November 15 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி

  1. அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்   :     பாலசுப்பிரமணியர்

உற்சவர்   :     முத்துக்குமாரர்

தீர்த்தம்    :     சரவணப்பொய்கை

ஊர்       :     சிவகிரி

மாவட்டம்  :     தென்காசி

 

ஸ்தல வரலாறு:

ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்கு முருகப் பெருமான் சிறு பாலகனாக காட்சி அருள்கிறார். தாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்று விரும்பிய அகத்திய முனிவர், இத்தலத்தில் கோயில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டினார். அதன்படி முருகப்பெருமான் இத்தலத்திலேயே கோயில் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை போரிட்டு அழித்த முருகப்பெருமான், இத்தலத்தில் பாலகனாகக் காட்சி தருவதால், ‘பாலசுப்பிரமணியர்’ என்று அழைக்கப்படுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சுற்றிலும் தண்ணீர், மலைகள் சூழ அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த தலமாக போற்றப்படுகிறது.

 

  • பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ள குன்று சக்தி மலை என்று கூறப்படுகிறது. சக்தி மலைக்கு இடதுபுறத்தில் சிவன் மலை உள்ளது. சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் நடுவே சோமாஸ்கந்தர் வடிவில் முருகப்பெருமான் இங்கு கோயில் கொண்டுள்ளார்.

 

  • அகத்திய முனிவருக்கு முருகப்பெருமான் காட்சி அருளிய தலமாக விளங்குவதால், இத்தலத்தில் உள்ள பாத மண்டபத்தில் முருகப்பெருமானின் பாதமும், அருகே சிவலிங்கமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

  • முருகப்பெருமான் சந்நிதிக்கு வலதுபுறத்தில் சுந்தரேஸ்வரர் சந்நிதியும் இடதுபுறத்தில் மீனாட்சியம்மன் சந்நிதியும் உள்ளன. கோயில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், அஷ்டபுஜ துர்கை, இடும்பன் சந்நிதிகள் உள்ளன.

 

  • பொதுவாக அனைத்து கோயில்களிலும் கருவறையை சுற்றி அமைந்துள்ள சுவரில் லிங்கோத்பவர் இருப்பார். இத்தலத்தில் லிங்கோத்பவருக்கு தனி சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அருகில் பிரம்மா, சண்டிகேஸ்வரர் எதிரெதிரே இருந்து அருள்பாலிக்கின்றனர்.

 

  • குன்றின் நடுவே காளியம்மன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் காளியம்மனுக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

 

  • உற்சவமூர்த்தியான முத்துக்குமார சுவாமி, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வீதியுலா செல்கிறார். பங்குனி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள், கந்த சஷ்டி சமயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் நாள், இவ்வுற்சவத்தின் 11-ம் நாள் ஆகிய 3 நாட்கள் மட்டுமே வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மற்ற நாட்களில் இவரை கோயிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

 

  • தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

 

  • ஏகதள விமானத்தின் கீழ் உள்ள சந்நிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், தனது ஜடாமுடியை கிரீடம் போல் சுருட்டிவைத்து காட்சி அருள்கிறார். முருகப்பெருமானின் இக்கோலம் சிறப்பானதொரு கோலமாக போற்றப்படுகிறது.

 

  • பொதுவாக அனைத்து கோயில்களிலும் கந்த சஷ்டி உற்சவம் 6 நாட்கள் நடைபெறும். திருக்கல்யாணத்துடன் சேர்த்து சில கோயில்களில் 7 நாள் உற்சவம் நடத்தப்படும். சிவகிரி தலத்தில் கந்த சஷ்டி உற்சவம் 11 நாள் விழாவாகக் கொண்டாடப்படுவது தனிச்சிறப்பு. ஆறாம் நாளில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்கிறார்.

 

  • சூரசம்ஹார நிகழ்வுக்கு மறுநாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 11-ம் நாள் நடைபெறும் மகுடாபிஷேகத்துக்கு எண்ணற்ற பக்தர்கள் வருவது வழக்கம். அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு தங்க கிரீடம் அணிவித்து கையில் செங்கோல் கொடுக்கப்படும். மகுடாபிஷேகம் நிறைவடைந்ததும் ராஜ அலங்காரத்தில் வீதியுலா காண்பார். அன்றைய தின வீதியுலா நிகழ்வுக்கு ‘பட்டினப்பிரவேசம்’ என்று பெயர்.

 

  • சமயக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாகப் போற்றப்படுவதுண்டு. குழந்தையாக இருந்தபோதே, அம்பிகையிடம் ஞானப்பால் அருந்தி அவரது அருள் பெற்றதால், திருஞானசம்பந்தர், முருகப்பெருமானின் அம்சமாகவே கருதப்பட்டு, இளைய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். பங்குனி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளில் திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் கொடுத்த வைபவம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் முருகப்பெருமானையே சம்பந்தராக பாவித்து அவருக்கு பால் அளிக்கப்படுகிறது.

 

  • உற்சவமூர்த்தியாக போற்றப்படும் முத்துக்குமார சுவாமி, பக்தர்கள் வேண்டும் வரங்களை அருள்பவராக உள்ளார். முடக்குவாதத்தால் அவதிப்படுபவர்கள் சோமாஸ்கந்த தலமாகப் போற்றப்படும் இங்கு வந்து, வணங்கினால், நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

திருவிழா: 

பங்குனியில் பிரம்மோற்ஸவம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசிமகம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

சிவகிரி- 627 757.

தென்காசி மாவட்டம்.

 

போன்:    

+91- 4636 – 251 015, 99448 70058, 99448 73484.

 

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து 100 கி.மீ தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், ராஜபாளையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், புளியங்குடியில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது சிவகிரி.

Share this:

Write a Reply or Comment

two × four =