அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
மூலவர் : ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர்
அம்மன் : ஞானம்பிகை
தல விருட்சம் : ஆலமரம்( தற்போதில்லை), வில்வம்
தீர்த்தம் : காவிரி
புராண பெயர் : ஆலம்பொழில்
ஊர் : திருவாலம் பொழில்
மாவட்டம் : தஞ்சாவூர்
ஸ்தல வரலாறு:
இத்தலக் கல்வெட்டில் ஆத்மநாதேஸ்வரர் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பர் தம் திருத்தாண்டகத்தில் “தென் பரம்பைக் குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்திநெஞ்சே” என்று பாடியுள்ளார். எனவே இந்த ஊர் – பரம்பைக்குடி என்றும்; கோயில் – திருவாலம்பொழில் என்றும் வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
- இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர்.
- கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன..
- அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
- கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
- இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர்.
- இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள்.
- தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
- திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
- இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இத்தலத்தில் உள்ள வெண் பொற்றாமரைக்குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றான்.
- நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்திய தலம் இது.
- வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “மருக் காட்டு நீலம் பொழிற்குள் நிறை தடம்கட்கு ஏர் காட்டும் ஆலம்பொழில் சிவயோகப் பயனே” என்று போற்றி உள்ளார்.
திருவிழா:
ஆவணி மூலம், சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்,
திருப்பந்துருத்தி – 613 103.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 – 4365 – 284 573, 322 290
அமைவிடம்:
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.