November 16 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை

  1. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     பாலசுப்பிரமணியசுவாமி

தல விருட்சம்  :     நாவல் மரம்

ஊர்             :     கபிலர்மலை

மாவட்டம்      :     நாமக்கல்

 

ஸ்தல வரலாறு:

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். பல நாட்கள் அங்கேயே இருந்து தவமும் மேற்கொண்டார். பிறகு, மற்றொரு முருகன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார். கபில முனிவர் பல காலம் இங்கு தங்கி, கந்தனை வணங்கி வந்த காரணத்தால் இம்மலை கபிலர் மலை என்று அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் கபில தீர்த்தம் உள்ளது. இன்றும் கபில மகரிஷி தவம் செய்த இடம் தனித்துவம் பெற்றதாக விளங்குகிறது. தினமும் அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கருவை என்ற ஊரில் நிறைய காராம் பசுக்கள் இருந்தன. அதில் ஒரு காராம் பசுவுக்கு கபிலை என்று பெயர். இப்பசு பிறந்ததில் இருந்து அதன் உரிமையாளரால் நன்கு வளர்க்கப்பட்டு வந்தது. அதன் உரிமையாளர் அவ்வப்போது பசுக்களை மேய்ச்சலுக்காக வெளியில் அனுப்புவதுண்டு. ஒருசமயம் அவ்வூரில் மழை பெய்யாததால், பசுமையான புல் அனைத்தும் வாடி இருந்தன. வழக்கம்போல மற்ற பசுக்களுடன் மேய்ச்சலுக்கு வந்த கபிலைப் பசு, பசும்புல் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது. புல்லைத் தேடி அலையும்போது வழி தவறிச் சென்று, விறகிரி என்ற பினாக மலையை அடைந்தது அந்தப் பசு. பசியால் வாடி களைப்படைந்து ஓரிடத்தில் இளைப்பாறியது. அப்போது கடும்பசியால் வருந்திய புலி, கபிலையைப் பற்றியது. பிறகு கபிலையின் துயர் நிலை கண்டு அதை விடுவித்தது. இதைத் தொடர்ந்து கபிலைப் பசு அம்மலையில் மேய்ந்து, அம்மலைக்கு அடுத்த ஊரில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து உயிர்ப்பதம் அடைந்தது. கபிலைப் பசுவின் தொடர்பால் அம்மலை கபிலை மலை எனவும், அவ்வூர் கபிலக் குறிச்சி எனவும் அழைக்கப்பட்டது. இச்செய்தி கபிலை மலைக் கோவை என்ற நூலில் 104-வது பாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோயில் சிறப்புகள்:

  • நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை மேல் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாக உள்ளது.

 

  • குழந்தை வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி, ‘தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என்று போற்றப்படுகிறார்.

 

  • கடல் மட்டத்தில் இருந்து 150 அடி உயரத்தில் கபிலர்மலையின் நடுவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல 120 படிகள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

 

  • மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி, குழந்தை வடிவில் இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலுடன் அருள்பாலிக்கிறார்.

 

  • கோயிலின் மூலஸ்தானம் அமைந்துள்ள பாறைக் குகையின் துவாரம் வழியாக எப்போதும் தென்றல் காற்று வீசி, கந்தனுக்கு அருகே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தீபத்தை அசைத்துக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. இதனால் முருகப் பெருமான், ‘தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர்’ என்று போற்றப்படுகிறார்.

 

  • கோயிலில் அரசமரத்து விநாயகர் வீற்றிருக்கிறார். இடும்பன், சித்தி விநாயகர், காளஹஸ்தி ஈஸ்வரர், கமலாம்பிகை ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

 

  • கோயில் தூண்களில் நரசிம்மப் பெருமாளின் சிற்பம் உள்ளதால், சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு இக்கோயில் எடுத்துக்காட்டாக இருப்பதாக போற்றப்படுகிறது. மீன் சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்களும் காணப்படுகின்றன.

 

  • கபிலர்மலை தல வரலாறு பற்றிய குறிப்புகள் ‘கபிலர்மலை குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை’ என்ற நூலில் காணப்படுகிறது. மேலும், கபிலர்மலையில் நடைபெற்ற சுவையான செய்திகளை, பிள்ளை பெருமாள் சிறை மீட்டான் கபிராயர் என்ற கவிஞர் தனது அகப்பொருள் இலக்கியமான ‘கபிலைமலைக் கோவை’ என்ற நூலில் தெரிவிக்கிறார்.

 

  • கபிராயரின் காலம் கலியுக சகாப்தம் 4740 என்று அறியப்படுகிறது. தற்போதைய காலத்தில் (5095) இருந்து 350 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர், பாகை என்ற நகரத்தில் பிறந்துள்ளார். கபிலர்மலை குழந்தைக் குமரரை (பால சுப்பிரமணிய சுவாமி) குலதெய்வமாகக் கொண்ட இவர், ‘ஞானக் குழந்தை குமாரரை’ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, 105 செய்யுளால் ஆன ‘கபிலர்மலைக் கோவை’ என்ற நூலைப் படைத்துள்ளார். முற்றும் துறந்த முனிவர்கள், தேவர்கள், அரசர்கள் உள்ளிட்டோரும் கபிலர்மலை குழந்தைக் குமரரைப் போற்றிப் புகழ்ந்ததாக இந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

திருவிழா: 

ஐப்பசி சூரசம்ஹாரத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, விசாக நட்சத்திர தினங்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பங்குனித் திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்க

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

கபிலர்மலை,

நாமக்கல் மாவட்டம்.

 

போன்:    

+91 4268-254100, 90957 24960.

 

அமைவிடம்:

பரமத்திவேலூர் நகரத்துக்கு மேற்கே 7 கி.மீ தொலைவிலும், நாமக்கலுக்கு தென்மேற்கே 24 கி.மீ தொலைவிலும் உள்ளது கபிலர்மலை. நாமக்கல்லில் இருந்து பரமத்தி வழியாக ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 28 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. அதுபோல் பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் 8வது கி.மீ., தொலைவிலும், ப.வேலூரில் இருந்து 6வது கி.மீ., தொலைவிலும் கோவில் அமைந்துள்ளது.

Share this:

Write a Reply or Comment

twenty + nine =