February 09 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காளையார்கோயில் வரலாறு

திருக்கானப்பேரூர்  எனும் காளையார்கோயில் வரலாறு

 

மூலவர்                     :               சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்

அம்மன்                   :               சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி

தல விருட்சம்       :               கொக்கு மந்தாரை

புராண பெயர்    :               திருக்கானப்பேர்

ஊர்                             :               காளையார் கோவில்

மாவட்டம்              :               சிவகங்கை

 

ஸ்தல வரலாறு :

ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். “இறைவா! உன்னைக் காண முடியவில்லையே,’ என வருந்திப் பாடினார்.

தன் நண்பரான சுந்தரர் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான், தனது காளையை அனுப்பினார். அது சுந்தரர் நின்ற இடம் வரை வந்து மீண்டும் திரும்பிச்சென்றது. அதன் கால் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லையென்றும், அவ்வழியே நடந்து வந்து தன்னைத் தரிசிக்கலாம் என அசரீரி ஒலிக்கவே, சுந்தரர் மகிழ்ச்சியுடன் அவ்வழியில் சென்றார். காளை வழிகாட்டிய தலம் என்பதால், இவ்வூர் “காளையார்கோவில்’ ஆயிற்று.

 

இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு.

அது 1801ஆம் ஆண்டு; அக்டோபர் மாதம். மே மாதத்திலிருந்து திருப்பூவனம், திருப்பாச்சேத்தி, பார்த்திபனூர், கமுதி, பிரான்மலை, சிறுவயல், காளையார்கோவில், சிவகங்கை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற போர்களின் விளைவாக ஆங்கிலேயர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இவற்றில் பல ஊர்கள் இப்போது அவர்கள் வசம்!

மற்ற ஊர்களைப் போல் இல்லாமல், மூன்று படைப் பிரிவுகளைக் கொண்டு, ஒக்கூர் சிறுவயல் வழியாக ஒரு பிரிவும், கீரனூர் சோழபுரம் வழியாக ஒரு பிரிவும், முத்தூர் வழியாக ஒரு பிரிவும் என்று தாக்கியிருந்த காளையார்கோவிலும், அக்டோபர் 1-ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இருந்தாலும், ஆங்கிலேய தளபதிகளான ஸ்பிரே மற்றும் ஆக்னீவ் ஆகியோர் உறக்க மின்றித் தவித்தனர். அவர்கள் யாரைப் பிடிக்கவேண்டுமென்று நினைத்தனரோ, அவர்கள் இன்னமும் அகப்படவில்லை. அவர் களுக்கு நெருக்கமானவர்களை யெல்லாம் பிடித்துக் கொன்றாகி விட்டது. என்ன செய்தாலும் அவர்களை யாரும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

தவித்து கொண்டிருந்த தளபதிகளுக்கு உள்ளூர்க்காரர் ஒருவரே சொன்ன செய்தி, வயிற்றில் பாலை வார்த்தது. ‘காளையார்கோவில் கோபுரத்தை அவர்கள் பார்த்துப் பார்த்து கட்டினார்கள்; அதன்மீது அவர்கள் உயிரையே வைத்திருக்கிறார்களாம்!’ அப்படியானால்?

ஆங்கிலேயர்களின் சதித் திட்டம் உருவாக நீண்டநேரம் பிடிக்கவில்லை. ‘ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளி வந்து, மருது சகோதரர்கள் சரணடையவில்லையெனில், காளையார்கோவில் கோபுரம் உடைக்கப்படும்!’ என்று அறிவித்தனர்.

பார்த்துப் பார்த்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து கட்டிய கோயிலாயிற்றே! உள்ளத்தையும் உணர்வுகளையும் சிவபெருமானிடம் அடைக்கலப்படுத்தி, அன்னை பூமிக்காகப்போரிட்ட பெருமக்களாயிற்றே! கோபுரம் உடைக்கப்பட விடுவார்களா?

அக்டோபர் மாதம் 27ஆம் நாள்; (அப்போதைய) ராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர் கோட்டை; தென்மூலைக் கொத்தளத்தில் மருது சகோதரர்களும், சின்ன மருதுவின் மகன் சிவஞானமும், பிற நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் தூக்கிலிடப்பட்டனர்.

போரின் முடிவு, வெள்ளையருக்குச் சாதகமான போதிலும், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்படுகிற நேரத்தில் (தாங்களே கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது) வேண்டுகோள் ஒன்றை வைத்தனர். என்ன தெரியுமா?

தமது உடல்களைத் திருப்பத்தூரில் புதைத் தாலும், தமது தலைகளை மட்டுமாவது காளையார்கோவில் கோபுரத்துக்கு எதிரில் புதைக்க வேண்டுமென்பதே அந்த கோரிக்கை! காளேஸ்வரரையும் சொக்கேசரையும் வணங்கிய தலைகள், மரணத்திலும் அவ்வாறே வணங்க வேண்டுமாம்!

