அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : மங்களாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
புராண பெயர் : திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம்
ஊர் : கண்டியூர்,
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆகிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தான். எனவே, தானே படைப்புக் கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான், பைரவரைப் படைத்து அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, அவரது ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. எனவே, சிவபெருமான் பைரவரைப் பார்த்து, இத்தீவினை தீர நீ ஊர்தோறும் பிச்சையேற்க வேண்டும் எனக் கூற, பைரவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். கடைசியில் இத்தலத்துக்கு வந்தபோது, பிரம்மனின் தலை, கையைவிட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது. சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர். பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.
கோயில் சிறப்புகள்:
- இத்தலத்தில் உள்ள இறைவன் – பிரம்ம சிரக்கண்டீஸ்வரர், வீரட்டேசர், பிரமநாதர், ஆதிவில்வநாதர் எனவும், இறைவி – மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
- ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.
- எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை. முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.
- அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார். மயில் வாகனம் இங்கு இல்லை.
- இக்கோயிலில் இறைவன் சன்னதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என மூன்று பகுதிகளைக் கொண்டது. கருவறையில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தின் நுழைவுவாயிலில் இரு புறமும் துவாரக பாலகர்களுக்குப் பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும், தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் இருப்பது விசேஷம்.
- இங்கு மாசி மாதம் 13, 14, 15-ம் தேதிகளில் மாலையில் சூரியனின் கதிர்கள் மூலவரின் மேல் விழுகிறது. இதனால், இந்த மூன்று நாட்களில் வீரட்டேஸ்வரரை சூரியன் பூஜை செய்து வணங்குவதாகக் கூறப்படுகிறது.
- மங்களாம்பிகை சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
- துரோணர் தமக்கு மகப்பேறில்லாக் குறையைப் போக்க இங்குள்ள இறைவரைத் தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு பெற்றார்.
- சதாதப முனிவர் சிறந்த சிவபக்தர். நாள்தோறும் பல தலங்களை வணங்குவதுடன், பிரதோஷ நேரத்தில் திருக்காளத்தி சென்று காளத்தி நாதரை வழிபடுவதை நியமமாகக் கொண்டிருந்தார். முனிவர் திருக்கண்டியூர் வந்தபோது காளத்தி செல்லமுடியாமல் தடை ஏற்பட்டுவிட்டது. அதனால், மிக்க வருத்தம் அடைந்து நெருப்பில் வீழ்ந்து தன் உயிரைப் போக்கிக்கொள்ள முற்பட்டார். காளத்தி இறைவன் வில்வ மரத்தில் தானும் உமையுமாய் காட்சி வழங்கி முனிவருக்கு அருள்புரிந்தார். எனவே, இத்தலத்துக்கு ஆதி வில்வாரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் வில்வமரம்தான் தல விருட்சம்.
- சித்ரவஜன் என்றொரு கந்தர்வன் ஒரு நாள் அழகிய பூங்காவில் தனது மனைவி குணவதியுடன் மகிழ்ந்திருந்தான். அப்போது, அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவர் அக்காட்சியைக் காண சகியாது, அவர்களைச் சபித்தார். அதனால், சித்ரவஜன் அசூரனானான். குணவதி பலாச மரமானாள். அவர்கள் சாப விமோசனம் கோரினர். அகத்தியரின் சீடரான சதாதபர் முனிவரால் சாபம் நீங்கும் என்றார் தேவலர். அசுரனான சித்ரவஜனும் பலாச மரமான குணவதியும் காவிரியின் தென் கரையில் வசித்து வந்தனர். ஒரு முறை சனி பிரதோஷத்தில் திருக்காளத்தி நாதரை வழிபடச் சென்ற சதாதபர் கண்டியூர் வழியே செல்லும்போது பேய் மழை பிடித்துக் கொண்டது. அதனால், அவர் பலாச மரத்தடியில் தங்கினார். அவ்வுருவில் இருந்த குணவதி மீண்டும் பெண் வடிவம் பெற்றார். ராட்சனான சித்ரவஜனின் மீது சதாதபர் கமண்டல நீரைத் தெளித்ததும் அவர் கந்தர்வனாக மாறினான். இருவரும் சாப விமோசனம் பெற்றனர்.
