ற பின்னரே தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவரது அருட்பார்வையினால் மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் செழித்தோங்குகிறது. மலை மீதிருந்து எத்திசையில் பார்த்தாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல அமைந்துள்ள தென்னந்தோப்புகளே அதற்குச் சாட்சி.
- ஊர் மக்கள், கறந்த பாலும், பிறந்த முடியும் இந்த முருகனுக்குத்தான். சத்ரு சம்ஹார மூர்த்தியாய் எங்களை காத்தருள்கிறார் என்று இந்த முருகனைப் புகழ்கிறார்கள்.
திருவிழா:
தமிழ்க்கடவுளான வேலாயுதசாமிக்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஈசனுக்கு உகந்த ஆரூத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் மற்றும் முருகனுக்குகந்த கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும். தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான மக்கள் கலந்து கொள்வர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்
முகவரி :
அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில்,
தென்சேரி மலை, சூலூர் வட்டம்.
கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்:
+91- 4255- 266 515, 268 515,268 415
அமைவிடம்:
கோவையில் இருந்து செல்பவர்கள் பல்லடம் சென்று அங்கிருந்து செஞ்சேரிமலைக்கு செல்ல வேண்டும். தூரம் 60 கி.மீ., திருப்பூரில் இருந்து நேரடி பஸ் உண்டு. தூரம் 20 கி.மீ.திருப்பூர் – பொள்ளாச்சி பிரதான சாலையில், செஞ்சேரி பிரிவிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.