November 14 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குரு இருந்த மலை

  1. அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி

உற்சவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி

அம்மன்         :     வள்ளி, தெய்வானை

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     ஆறுமுகசுனை

புராண பெயர்    :     குரு இருந்த மலை

ஊர்             :     மருதூர்

மாவட்டம்       :     கோயம்புத்தூர்

 

ஸ்தல வரலாறு:

முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் குறுமுனிவர் என்று அழைக்கப்படும் அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அவர் பூஜித்த அகத்திய லிங்கம் இக்கோயிலில் உள்ளது, குருந்த மரமே இங்கு தலவிருட்சமாக இருப்பதால் இம்மலையும் குருந்த மலை என்று அழைக்கப்படுகிறது. திருப்பெருந்துறையில் குருவாக வந்த சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு சிவபுராணம் பாட வைத்தார். மாணிக்கவாசகர் வரலாறு குருந்த மரத்தின் பெருமைகளை உரைப்பது தனிச்சிறப்பு. இதைத் தொடர்ந்து அடியார்கள் பலரும் இம்மலையில் குருந்த மரக்கன்றுகளை நட்டு இம்மலைக்கு பெருமை சேர்க்கின்றனர்.

கொங்கு நாட்டில் இருந்த 24 பிரிவுகளில் ஒன்று ஒடுவங்க நாடு. இது தற்போது கோயம்புத்தூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வட பகுதியில் அகத்தியமலை (நீலகிரி), கிழக்கில் மாதேஸ்வரன் மலை, தெற்கில் சஞ்சீவி மலை (சதுர்க்காட்டாஞ்சை), மேற்கில் தோகை மலை உள்ளன. இவற்றின் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது. குருந்து என்றால் குருந்த மரம், குழந்தை, குருந்தக்கல் ஆகிய பொருள்கள் உண்டு. மேலும், காட்டு நார்த்தை, காட்டு எலுமிச்சை, வச்சிரக்கல், வெண் குருத்து ஆகியனவும் குருந்து என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றன.

மலைகளில் குருந்தானது (இளமையானது) குருந்த மலை. வடிவத்தில் சிறியதாகவும், அழகாகவும் காணப்பட்டது. 150 அடி உயரம் கொண்டதாக குருந்தமலை இருந்தாலும், சுற்றியுள்ள மலைகளைப் பார்க்கும்போது இது சிறிய வடிவில் காணப்படுகிறது. இளமைத் தன்மை கொண்டு, சிறு குழந்தைகளிடம் குழந்தைபோல பழகி அவர்கள் மனதில் முருகப்பெருமான் குடி கொண்டிருப்பதைப் போல, மலைகளில் குருந்தாகிய குருந்த மலையில், குழந்தை வேலாயுத சுவாமி குடிகொண்டிருக்கிறார்.

 

கொங்கு நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் சிலர்… சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக சென்றனர். வழியில் குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், இவை என்ன மூட்டைகள்? என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் “தவிட்டு மூட்டைகள்’ என்றனர் வியாபாரிகள்.

மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர் உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் மிளகு, இலவங்கம், கிராம்பு மூட்டைகளாக மாறின. இப்படி வியாபாரிகளை சோதித்த குமரன், குருந்தமலை மீது குழந்தை வேலாயுத சுவாமியாக குடிகொண்டுள்ளார். குருந்த மலை: சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் சோலைகள் நிறைந்த அமைதியான சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 750 வருடங்களுக்கு முன்னர் உருவான கோயில். குமரனுக்கு குருந்த மரங்கள் மிகவும் உகப்பானவை. இம்மலையில் குருந்த மரங்கள் அதிகமாக இருந்ததால் குருந்தமலை என்றாயிற்று;

 

கோயில் சிறப்புகள்:

  • குருந்தமலையைச் சுற்றி பசுமையான வயல்களும், தென்னந் தோப்புகளும் அமைந்துள்ளன. மலையடிவாரத்தில் இருந்து 108 படிகள் மேலே சென்றால் மேற்கு நோக்கிய மூலஸ்தானமும், வடக்கு நோக்கிய ராஜகோபுரமும் காணப்படுகின்றன. இவை வைணவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன.

 

  • அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்து உபதேசித்ததால் குருந்தமலை என்று பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.

 

  • மலையடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரிணி, அனுமந்தசுனை என்ற இரண்டு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, குடிப்பதற்கும் மற்றொன்று, குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

 

  • அனுமந்த சுனையின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேய மூர்த்தி ஓங்கிய வலது கை, இடது கயில் தாமரை மொட்டு, கையில் கடகம், விரலில் மோதிரம் கொண்டு அருள்பாலிக்கிறார். இடையில் சதங்கை, வாலில் மணியுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தி நாளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.

 

  • குருந்தமலை அடிவாரத்தில் ராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் ராஜகம்பீர விநாயகர், சப்த மாதாக்கள், நாகர், பதினெட்டாம்படி கருப்பர், இடும்பன், கடம்பன், வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன.

 

  • ஐந்தடி உயரம் கொண்ட கம்பீர விநாயகர், வலதுகரம் ஒன்றில் தந்தம், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாலிக்கிறார். மலைப்படி ஏறும் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளன. ஒருபுறம், காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

 

  • கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி நான்கரை அடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

 

  • குருந்தமலை குழந்தை வேலவனுக்கு இருவகை அலங்காரம் செய்யப்படுகிறது. ஒன்று, ராஜ அலங்காரம், மற்றொன்று, வேட அலங்காரம்.

 

  • மூலவர் சந்நிதியில் அகத்தீஸ்வரர், ஆனந்த வல்லி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.

 

  • 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் அகத்திய முனிவர், அருந்தவன், ஆதவன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

 

  • இத்தலத்தைச் சுற்றி 1 மைல் தூரத்துக்கு வீடுகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்துவராயர் பாலயத்தார் கோயில் மானியமாக 100 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளனர்.

 

  • குருந்தமலை முருகப் பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இதைத் தொடர்ந்து பலர் கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

  • சிரவணபுரம் கௌமார மடாலயம் தவத்திரு கந்தசுவாமி சுவாமிகள் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி மீது பல பாடல் தொகுப்புகளை இயற்றியுள்ளார். குருந்தமலை ஸ்ரீ கம்பீர விநாயகப் பதிகம், குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை, குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ், குருந்தமலை திருப்புகழ், குருந்தமலை பதிற்றுப் பத்தந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம் ஆகியன குருந்தமலை புகழை உரைக்கின்றன.

 

  • ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் நடக்கிறது.

 

  • போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன .

 

திருவிழா:

தைப்பூசத் திருவிழா (11 நாள்), பங்குனி உத்திர திருவிழா, கந்த சஷ்டி சூரசம்ஹார உற்சவம் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தேர்த் திருவிழா சமயத்தில் வள்ளி திருமணம் நடைபெறும். பங்குனித் தேர் திருவிழா சமயத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மாத கிருத்திகை, அமாவாசை, சஷ்டி தினங்களில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

 

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1.00 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில்,

குருந்தமலை, மருதூர்

கோயம்புத்தூர்-641 104.

 

போன்:    

04254-274747, 98425 67644.

 

அமைவிடம்:

கோவை மாநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது காரமடை. இங்கிருந்து மேற்கே வெள்ளியங்காடு செல்லும் வழியில் உள்ளது புங்கம்பாளையம். இங்கிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது குழந்தை வேலாயுத சுவாமி கோயில்.

Share this:

Write a Reply or Comment

9 − seven =