துரத்தித் துரத்திச் சண்டையிட்ட ஆக்னீவ் மற்றும் வெல்ஷ் முதலானோர் கூட நெகிழ்ந்து போயினர். மருது பாண்டியரின் ஆசை நிறைவேற்றப்பட்டு, இப்போதும் கூட காளையார்கோவில் கோபுரத்தி லிருந்து நீளும் சாலையின் கோடியில், மருது பள்ளி படையை காணலாம்

 

ஸ்தல சிறப்புகள் :

  • சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்.

 

  • இறைவன் காளைவடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்து “யாம் இருப்பது கானப்பேரூர்” என்று கூறிய தலம்.

 

  • இப்பகுதியில் இம்மூன்று சந்நிதிகளையொட்டி வழங்கும் பழமொழி: “காளைதேட – சோமர் அழிக்க – சொக்கர் சுகிக்க” என்பதாகும்.

 

  • இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200 வது தேவாரத்தலம் ஆகும்.

 

  • பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பார்கள். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்மனுக்கு சன்னதி கிடையாது. ஆனால், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

 

  • இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர். இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது.

 

  • இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.

 

  • இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன.

 

  • இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான்.

 

  • திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல, இந்த காளையார் கோவில் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது..

 

  • இந்த ஆலயத்தின் முன்பாக இரண்டு கோபுரங்கள் உள்ளன. ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் அமைந்துள்ளது. பெரிய கோபுரத்தை முதலாம் சுந்தரபாண்டியனும், சிறிய கோபுரத்தை மருதுபாண்டியர்களும் கட்டியுள்ளனர்.

 

  • சோமேசர் சன்னதிக்கு எதிரில் உள்ள பெரியகோபுரம் மருதுபாண்டியரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப்பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம்.

 

  • இக்கோபுரத்தின் மீதேறிப் பார்த்தால் மதுரைக் கோபுரம் தெரியுமாம். இதையொட்டி, “மதுரைக் கோபுரம் தெரிய கட்டிய மருதுபாண்டி வாராண்டி” என்னும் கும்பிப்பாட்டும் இங்கு வழக்கில் உள்ளது.

 

  • இங்கு சோமேசர், சொர்ணகாளீஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னிதிகளும், சவுந்தரநாயகி, சொர்ணவல்லி, மீனாட்சி என மூன்று அம்மன் சன்னிதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன.

 

  • தைப்பூசம் அன்று சொர்ணகாளீஸ்வரருக்கும், வைகாசி விசாகம் அன்று சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரம் அன்று சொர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த் திருவிழா நடைபெறும்.

 

லிங்கங்களின் சிறப்பு :

1)சுயமாய் உண்டானது சுயம்பு லிங்கம்.

2)தேவர்களால் செய்யப்பட்டது – திவ்ய லிங்கம்.

3)தேவ, பிரம்ம ரிஷிகளாலும், யோகிகளாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம் – ஆர்ஷ லிங்கம்.

4)மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது – மானுட லிங்கம்.

திருக்கானப்பேரில்,

 

1)காளீஸ்வரர் – சுயம்புலிங்கம்

2)சேமேசலிங்கம், சகஸ்ரலிங்கம், வருணலிங்ம் – திவ்ய லிங்கம்

3)சுந்தரேஸ்வரர் – மானுட லிங்கம்

4)அகத்தியர் முதலிய ரிஷிகளும்,யோகிகளும் வழிபட்டதால் சோமேசர் – ஆர்ஷ லிங்கம்.

 

இந்த நால்வகை லிங்கங்களும் இத்தலத்தில் அமைந்துள்ளது தனிப்பெரும் சிறப்பாகும். ஆகவே மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் மூன்றிலும் சிறந்ததும், மூன்று சிவாலயங்கள் அமையப் பெற்றதுமான புண்ணிய ஸ்தலமே திருக்கானப்பேர் என்னும் காளையார் கோவில்.

 

திருவிழா:            

தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும்,

வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும்,

ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது.

11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு.

 

திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:               

அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில்,

காளையார் கோவில்- 630 551.

திருக்கானப்பேர். சிவகங்கை மாவட்டம்.

 

போன்: 

+91- 4575- 232 516,

94862 12371.

 

அமைவிடம் :

சிவகங்கையில் இருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும், தேவகோட்டையில் இருந்து மேற்கே 35 கிலோமீட்டரிலும், மதுரையில் இருந்து தென்கிழக்கே 66 கிலோமீட்டரிலும் காளையார்கோவில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

12 + 17 =