- தக்கன் சிவபெருமானை அவமதித்த குற்றம் தீர இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்றான். பகீரதன் கண்டியூர் வீரட்டேசுவரை வணங்கி அருள்பெற்று கங்கையைப் பூமிக்கு கொண்டு வந்தான்.
- இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து திருநிலைகளை உடையது. இருபுறமும் கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். திருக்கோயில் மேற்கு நோக்கி காணப்படுகிறது. உள்ளே தண்டபாணி மண்டபம், வெüவால் நெத்தி மண்டபம் உள்ளது. இதில் சப்தஸ்தான கண்ணாடி பல்லக்கு வைக்கப்பட்டுள்ளது. எதிரில் பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவையும் காணப்படுகின்றன. இரண்டாவது கோபுரமான அணுக்கண் திருவாயிலின் மீது அம்மையப்பர் திருக்கயிலாலய அமர்ந்து காட்சி தர பிரம்மா, சரஸ்வதி இருவரும் வணங்கி நிற்பது போன்று சுதை வடிவம் உள்ளது.
- இரண்டாவது கோபுரத்துக்குள் நுழைவதற்கு முன் வலப்புறம் தல விருட்சமான (ஆதி வில்வராண்யம்) வில்வ மரத்தையும், அதனடியில் வீற்றிருக்கும் ராஜகணபதி அருள்பாலிக்கிறார்.
- இறைவன் சன்னதிக்கு அருகிலேயே வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு திசை நோக்கி நான்முகனின் பெரிய திருஉருவமும் அவரது வலப்பக்கத்தில் சரஸ்வதி தேவியின் திருஉருவமும் உள்ளன. நான்முகனின் நாற்கரங்களில் ஒன்றில் தாமரை மலரும். மற்றொன்றில் உருத்திராட்ச மாலையும் உள்ளது. பிரம்மா சன்னதி அருகே வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி அமைந்துள்ளது.
- பிரம்மா சன்னதி அருகே வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. முதல் பிரகாரத்தின் கீழ்புறத்தில் தெற்கு நோக்கி பைரவரும், இதர பரிகார தேவதைகளும் உள்ளனர்.
- கீழ்புறத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீசுவரர் சிற்பம் அற்புதமான கலையம்சம் கொண்டது. இதர கோயில்களில் உள்ளதுபோன்று நின்ற கோலத்தில் அல்லாமல் ரிஷபத்தின் மீது ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமானது. ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சிக் கொடுக்கும் அற்புதமான ஒன்று.
- இக்கோயில் பல்லவர் காலக் கற்றளி. கருவறையின் வடபுறம் நிருபதுங்க பல்லவனின் சாசனம் உள்ளது. இது, மேற்கு நோக்கிய சிவத்தலமாக விளங்குவதால், இதன் பிரதான கோபுரம் இரண்டாம் பிரகார மதிலின் மேற்கு திசையில் 5 நிலைகளுடன் அமைந்துள்ளது. மேலும், சோழ மன்னர்களான மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் ராசேந்திரசோழன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் உள்ளன.
- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.
- படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.
திருவிழா:
சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வைகாசியில் பதிமூன்று நாட்களுக்கு பெருவிழா நடைபெறுகின்றது. நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி
திறக்கும் நேரம்:
காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும்,
மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.
முகவரி:
அருள்மிகு பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில்
கண்டியூர், -613 202.
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்
போன்:
94435 61731.
அமைவிடம்:
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 9 கி.மீ.தூரத்தில் கண்டியூர் உள்ளது. ஊரின் நடுவே கோயில் உள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி வழித்தடப் பேருந்துகளில் ஏறி கண்டியூரில் இறங்கிக் கொள்ளலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூரில் இறங்கிப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலம் செல்லலாம்.